Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புளியம் பூ

- சந்திரா

புளியம் பூ
, சனி, 5 ஜனவரி 2008 (14:54 IST)
பூனைக‌ள் இ‌ல்லாத ‌வீடு எ‌ன்ற ‌சிறுகதை‌த் தொகு‌ப்‌பி‌ல் இரு‌ந்து ஒரு ‌சிறுகதை உ‌ங்களு‌க்காக...

webdunia photoWD
தோப்பை விற்பதற்கான எல்லாக் கையெழுத்தும் முடிந்தது. தோப்பை வாங்கும் வட்டிக்கடை பாண்டியன், பணத்தை அப்பாவிடம் நீட்டினார். 'அவங்ககிட்டயே கொடுங்க...' என்று அப்பா, அண்ணனைக் காட்டிவிட்டு வெளியேறினார். அண்ணன் பணத்தை வாங்கிக் கொண்டு, 'நீங்க பஸ்ல வந்திருங்க...' என்று எங்களிடம் சொல்லிவிட்டுப் புதிதாக வாங்கியிருக்கும் கருமையும் நீலமும் கலந்த மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.

நானும், அம்மாவும், அக்காவும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். அம்மாவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டது. அக்கா, அம்மாவைத் திட்டிக் கொண்டே வந்தாள். 'அழுகையை நிறுத்து! உன் பையனுக்கே, சொத்து வேணாங்கிறப்ப உனக்கென்ன வந்தது... போறப்ப தூக்கிட்டா போகப்போற...' என்றாள் அக்கா. அவளுக்கென்ன தெரியும்! அப்பா எங்கள் எல்லோரையும் விட புளியந்தோப்பை அதிகமாக நேசித்தது...புளியந்தோப்பு, அப்பாவுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவு நிறைவேறி விட்டது என்று கண்ணை மூடி முழிக்கும் முன் அது வெறும் கனவு தான் என்றாகி விட்டது. வாழ்க்கையில் அனேக கனவுகள் இருக்கலாம்... முதன்முறையாக அப்பாவுக்கு புளியந்தோப்பு கனவு வாழ்க்கையானது.

அப்பாவுடன் முதன்முதலாக நான் காட்டுக்குச் சென்று, அங்கேயே தங்கிவிட்டது எனக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளது. அது நிலக்கடலை பிடுங்கும் சீசன். பஸ்ஸில் பயணம் செய்துதான் அந்தக் காட்டுக்குப் போகவேண்டும். அந்த பஸ் பயணத்திற்காகவே எனக்கு அந்தக் காடு ரொம்பப் பிடிக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி மூன்று மைல் நடந்து காட்டுக்குப் போக வேண்டும். அம்மா தலையில் கூடையைத் தூக்கி கொண்டு என்னை இடுப்பில் வைத்துக் கொண்டு, 'ஆமா நீ தான் எல்லாக் கடலைச் செடியையும் புடுங்கி ஆயப் போற... எனக்கு இருக்கிற வேலை பத்தாதுன்னு உன்னை வேற தூக்கிட்டுப் போறேன் பாரு...' என்று திட்டிக் கொண்டே வந்தது.

அந்த அதிகாலை இரவில் எங்களுக்கு முன்பேயே, அப்பா காட்டுக்குக் கொத்தாள்களைக் கூட்டிக் கொண்டு போய்விட்டார். அங்கங்கே நிலக்கடலை செடியைப் பிடுங்கி, வீடு போல சுற்றி அடுக்கி வைத்து, ஒவ்வொரு குவியலுக்கும் எதிரெதிராக இருவர் உட்கார்ந்து நடுவில் குழி தோண்டி கம்பு வைத்து கடலைச் செடியை கையில் அடங்கும் மட்டும் எடுத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். சூரியன் உதிக்காத அந்த காலை நேரத்தில் ஆளில்லாத அந்த குவியலுக்கு, அப்பாவை அழைத்துக் கொண்டு போய் கடலைச் செடியை அடித்துக் கொண்டிருந்தேன். வேலை செய்பவர்களைப் போல் முடி தெரியாமல் இருக்க நானும் தலையில் வண்டு கட்டிக் கொண்டேன். அது அப்பா சரி செய்ய... சரி செய்ய... ஒரு பக்கமாக அவிழ்ந்து கொண்டு வந்தது.

கடலை வீடு வந்து சேர ரெண்டு நாளாகும்... நீ பெரியம்மா கூட வீட்டுக்குப் போ... அம்மாவும், நானும், கடலையை காவக் காக்க இங்கேயே இருக்கோம்...' என்று அப்பா சொன்னதைக் கேட்காமல் அடம் பிடித்து நானும் இரவில் அங்கேயே தங்கி விட்டேன். வாய்க்கால் ஓரத்தில் செடியிலிருந்து ஆய்ந்த கடலையைக் குவித்து களம் செதுக்கியிருந்தார்கள். வாய்க்காலின் இருபுறமும் தென்னை மரங்கள்சாய்வாக வளர்ந்திருந்தது. அப்பா, கம்புகள் வைத்து குட்டியாய் ஒரு குடிசை போட்டிருந்தார். குடிசைக்குள் வைக்கோல் சாக்கு விரிக்கப்பட்டிருந்தது. அந்தக் குடிசை, நான் தட்டாங்குச்சியில் செய்யும் பொம்மை வீடு போல இருந்தது. காட்டை இருள் மூடியதும் எனக்கு பயம் வந்தது. வெள்ளாவி மணக்கும் அப்பாவின் போர்வைக்குள் பூனைக்குட்டியாய் ஒளிந்து கொண்டேன். ராத்திரியில் சங்கீதமாய் குரல் எழுப்பிக் கொண்டு அந்தச் சமவெளியெங்கும் காற்று போன திசையெல்லாம் நானும் சேர்ந்து போனேன் காற்றோடு தூக்கக்கனவில். அந்த இருள் இரவில் அப்பாவைப் போல காடு என்னையும் மறக்கடித்தது.


மறுபடியும் அப்பா என்னை அந்தக் காட்டுக்கு கூட்டிக் கொண்டு போகவே இல்லை. பின்பு தான் தெரிந்தது... அது தற்காலிகமான 'ஒத்திக்காடு' என்பது. ஒரு காட்டுக் கனவு சிதைந்து போயிருந்த வேளையில், அப்பா திரும்பவும் குளத்துக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு காட்டை வாங்கினார். 'இந்தக் காடு உனக்குத்
தாண்டா...' என்று அப்பா சொன்னதும், 'பொட்டப்புள்ளைக்கு என்னைக்கின்னாலும் நகை, நட்டு தான் சொந்தம்... காடு, வீடெல்லாம் ஆம்பளப் பிள்ளைக்குத்தானே சேரும்...' என்ற பக்கத்து வீட்டு நல்லம்மா பாட்டியை முறைத்தார் அப்பா.

அப்பா வாங்குகிற காடுகளுக்குப் பக்கத்தில் அருவி, குளம், வாய்க்கால் இப்படி எனக்கு சந்தோசம் தருகின்ற விசயங்களாகவே இருந்தன. புதுக்காடு வாங்கியதிலிருந்து அம்மாவுக்கும், அப்பாவுக்குமிடையே மனவருத்தம். 'மணல் காட்டை வாங்காம... இப்படி இறுகிப்போன செவளைக் காட்டைக் வாங்கினால் வெள்ளாமை விளங்குமா? என்ற அம்மாவின் வருத்தம், அப்பாவுக்கும் இருக்கத்தான் செய்தது.

பருத்தி விதைச்சா பணம் அதிகமா செலவாகும். ஒரு பூச்சி... புழு இல்லாம பாத்துக்கணும். இப்ப பூச்சி மருந்து விக்கிற வெலையில அது நடக்கிற காரியமா? எள்ளு விதைக்கலாம்னா... அது நொச்சுப் புடிச்ச வேலை. அவசரப்பட்டு இந்தக் காட்டை வாங்கிட்டோமோ! என்று அப்பா குழம்பிப் போயிருக்கும் வேளையில் காடு காவல் காக்கும் நொண்டி மாயாண்டித்தாத்தா வீட்டுக்கு வந்தார்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அன்றைக்கு அதை அவரிடமே கேட்டேன். ஏன் தாத்தா நீங்க நல்லா நடக்கும் போதே எல்லோரும் உங்களை நொண்டி மாயாண்டின்னு கூப்பிடுறாங்க? இந்த மூளிப்பய புள்ளைக்கு வேற வேலையே இல்ல... என்று செல்லமாகக் கடிந்து கொண்டே சொல்லத் துவங்கினார். எங்க அப்பன் எம்புட்டு அடிச்சு சித்ரவதை பண்ணியும் நான் பள்ளிக்கூடம் பக்கம் போகலே... கால்ல விலங்கு மாட்டி பள்ளிக்கூடத்தில போட்டுட்டு வந்திடுவாரு... நான் கால் விலங்கை இழுத்துட்டு போறதப் பார்த்த பயலுகளெல்லாம், 'நொண்டி மாயாண்டி'ன்னு அன்னைக்கிருந்து கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க... அதுவே எனக்கு பேராப்போச்சு...' என்று நீட்டி முழங்கினார்.

தாத்தாவுக்குக் காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் பள்ளிக்கூடத்தில் அடைந்து கிடப்பது பிடிக்கவில்லை. அவருக்கு விதவிதமான பறவைகளை வேட்டையாடித் திரிவதுதான் ஆனந்தமாய் இருந்திருக்கிறது. அதற்கு மேல் எதுவும் பண்ண முடியாமல், 'உன் பொழப்பு அம்புட்டுத்தாண்டா...' என்று சொல்லி தாத்தாவின் அப்பாவும், அவரை தன்னோடு காவல் காக்க அழைத்துக் கொண்டு போய்விட்டாராம்.

'அப்ப இருந்து சோளக்காட்டுக்குள்ளேயும், கம்பங்காட்டுக்குள்ளேயும் பரண் மேல உக்காந்து இஷ்டத்துக்கு வேட்டையாடிக்கிட்டிருக்கேன்... அதுவும், பறவை பயிர் மேல உக்காந்ததும் அடிக்க மாட்டேன். அது இரை மேல கவனமா இருக்கிற சமயமா பார்த்து குறி தவறாம ஒரே போடா போட்டிடுவேன்...' என்று தன் வேட்டையாடும் சாகசத்தை அளந்து கொண்டிருந்தார். 'மனசுக்குப் புடிச்ச, வேட்டைக்கு வேட்டையுமாச்சு... பொழப்புக்கு, காடு காக்கிற வேலையுமாச்சுன்னுதான் இந்த வேலைய விருப்பமா செய்யுறேன்... எப்படி என் சாமர்த்தியம்...' என்றார்.

என்னிடம் பேசிக் கொண்டிருந்த தாத்தா, 'என்னடா தங்கம், புதுக்காடு வாங்கியிருக்க போல... உன் காட்டை நான் காவக் காக்குறேன்டா...' அப்பா பக்கம் திரும்பிக் கேட்டார். 'அட போப்பா... காட்ல இன்னும் என்ன விதைக்கிறதுன்னே தெரியல... அதுக்குள்ள காவக்காக்குறதப் பத்தி பேசிக்கிட்டு... எள்ளு வெதைச்சா தொல்லைன்னு பேச்சி சொல்றா... பருத்தி நட்டா, அவ்வளவு பணம் செலவு பண்ண முடியாது. இந்தக் காட்டை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியல...' அப்பா அலுத்துக் கொண்டார்.

பொண்டாட்டியும், புருஷனும் இப்படி ஆளுக்கொரு யோசனையாப் பண்ணினா... எப்படி விவசாயம் பாக்க முடியும்? உன் காட்டுக்கு கீழ்க்காட்டுக்காரனப் பாத்தியா... மாங்கா மரம் நட்டு ரெண்டு வருசந்தான் ஆச்சு.. இப்ப எப்படி வளந்து நிக்குது... உன் காட்டுக்கு பக்கத்திலேயே குளம் இருக்கு... தண்ணிக்கு கவலையில்லை... பேசாம புளியங்கண்டை நட்டுப் போடு... நாலஞ்சு வருசத்திலே, அது உனக்குச் சோறு போடும்...' என்றார் தாத்தா.

'அதெப்படி... புளியங்கன்னு வளர பத்து வருசமாகுங்குறாங்களே...' அப்பா பேசி முடிக்குமுன் மாயாண்டித் தாத்தா கோபமானார். 'எந்த லூசுப்பய சொன்னான்... இப்பதான் ஒட்டு மா, ஒட்டு புளியங்கான்னு நாலஞ்சு வருசத்தில பலன் தர்ற மாதிரி, தேனி கூட்டுறவு சந்தையிலே விக்கிறாங்கல்ல... அதை வாங்கி வந்து நடு...' தாத்தாவின் பேச்சு, அப்பாவுக்குள் புளியந்தோப்புக் கனவை மீண்டும் ஏற்படுத்தி விட்டது.

அப்பா அந்த விதைப்பு காலத்தில் கொஞ்சம் புளியம் விதைகளும், புளியங்கன்னும் கொண்டு வந்தார். அம்மாவுக்கு அதில் சிறிதும் விருப்பமில்லை. அவர்களின் நீண்ட நாளைய உழைப்பில் வாங்கிய இந்தக்காட்டில் புளியங்கன்னு வைத்துவிட்டால் விவசாயம் சரிவர செய்ய முடியாமல் கஷ்டப்படுவோம் என்று அம்மா மறுத்தது. அதுவும் சின்னஞ்சிறு செடிகளும், இன்னும் முளைக்காத புளியவிதைகளும் மரமாகும் என்ற நம்பிக்கையில்லை அம்மாவுக்கு.

அம்மாவின் உதவியை எதிர்பாராமல், அப்பா பிடிவாதமாக அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்று காட்டில் நட்டுமுடித்தார். நடுவதற்கு முன் மரம் நட்ட அனுபவமுள்ளவர்களிடம், எவ்வளவு ஆழத்தில் குழி தோண்ட வேண்டும், எப்படி செடிக்கு மண் அணைக்க வேண்டும், எத்தனை நாளைக்கு ஒரு தரம் தண்ணீர் விட வேண்டும் என்பதைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு புளியங்கன்றையும் பச்சக் குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல் பார்த்துக் கொண்டார். ஒரு கன்னு வாடினாலும் மனசு பொறுக்காது அப்பாவுக்கு. வெயில் ஏறுவதற்கு முன் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அதிகாலை நான்கு மணியிலிருந்து புளியங்கன்னுக்கு குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்ற ஆரம்பித்து விடுவார்.

கோடை காலத்தில் குளத்தில் தண்ணீர் வற்றி பூமி பிளந்து கிடக்கும். அந்த சமயங்களில் கீழே இரண்டு மைல் தூரம் தள்ளியிருக்கும் தோட்டத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டும். 'இப்படி மேல இருக்கிற காட்டுக்காரங்கெல்லாம், எங்க தோட்டத்தில வந்து தண்ணி எடுத்துட்டுப் போனா! யாருய்யா மோட்டாருக்கு கரண்ட் பில் கட்டுறது...' என்று தோட்டத்துக்காரர் கத்தினாலும் என்ன செய்வது... வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். தண்ணீர் இல்லையென்றால் செடி வாடிவிடுமே...

அண்டா போன்ற பானையைத் தலையில் வைத்துக் கொண்டு, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அப்பா தண்ணீர் எடுத்து வருவதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும். அப்பாவின் உழைப்பில் புளியங்கன்னுகள் எல்லாம் மரமாகிக் கொண்டிருந்தன. சில நாட்களில் அப்பா திடீரென்று காணாமல் போய்விடுவார். மதியம் இரண்டு மணிக்கு பசி மயக்கத்தில் திரும்பி வருவார். காலையிலிருந்து சாப்பிடாம எங்க போனிங்க? என்று அம்மா கேட்டால் சும்மா டீ சாப்பிடத்தான் கடைப்பக்கம் போனேன்... 'புளியங்கன்னு சும்மா தளதளன்னு வளந்துருக்கு... தண்ணி ஊத்துறத மட்டும் விட்டுராதண்ணேன்னு...' நம்ம சிவனாண்டி சொன்னான்... அதான், 'நேத்து தண்ணி ஊத்தியிருந்தாலும் இன்னைக்கும் தண்ணி ஊத்தணும்ன்னு தோனுச்சு... அப்படியே காட்டுக்கு ஓடிட்டேன்...' என்பார்.

கரு கருவென்று அடர்த்தியாக இருந்த அப்பாவின் தலைமுடி செம்மண் குளத்து நீர் பட்டு செம்பழுப்பு நிறமாகி உதிரத்தொடங்கியது. கன்னு வச்சு அஞ்சு வருசம் முடிஞ்சு போச்சு. கன்னிமார் சாமிக்கு நேந்துகிட்ட மாதிரி, சொந்தக்காரங்க நாலு பேரைக் கூட்டிட்டு, சேவல் அடிச்சு பொங்க வச்சிரலாம் என்று அப்பா, அம்மாவிடம் சொன்னதைக் கேட்டவுடனெ நான் குஷியாகிவிட்டேன். ஒரு வெள்ளிக்கிழமை அப்பா எங்களை பள்ளிக்கூடத்திற்கு லீவு போட்டுவிட்டு வரச்சொன்னார். எனக்கு லீவு லெட்டர் தப்பும் தவறுமாகத்தான் எழுதவரும். ஒரு தப்பு இருந்தாலும் வாத்தியார் முழங்கால் போட வைத்து விடுவார். அக்காவிடம் போய் எழுதச் சொன்னேன். அவள், 'வேலை இருக்கிறது...' என்று விரட்டி விட்டாள். அண்ணனிடம் போனால்... அவன், 'நீ பாட்டியோட சுருக்குப் பையில் சேர்த்து வச்சிருக்கிற காசையெல்லாம்
கொடுத்தாதான் எழுதி தருவேன்...' என்று சொல்லிவிட்டான். அவனுக்கு எப்பொழுதும் காசில் தான் குறி.

மந்தையம்மன் கோயில் திருவிழாவில் கல்வளையல், பாசி, பலூன், ராட்டினம் போன்ற என்னுடைய சின்னச்சின்ன திருவிழாசந்தோசங்களுக்காகச் சேர்த்து வைத்ததை வேறு வழியில்லாமல் அவனிடம் கொடுத்தேன். காடு, தோப்பாகி இருந்தது. அடுத்த வருசம் புளியமரம் பூ எடுத்து காய்த்து விடும் என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். புளியமரத்தின் ஊடே பருத்திச் செடி வைத்திருந்தார்கள். இனிப்பாக இருக்கும் பருத்திப் பிஞ்சைப் பிடுங்கப் போய் பருத்திக் கிளையை ஒடித்து விட்டேன். யாருக்கும் தெரியாமல் ஒடிந்த கிளையை பக்கத்து கிளைமேல் படர விட்டுவிட்டேன். கொஞ்சம் புளியங் கொழுந்தை கிள்ளி முகர்ந்து பார்த்தேன். புளிப்பு வாசனை வந்தது.

பொங்கல் வைத்து முடித்த பின், உச்சி மலைமேல் இருக்கும் கன்னிமார் சாமிக்கு படையல் வைக்க அப்பா புறப்பட்டார். அவரோடு சேர்ந்து நானும் புறப்பட்டேன். மலைக்குப் போகும் வழியில், நொண்டி மாயாண்டி தாத்தாவும் எங்களோடு சேர்ந்து கொண்டார். ஒரு பெரிய மலைப்பாறையில் நின்று கொண்டு தூரத்தில் கைகாட்டி, 'என்ன தெரியுது..? என்றார் தாத்தா. நானும், 'காடு தான் தெரியுது...' என்றென். 'நல்லாப்பாரு...' என்று தலையில் ஒரு கொட்டு வைத்தார். வானத்தில் தூரமாய் பறக்கும் பறவைகள் கரும்புள்ளியாய் தெரிவதைப் போல் எங்கள் ஊர் தெரிந்தது. ஆனால், அல்லாக் கோயில் மட்டும் அடையாளம் காணும் அளவில் தெளிவாகத் தெரிந்தது. அல்லாக் கோயிலை எவ்வளவு உயரத்தில் இருந்து பார்த்தாலும் கூட தெரியும் போல... என்று நினைத்துக் கொண்டேன். அதைப்போல், அல்லாக் கோயிலில் நின்று கொண்டு மலையில் இருக்கும் கன்னிமார் சாமி கோயிலையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

எனக்கு எப்போதும் கன்னிமார் சாமிமேல் பொறாமையும், விருப்பமும் ஒரு சேர இருந்தது. அது நான் போக நினைக்கின்ற உயரத்தில் எனக்குப் பிடிச்ச மலையருவியோட மடியில் பன்னீர் பூக்களின் வெண்மையை உடுத்திக் கொண்டு அமர்ந்திருந்தது தான் காரணம். மலையருவியின் ஹோ... வென்ற சத்தம் பயத்தை ஏற்படுத்தினாலும் அந்த இடத்தில் கன்னிமார் சாமியின் தனிமையைப் போக்குவதாக இருந்தது. படையல் வைத்து, பத்தி, சூடம் ஏற்றி இந்த வருசம் மாதிரியே எல்லா வருசமும் மழை கொடு தாயி... என்று தாத்தாவும், அப்பாவும் வேண்டிக் கொண்டனர்.


தோப்பில் எல்லோரும் சாமி கும்பிட்டுவிட்டுப் பொங்கல் சாப்பிட்ட பின்பு அக்காவின் திருமணப் பேச்சை எடுத்தார்கள். பாண்டித்துரை பெரியப்பா தான் பேச்சை ஆரம்பித்தார். 'ஏம்ப்பா தங்கம்... பெரிய பொண்ணு பன்னெண்டாவது முடிச்சி ரெண்டு வருசமாச்சுல்ல, கல்யாணம் காச்சி நடத்த வேணாமா..! என்றார். அப்பா பதிலுக்கு, 'இல்லண்ணே... பையனை காலேஜில சேத்தாச்சு. இந்த வருசம் நம்ம ஐஸ்கூல்லேயே டீச்சர் படிப்பு வரப்போகுதாம்... பேசாம அந்தப் பிள்ளைய டீச்சருக்குப் படிக்க வைக்கலாம்ன்னு பார்க்குறேன்...' என்றதும், 'அடப்போப்பா...பொம்பளைப் பிள்ளையைப் படிக்க வச்சு அதுக்கு ஏத்தாப்பில மாப்பிள்ளை பாக்க அலையவா முடியும்... பேசாம, பேச்சியம்மா அண்ண மகனுக்கே உன் பெரிய பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிடு...' என்று நல்லம்மா பாட்டி சொன்னவுடனே அம்மாவுக்கு சந்தோசமாகி விட்டது. சொந்தக்காரர்கள் எல்லாம் கூடிப் பேசி அன்று அக்காவின் திருமணத்தை முடிவெடுத்து விட்டார்கள்.

புளியமரம் இன்னும் நெடு உயரம் வளர்ந்தது. அதோடு சேர்த்து அக்காவின் கல்யாணத்திற்கு வட்டிக்கடை பாண்டியனிடம் வாங்கிய கடனும் வளர்ந்தது. புளியமரம் பூவெடுத்து காய்க்கத் தயரான போது அண்ணன் படிப்பை முடித்து வேலைக்கு காத்திருந்தான். படிச்சு முடிச்சவுடனே அரசாங்க வேலைக்குப் போகலாம் என்று கனவு கண்டவனுக்கு, உடனே வேலை கிடைக்கவில்லை என்றவுடன் அலுப்பு ஏற்பட்டது. அப்பா, அண்ணன் வேலை பார்த்து கடனை அடைப்பான் என்று நம்பிக் கொண்டிருந்தார். அவன் சுகமாக வாழ ஆசைப்பட்டான். 'அரசாங்க வேலை கிடைச்சா போறேன்... அதை விட்டுட்டு, டவுனுக்குப் போய் ஆயிரத்துக்கும், ரெண்டாயிரத்துக்கும் தனியார் கம்பெனியில் அல்லாட முடியாது...' என்றான். மொத்தத்தில் அவனுக்கு வேலை தேட பொறுமையில்லை.

'வேலை ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது... பைனான்ஸ் போடப் போறேன் பணம் குடு...' என்று அப்பாவை தொல்லை படுத்தஆரம்பித்தான் அண்ணன். 'ஆமாண்டா... சொலவம் சொன்ன மாதிரி, தாயி தவிட்டுக்கு குத்தையில... பிள்ள இஞ்சி பணியாரம் கேட்டானாம்... நானே, பாண்டியன்கிட்ட வாங்கின கடனை எப்படி அடைக்கிறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன்... நீ வேலை பார்த்து கடனை அடைப்பேன்னு பார்த்தால், கொடுத்து வச்சவன் கணக்கா பணம் கேக்குறியேடா... இந்தக் கொடுமையை எங்கே போய்ச்சொல்ல...' என்று புலம்பினார்.

'எதுக்கு? பணமில்லை... பணமில்லைங்குற... தோப்பை விற்க வேண்டியது தான...' அந்த வார்த்தைய அவன் முடிக்கும் முன்னே, 'அடப்பாவி... கொலைகாரா... நான் உசிரக் கொடுத்து வளத்து வச்சிருக்கிற தோப்பை விக்கச் சொல்லுறியே, உன்னால் ஒரு கையளவு நிலம் வாங்க முடியுமாடா...' அப்பா ஆவேசத்துடன் அவனை அடிக்க ஓடினார்.

அன்றிலிருந்து யாரும் வீட்டில் நிம்மதியாக இல்லை. வீட்டில் ஒரே சண்டையும், சச்சரவுமாக இருந்தது. அப்பா இரவில் தூங்காமல், வாசல்படியிலேயே உடார்ந்திருந்தார். திரும்ப வர முடியாத தூரத்திற்கு அவரின் கனவுகள் தொலைந்து போயின. அண்ணனை அடித்து விடலாம்... கடன் கொடுத்த பாண்டியனை அடிக்க முடியுமா? கடன்காரர்களிடம் தணிந்துதானே போகவேண்டும். பாண்டியன், விடிந்தும் விடியாமல் இருக்கும் போதே கடனைக் கேட்டு திண்ணையில் உட்கார்ந்து விடுவான்.

அப்பாவுக்கும், மகனுக்கும் தோப்பை விற்பதில் தகராறுன்னு தெரிஞ்சவுடனே, பணத்தை கேட்டு பாண்டியன் நெருக்கடி பண்ணினான். தோப்பை வாங்குவதில் அவனுக்கு வெறியே வந்துவிட்டது. தளதளன்னு தேக்கு மரத்தைப் போல இருக்கிற தோப்பைப் பார்த்து தான் கடனே கொடுத்தான். அது கைக்கு எட்டின தூரத்தில் இருக்கு என்றால் சும்மா விடுவானா! நேரங்காலம் தெரியாமல் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். இப்படி எல்லாரும் பணத்தை திருப்பி கொடுக்காமல் வச்சிருந்தால் நான் பிச்சை எடுக்க வேண்டியதுதான் என்றவனின், கையிலும், கழுத்திலும் மஞ்சள் கிழங்கு போன்று தங்கச்சங்கிலி மின்னியது.

'உடனே புளியமரம் எல்லாம் காய்ச்சு பணம் கொட்ட போகுதாக்கும்... அது நல்லா காய்க்க நலைந்து வருசமாகும்... அது வரைக்கும் கடன் சும்மா இருக்குமா... குட்டி போடாது..! அப்புறம் தோப்பை வித்தாலும் கடன்தான் மிச்சமிருக்கும்... இப்ப வித்தால் கடனையும் கட்டிரலாம்... நானும், பாண்டியன் மாதிரி வட்டிக்கு கொடுத்து பணத்தை பெருக்குவேன்... அப்புறம், இது மாதிரி எத்தனை தோப்பு வேணுன்னாலும் வாங்கலாம்...' என்று அண்ணன் வீட்டிலேயே உட்கார்ந்து முணுக்.. முணுக்கென்று பேசிக் கொண்டே இருந்தான்.

மத்தளம் மாதிரி இரண்டு பக்க இடியையும் தாங்க முடியாத அப்பா, தோப்பை பாண்டியனுக்கே விற்க சம்மதித்தார். தோப்பும் விற்று, அண்ணன் கைக்கு பணமும் வந்தாயிற்று. இருண்ட புளியங்காட்டில் மின்மினிகள் அலறியது, கதறியழ முடியாத அப்பாவிற்கு வடிகாலாய் இருந்திருக்க வேண்டும். அப்பாவை வெகுநேரமாக வீட்டில் காணவில்லை. கடைத் தெருவிலும் இல்லை. நிலா வீட்டு வாசலுக்கு வந்த நேரத்தில் அப்பா, அமைதியாக வந்து உட்கார்ந்தார். 'எங்கப்பா போயிருந்த..?' என்ற கேள்விக்கு பதிலில்லை அவரிடம். அப்பாவின் சுவாசம் முழுவதும் புளியம் பூ வாசம்.



Share this Story:

Follow Webdunia tamil