Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூன்று எளிய வாக்கு மூலங்கள்

-சதத் ஹஸன் மாண்ட்டோ

மூன்று எளிய வாக்கு மூலங்கள்
[சதத் ஹஸன் மாண்ட்டோ பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சம்பிராலாவில் 1912ஆம் ஆண்டு பிறந்தார். பாகிஸ்தானின் லாகூரில் 1955ஆம் ஆண்டு இறந்தார். 20 ஆண்டுகளாக எழுத்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த மாண்ட்டோ 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நிறைய நாடகங்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது கதை உலகம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் வெளியே அவ்வளவாகப் பரவவில்லை என்றாலும், மிகச் சிறந்த உலகச் சிறுகதை எழுத்தாளர்களுள் இவரையும் சேர்க்கலாம்]

கதை ஆர‌ம்‌பி‌க்‌கிறது...

பம்பாயில் காங்கிரஸ் இல்லத்திற்கும், ஜின்னா ஹாலுக்கும் அருகே ஒரு சிறு நீர் கழிப்பிடம் உள்ளது. 'மூத்திரக் குழி' என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் அதன் வெளியேதான் தங்கள் வீட்டுக் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டுவதை அம்மக்கள் வழக்கமாக வைத்திருந்தனர். அந்த குப்பையிலிருந்து வரும் நாற்றம் தாங்க முடியாதது. உங்கள் மூக்கை கைக்குட்டையால் மூடாமல் அதைக் கடந்து செல்ல முடியாது.

அவன் தவிர்க்க முடியாமல் ஒரு முறை அந்த நரகக் குழிக்குள் தன் மூக்கை கைக்குட்டையால் மூடியபடியும் மூச்சு விடாமல் இருக்க முயற்சித்தபடியும் உள்ளே சென்றான். அதன் தரை ஈரமாகவும் அசுத்தமாகவும் இருந்தது. சுவர்கள் முழுதும் மனித பிறப்புறுப்புகளின் கோரச் சித்தரிப்புகளால் நிறைந்திருந்தது. ஒரு மூலையில் யாரோ கரித்துண்டால் இந்த வார்த்தையை கிறுக்கியிருந்தார்கள்:- "பாகிஸ்தானை-முஸ்லிம்களின் -எதுவென்று உங்களுக்குத் தெரியும்-அதில் திணியுங்கள்".

அவன் அருவருப்படைந்து மிக விரைவில் அங்கிருந்து வெளியேறினான். காங்கிரஸ் இல்லமும், ஜின்னா ஹாலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இந்த மூத்திரக் குழி தன் நாற்றத்தை பரந்த அளவில் பரப்பும் சுதந்திரத்துடன் தன் வாசல் பகுதியில் மக்களின் கழிவுகளையும் குப்பைகளையும் பெற்றுக் கொள்ளும் விசாலத்துடன் திகழ்ந்தது.

சில நாட்களுக்குப் பின்னர், மீண்டும் ஒரு முறை தன் இயற்கையின் அழைப்புக்கு பதிலளிக்க அவன் அங்கு செல்ல நேர்ந்தது. அவன் முகத்தை மூடிக் கொண்டு, சுவாசத்தை நுரையீரலிலேயே நிறுத்திக் கொண்டான். சென்ற முறையைவிட இப்போது தரையில் அதிக அசுத்தங்கள் கிடந்தன. மனித உற்பத்தியை சித்தரிக்கும் மேலும் சில சித்திரங்கள் சுவரில் காணப்பட்டன.

'பாகிஸ்தானை-முஸ்லிம்களின் -உங்களுக்குத் தெரியும் எதுவென்று-அதில் திணியுங்கள்' என்ற வார்த்தைகளின் கீழ் யாரோ அழுத்தமாக பென்சிலால் கிறுக்கியிருந்தார்கள்: 'அகண்ட பாரதத்தை இந்துக்களின் - உங்களுக்குத் தெரியும் எதுவென்று - அதில் திணியுங்கள்'. தன் மீது அமிலம் தெறித்த உணர்வுடன் அவன் விரைவாக வெளியேறினான்.

சிறிது காலத்திற்கு பின் மகாத்மா காந்தியை ஆளும் பிரிட்டிஷ் அரசு நிபந்தனையின்றி விடுவித்தது. திரு ஜின்னா பஞ்சாபில் தோல்வியுற்றார். காங்கிரஸ் இல்லம், ஜின்னா ஹால் இரண்டும் தோற்கவோ, விடுவிக்கப்படவோ இல்லை. இந்த பிரம்மாண்டமான கட்டிடங்களின் சற்று தொலைவில் இருந்த அந்த மூத்திரக் குழி தன் துர் நாற்றம் வீசும் பணியை தொடர்ந்து செய்தது. வெளியே இருந்த குப்பைக் குவியல் மேலும் அதிக உயரத்தை எட்டியிருந்தது.

அவன் மூன்றாவது முறை அந்த மூத்திரக் குழிக்குச் சென்றான். இயற்கையின் அழைப்பிற்கு பதிலளிப்பதற்காக இல்லை.

அவன் மூக்கை மூடியபடி, மூச்சை பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். தரையெங்கும் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. சுவரில் அதற்கு மேலும் மனித பிறப்புறுப்புகள் வரைவதற்கு இடம் இல்லை.

'பாகிஸ்தானை-முஸ்லிம்களின் - உங்களுக்குத் தெரியும் எதுவென்று-அதில் திணியுங்கள்' மற்றும் 'அகண்ட பாரதத்தை இந்துக்களின் - உங்களுக்கு தெரியும் எதுவென்று- அதில் திணியுங்கள்' என்ற வார்த்தைகள் இப்பொழுது சிறிது மங்கலாயிருந்தன.

அவன் வெளியேறிய பின் அந்த இரண்டு வாக்குமூலங்களின் கீழே ஒரு புதிய வரி தோன்றியிருந்தது : "அன்னை இந்தியாவை, இந்துக்கள் முஸ்லிம்களின் - உங்களுக்குத் தெரியும் எதுவென்று- அதில் திணியுங்கள்'.

ஒரு கணம், இந்த வார்த்தைகள் காற்றில் நடனமிடும் ஒரு மெல்லிய மணம் போல, அந்த மூத்திரக் குழியின் நாற்றத்தை அகற்றியது போல் தோன்றியது. ஆனால் ஒரே ஒரு கணத்திற்கு மட்டும்.

நன்றி: சதத் ஹஸன் மாண்ட்டோ சிறுகதைகள்

தொகுப்பு: ரவி இளங்கோவன்

வெளியீடு: ஸ்நேகா, ராயப்பேட்டை - சென்னை.

Share this Story:

Follow Webdunia tamil