Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட பழ.கருப்பையா கூறும் யோசனைகள்

அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட பழ.கருப்பையா கூறும் யோசனைகள்

சுரேஷ் வெங்கடாசலம்

, புதன், 16 மார்ச் 2016 (15:04 IST)
அதிமுகவில் இருந்து சமீபத்தில் வெளியேறிய பழ.கருப்பையா அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்று கூறியுள்ளார்.


 

 
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பழ.கருப்பையா, எதிரியை பழி வாங்குவது, சொந்தக் கட்சியினர் செய்த தவறுகளில் இருந்து அவர்களை விடுவிப்பது. சட்டத்தை செயலற்றதாக ஆக்குவது உள்ளிட்ட வேலைகளில் ஜெயலலிதா ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
 
எனவே ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்றும், அக்கட்சியில் மையப்படுத்தப்பட்ட ஊழல் நிலவுவதாகவும் எனவே, அதற்கு எதிராக, வலுவாக உள்ள கட்சிக்கு ஆதரவாக, அதாவது திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கப்போவதாக கூறியுள்ளார்.
 
தொடர்ந்து பேசிய பழ.கருப்பையா, அதிமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டுமானால், பெரிய கட்சியாகிய திமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
 
தேமுதிக உள்ளிட்டஎதிர்கட்சிகள் தனியாக நிற்பதால் அதிமுகவிற்கு சாதகமாக அமையும் என்றும், மாறாக இணைந்து செயல்பட்டால் அதிமுகவை நிரந்தரமாக ஆட்சியிலிருந்து விரட்டி அடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
 
அதிமுகவில் அவர் நீண்டகாலம் இருந்தவர் என்ற முறையிலும், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்றால் அவர் கூறும் யோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகின்றது.
 
மேலும், அவர் கூறுகையில் எந்த கொம்பை வைத்து அடித்தால் பழம் விழும் என்பதை அறிந்து அடிக்க வேண்டும் என்றும், பலமான கூட்டணியை அதிமுகவிற்கு எதிராக அமைப்பதுதான் அந்த பெரியத் தடியைப்போல இருக்கும் என்றும், தனித்துப் போட்டியிடுவது என்பது குட்டைத் தடியை வைத்துக் கொண்டு உயரத்தில் உள்ள பழத்தை அடிப்பதைப் போன்றது என்றும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், தான் திமுக கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்படப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
 
அதிமுகவில் இருப்பவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறினால்தான் தன்மானத்துடன் வாழமுடியும் என்று கூறியுள்ளார். அக்கட்சியில் உள்ள பெரும்பான்மையானவர்களிடம் மன்னிப்பு கடிதங்களைக் ஜெயலலிதா பெறுவதாகவும், அவ்வாறு பெறுவதில் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைவார் என்றும் கூறியுள்ளார்.
 
அத்தகையப் போக்குகள் தனக்குப் பிடிக்காததால்தான், தான் அந்த கட்சியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறினார்.
 
அதிமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்று கூறிய பழ.கருப்பையா, வெள்ள பாதிப்பு குறித்து கூறுகையில், வெள்ளத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்பு நிச்சயமாக இயற்கையால் வந்தது அல்ல என்றும், நிர்வாக தேக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு என்றும் கூறினார்.
 
அதிமுக அரசின் மெத்தனப்போக்கு காரணமாகவே வெள்ளத்தால் இத்தகைய பெரிய பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், இதனால் நடுத்தர வர்க்கத்தை இந்த அரசு பொருட்களை இழக்கச் செய்து ஏழைகளாக மாற்றி விட்டதாகவும் கூறினார்.
 
இத்தகு காரணங்களால், அதிமுகவை அகற்ற வேண்டும் என்றும் அவ்வாறு அகற்ற வேண்டும் என்றால், எதிர்கட்சிகள் கலைஞர் கருணாநிதி தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என்றும், மாறாக பிரிந்து கலைஞரை தோற்கடித்து ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்வதில் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அதிமுக காவல்துறையினரின் வாகனங்களில் பணத்தை வைத்து பாதுகாப்பாக அனுப்பும் என்றும் குற்றம் சாற்றியுள்ளார்.
 
மொத்தத்தில் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்றால் விஜயகாந்த் உள்ளிட்ட எதிர்கட்சியினர் திமுக கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil