Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தந்தையை ‘போற்றும்’ கதைகள்!

- மு. பெருமாள்

தந்தையை ‘போற்றும்’ கதைகள்!
, சனி, 14 ஜூன் 2008 (15:50 IST)
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பது ஒளவையார் வாக்கு.

இவ்வுலகில் தெய்வத்தை விடவும் உயர்ந்தவர்கள் பெற்றோர். அதில் தாய்க்கு அடுத்தப்படியாக நாம் வணங்க வேண்டியவர் நம் தந்தை என்கிறார் ஒளவையார்.

ஆனால், பொதுவாகவே தாய்க்கு கொடுக்கும் மதிப்பும், காட்டும் அன்பு, மரியாதையும் பெரும்பாலானோர் தனது தந்தைக்கு கொடுப்பதில்லை. காரணம், குழந்தைகள் மீது தந்தை காட்டும் அளவுக்கு அதிகமான கண்டிப்பும், கட்டுப்பாடுகளும் தான்.

அதற்காக, குழந்தைகள் மீது தந்தைக்கு அன்பு இல்லை என்று அர்த்தம் அல்ல; கோபத்தை மட்டுமே வெளிப்படையாக காட்டும் தந்தைமார்கள், அன்பை மட்டும் மனதுக்குள்ளேயே போட்டு பூட்டிகொள்கின்றனர்.

ஆனால், அம்மாக்கள் அப்படியல்லவே; குழந்தைகளிடம் தங்களது அன்பை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால், குழந்தை பருவத்தினருக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை என்பதால், ஆரம்பத்திலிருந்தே தந்தையிடமிருந்து சற்று விலகியே நிற்கின்றனர். இதுவே, தம் மீது தந்தைக் கொண்டிருக்கும் அன்பு வாலிபப் பருவத்தில் தெரியவந்தாலும் கூட, தந்தையிடம் ஒட்ட முடியாமல் செய்து விடுகிறது.

அதிலும் குறிப்பாக, தந்தை தம் மீது கொண்டிருக்கும் அன்பை பல இளைய தலைமுறையினர் கடைசி வரை தெரிந்துக் கொள்ளாமலேயே போவதுதான் சோகம்.

இன்றைய நவீன யுகத்தில் தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உறவு, மிகவும் கசப்புணர்வாகவே இருந்து வருகிறது. இதை விளக்குவதற்காகவே பல (நகைச்சுவையான) குட்டிக்கதைகளும் உண்டு.

சிறுவன் ராமு ஒரு நாள் தன் தாயுடன் கடை வீதிக்கும் சென்றான். அவனுக்கு நிறைய சாக்லேட் வாங்கி கொடுத்தாள் அம்மா. சாக்லேட்டை சுவைத்தவாறே ராமு தனது அம்மாவுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது, சாக்லேட் ஒன்று கைத்தவறி ரோட்டோர சாக்கடையில் விழுந்தது.

உடனே, அந்த சாக்லேட்டை எடுக்க குனிந்தான் ராமு. அப்போது ஓடிச்சென்று அவனை தடுத்தாள் அம்மா.

'அந்த சாக்லேட்தான் வேணும்' என்று என்று ராமு அடம்பிடிக்க, "சாக்கடையில் விழுந்த சாக்லேட்டை எடுக்கக்கூடாது; நான் வேற சாக்லேட் வாங்கித் தாரேன்" என்று சமாதானப்படுத்தி ராமுவை அழைத்துச் சென்றாள் அம்மா. சாக்கடையில் விழுந்த அந்த சாக்கலேட்டை வெறித்தவாறே சென்றான் ராமு.

மற்றொரு நாள், வழக்கம் போல் அம்மாவுடன் கடைக்கு சென்றான் ராமு. அம்மா வாங்கி கொடுத்த சாக்லேட்டுகளை சுவைத்தபடி வீடு திரும்பிக்கொண்டிருந்தான்.

அப்போது, குடிபோதையில் தெருவோர சாக்கடையில் விழுந்துக்கிடந்தார் ராமுவின் அப்பா சோமு. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராமுவின் அம்மா, பதற்றத்துடன் ஓடிச்சென்று கணவரை தூக்க முயல, ராமு "ஓ" என்று அழ ஆரம்பித்தான்.

அம்மா புரியாமல் அவனை பார்க்க, "ஐயையோ அம்மா, அப்பா சாக்கடையில் விழுந்துட்டாரு, எனக்கு இந்த அப்பா வேண்டாம்; வேற அப்பாதான் வேண்டும்" என்று ராமு அழுது அடம் பிடிக்க, அப்படியே சிலையாகி நின்று விட்டாள் அம்மா.

அதிர்ச்சியில் போதையே தெளிந்துப்போன அப்பாவும், அதன்பிறகு குடிப்பழக்கத்தையே விட்டுவிட்டார் என்பது வேறு விஷயம்.

இப்படித்தான் இருக்கிறது அப்பாவுக்கும், மகனுக்கும் இடையேயான உறவு. அறியாமை காரணமாக சிறுவயதிலேயே பெரும்பாலானோருக்கு அப்பா மீது ஏதோ ஒரு இனம் புரியாத வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. அதன் விளைவு என்னாகும் தெரியுமா?

மைனாவும் நைனாவும்!

மைனாவு‌ம், நைனாவு‌ம்.....

சிறுவன் ராமு ஒருநாள் ஒரு மைனாவை பிடித்து வந்தான். அதை சீராட்டி, பாராட்டி வளர்த்தான். தூங்கும்போது கூட அதை தன்னருகே வைத்துக்கொண்டான். மைனா மீதான அவனது பாசத்தை கண்டு அம்மாவே ஆச்சரியப்பட்டுப் போனாள்.

ஒருநாள் ராமு பள்ளி சென்றிருந்த வேளையில், மைனா திடீரென இறந்துவிட்டது. அம்மாவுக்கு ரொம்ப சங்கடமாகிவிட்டது. பள்ளி விட்டு ராமு வந்ததும், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவான; அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்தாள்.

மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பினான் ராமு. வழக்கம்போல், புத்தகப் பையை தூக்கி மூலையில் எறிந்துவிட்டு நண்பர்களுடன் விளையாட ஓடினான். அப்போது, "டேய், ராமு. உன் மைனா செத்துப் போச்சு' என்று அம்மா உரக்கக் கத்த, "அட, போனா போவுது. கவலைப்படாதேம்மா" என்றபடி ஓடிவிட்டான் ராமு.

அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். மைனா செத்துவிட்டது என்று சொல்லியும், கொஞ்சம் கூட வருத்தப்படாமல் போகிறானே என்று நினைத்த அவள், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல் போனானே, அதுவரைக்கும் நல்லது என்று நினைத்தப்படி தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் கழித்து, விளையாட்டு முடிந்து வீடு திரும்பிய ராமு நேராக மைனா கூண்டுக்கு போனான். அங்கே மைனா இல்லாதது கண்டு அதிர்ச்சியுடன் அம்மாவிடம் கேட்டான். அம்மா, விவரத்தை சொல்ல, "ஓ" என்று கதறி அழ ஆரம்பித்தான்.

அம்மா எவ்வளவோ சொல்லியும் சமாதானம் அடையாத ராமு, தேம்பித் தேம்பி அழ, அம்மாவுக்கு வந்தது கோபம். ராமுவின் முதுகில் ரெண்டு மொத்து மொத்தினாள்.

"படவா, ராஸ்கல்... பள்ளிக்கூடம் விட்டு வந்ததுமே மைனா செத்துப்போச்சுன்னு சொன்னேன். சரி போனா போவட்டும்னு சொல்லிட்டு ஒடிப்போய்ட்டே, இப்ப வந்து மைனாவ கேட்டு அழுதா என்னடா அர்த்தம்!" என்று அம்மா அதட்ட,

தேம்பியபடியே கேட்டான் ராமு.

"ஏம்மா, நீ மைனா செத்துப்போச்சுன்னா சொன்ன?.. எனக்கு நைனா செத்துப்போச்சுன்னு கேட்டுச்சு, அதுதான் சரி போனா போவட்டும் சொல்லிட்டுப் போனேன்" என்றபடி அவன் அழுகையை தொடர,

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த அப்பா, இதை கேட்டு அப்படியே மூர்ச்சியாகி மயங்கி விழுந்துவிட்டார்.

தந்தை மீது எந்த அளவுக்கு குழந்தைகள் பற்றில்லாமல் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதற்காக சொல்லப்படுகிற குட்டிக்கதை தான் இது. தங்களது குழந்தைகள் மீது தாங்கள் மிகுந்த அன்பு வைத்திருக்கிறோம், அக்கறை காட்டுகிறோம் என்பதை அடிக்கடி அப்பாக்கள் உணர்த்துவதுதான் இதற்கு ஒரே வழி.

ஆனால் பெரும்பாலான தந்தைகளுக்கு இதற்கு நேரமும் கிடைப்பதில்ல; பொறுமையும் இருப்பதில்லை.

சில தந்தைகள் தங்களது குழந்தைகள் மீதான அன்பை மனதுக்குள் பூட்டிவைத்துக்கொண்டு, வெறுப்பை மட்டுமே எப்போதும் வெளிகாட்டிக்கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் குழந்தைகள் ஏதாவது சந்தேகம் கேட்டால்கூட, அவர்களை கடுப்படிக்கிற மாதிரி பதில் சொல்வார்கள்.

பெரியவர்களுக்கு முடி நரைப்பது ஏன்?

பெரியவர்களுக்கு முடி நரைப்பது ஏன்?

ஒரு நாள் அப்பாவிடம் வந்த ராமு, இப்படி கேட்டான். "பெரியவங்களுக்கு எல்லாம் முடி நரைக்கிறதே, ஏம்பா?"

"ஒன்ன மாதிரி உருப்படாத பிள்ளைகளை பெத்தா, அப்படித்தான் முடி நரைக்கும்" எரிச்சலில் சொன்னார் அப்பா.

"ஓஹோ, அதனால்தான் தாத்தாவுக்கு அவ்ளோ முடியும் நரைச்சுப்போச்சா" என்று கூறியபடி ஆதங்கத்துடன் அவன் நடையை கட்ட, நொந்து போனார் அப்பா.

இப்படி அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாக்கள் நிறைய வீடுகளில் உண்டு. சில சமயம் அப்பாக்கள் மீதான வெறுப்பை சரியான தருணம் பார்த்து உறவினர்களிடம் போட்டுக்கொடுக்கும் மகன்களும் உண்டு.

ஒருமுறை, வீட்டுக்கு வந்த தனது அலுவலக நண்பரிடம் வீட்டில் உள்ள தனது அதிகாரம் பற்றி 'கைப்புள்ள' வடிவேலு ரேஞ்சுக்கு 'பில்ட் அப்' செய்து பேசிக்கொண்டிருந்தார் அப்பா.

"பொண்டாட்டி, புள்ளைங்கள எல்லாம் எப்பவுமே நம்ம கட்டுப்பாட்டுல் வெச்சிருக்கணும். நானெல்லாம் சொன்னா, என் பொண்டாட்டி நில்லுன்னா நிப்பா, உட்காருன்னா உட்காருவா. இல்லேன்னா தூக்கிப்போட்டு நாலு சவட்டி சவட்டிப் புடுவேன் ஆமா..." என்றபடி பீலா விட்டுக் கொண்டிருந்தார்.

இதை கவனித்துக்கொண்டிருந்த ராமு, விருட்டென அப்பாவிடம் வந்தான். 'அப்பா, அம்மா கூப்பிடுறாங்க" என்றான் சத்தமாக.

'ஏண்டா...?" என்றார் அப்பா அதட்டலாக.

"அம்மா, கொல்லைப்புறத்துல சேலை, துணிமணியெல்லாம் ஊற வைச்சிருக்காங்களாம். அதை துவைச்சிப் போட சொன்னாங்க... " என்று சொல்லிவிட்டு 'சட்'டென வெளியேற, அப்பா முகத்தில் ஈயாடவில்லை.

அப்பா, குழந்தைகளுக்கு இடையேயான உறவுமுறை பற்றி இதுபோன்ற நிறைய குட்டிக்கதைகள் சொல்லப்படுகின்றன. இவை எல்லாமே, அப்பா மீது மகனுக்கு சிறுவயதிலேயே தோன்றும் ஒரு வித மன வேறுபாட்டை உணர்த்துவதாகவே உள்ளன.

இவற்றை ஆரம்பத்திலேயே களைய தவறுவதன் விளைவு தான், இன்றைய காலக்கட்டத்தில் பெருகி வரும் முதியோர் இல்லங்கள்.

பெரும்பாலான அப்பாக்கள், நிஜத்தில் 'தவமாய் தவமிருந்து' படத்தில் சித்தரிக்கப்படும் ராஜ்கிரணை போலத்தான் மகன்களுக்காக தங்களது ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மகன்கள் இதை சினிமாவில் பார்த்துதான் தெரிந்துக் கொள்கிறோம்.

உண்மையை சொல்லைப்போனால், 'அம்மா' அமைதியே உருவான தெய்வம் என்றால், 'அப்பா' கொஞ்சம் கோபமும், கண்டிப்பும் கலந்த தெய்வம். தெய்வங்கள் எப்போதுமே தங்களது குழந்தைகளுக்கு நல்லதே செய்யும்; நல்லதே நினைக்கும்.

இந்த உண்மையை நாம் உணர்ந்து, தந்தையர் தினத்தில் மட்டுமல்லாமல் தினந்தோறும் தந்தையை போற்றுவோம், தந்தையை வணங்குவோம்.

வரும் காலத்தில் முதியோர் இல்லங்கள் இல்லாத ஓர் அன்பான சமுதாயத்தை படைப்போம்!


Share this Story:

Follow Webdunia tamil