Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் இயக்குநர் S.எழில் ; ‘துள்ளாத மனம் துள்ளும்’ படத்தின் 25வது வருட விழாவை கொண்டாட திட்டம்!

S Ezhil

J.Durai

, வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:24 IST)
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் S.எழில். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். 


 
கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்குராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது.

10 வருடங்கள் கழித்து தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் #தேசிங்குராஜா2 படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எழில்.  அத்தோடு, இயக்குநர் எஸ்.எழில், திரையுலகில் இந்த வருடம் தனது 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார்.

அவரது இயக்கத்தில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படமும் வெளியாகி வரும் ஜன-29 ஆம் தேதியில் 25 வது வருடங்களை தொட இருக்கிறது. 

இதை தொடர்ந்து தனது 25 வருட பயணத்தை கொண்டாடும் விதமாக துள்ளத மனம் துள்ளும் படத்தின் 25 வருட கொண்டாட்டத்தையும் #தேசிங்குராஜா2 படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டையும் ஜன-29ஆம் தேதி மாலை 6மணிக்கு சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுயில்  விழாவாக நடத்த இதன் தயாரிப்பாளர் இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் பி.ரவிசந்திரன் திட்டமிட்டுள்ளார். 

இதுகுறித்த தகவல்களை பகிர்ந்துகொண்ட இயக்குநர் எஸ்.எழில்…

ALSO READ: இன்று முதல் தூர்தர்ஷனில் மீண்டும் ‘ஒளியும் ஒலியும்’: புதிய பொலிவுடன் தயார்..!
 
“வரும் ஜன-29யுடன் ‘துள்ளாத மனம் துள்ளும்’ படம் மட்டுமட்டுமல்ல, நானும் திரையுலகில் நுழைந்து 25 வருடம் ஆகிறது.  அன்றைய தினம் இந்த கொண்டாட்டத்துடன் #தேசிங்குராஜா2 பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட இருக்கிறோம்.

அந்த நிகழ்வில் இதுவரை நான் பணியாற்றிய படங்களின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள் அனைவரையும் அழைக்க இருக்கின்றோம்.

இன்னும் வெளியாகாமல் இருக்கும் எனது இரண்டு படங்களையும் சேர்த்து #தேசிங்குராஜா2 எனது 15வது படம். வேறு மொழிக்கு செல்லும் எண்ணம் இதுவரை இல்லை. ஆரம்பத்தில் தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது.. அது ஒர்க் அவுட் ஆகவில்லை.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கிளைமாக்ஸ் எப்போதுமே எனக்கு ஆச்சரியம் தருகிறது. பல திரையரங்குகளில் இந்த கிளைமாக்ஸ் காட்சிக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

எனது இரண்டாவது படமான பெண்ணின் மனதை தொட்டு படத்தின் கதை விவாதத்திற்காக ஏற்காடு சென்றிருந்தபோது சேலத்தில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் 85 வது நாள் காட்சியை பார்க்க சென்றிருந்தோம்.

அப்போதும் கூட ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்ததை அதிர்ச்சியாக பார்த்தேன். சார்லி சாப்ளின் நடித்த சிட்டி லைட்ஸ் படத்திலிருந்து தான் எனக்கு துள்ளாத மனமும் துள்ளும் படத்தை உருவாக்குவதற்கான ஒரு பொறி கிடைத்தது.

 
முதலில் வடிவேலுவை வைத்து கமர்சியல் அம்சங்கள் இல்லாமல் உருவாக்கத்தான் திட்டமிட்டு இருந்தோம். அந்த கதை கேட்டு வடிவேலு ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு இரண்டு மூன்று தயாரிப்பாளர்களிடம் கூட என்னை அனுப்பினார்.

ஆனால் எதுவும் கைகூடவில்லை. அதன் பிறகு விஜய் நடித்து ஹிட்டானது சந்தோஷம்.

தீபாவளி படத்திற்குப் பிறகு எனக்கு ஒரு இடைவெளி விழுந்தது. அதன்பிறகு வந்தபோது சினிமாவே மாறி இருந்தது. குறிப்பாக 2004க்கு பிறகு சினிமா டிஜிட்டலுக்கு மாறியது. பல புதிய இயக்குனர்களின் வருகை அதிகரித்தது. ஜெயம் ரவியே எனது படத்திற்கு சம்மதம் தெரிவித்த சமயத்தில் அவர் மூன்று படங்களில் நடிக்கும் அளவிற்கு பிஸியாக இருந்தார்.

ஆனால் நல்ல படங்கள் வந்தால் ஜனங்கள் அதை கொண்டாட தயாராக இருந்தார்கள்.

அந்த சமயத்தில் மனம் கொத்தி பறவை படத்தை காமெடியாக உருவாக்கியிருந்தேன். அந்த படம் எல்லோருக்கும் பிடித்து விட அதை தொடர்ந்து அனைவருமே காமெடி படங்களை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி உருவானது தான் தேசிங்குராஜா. ஒரு கதையை உருவாக்க எப்போதும் ஆறு மாதம் நேரம் எடுத்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் யாரையும் நான் தேடி போவதில்லை. அந்த மாதிரி தான் சிவகார்த்திகேயனையும் நான் மீண்டும் தேடி செல்லவில்லை. காரணம் இந்த ஹீரோவுக்குத் தான் என நினைத்து கதை எழுதுவது இல்லை. எழுதி முடித்தபின் அதற்கு யார் பொருத்தமோ அந்த ஹீரோவை தான்  தேடி போகிறேன்.

தேசிங்குராஜா படத்திற்கும் இந்த இரண்டாம் பாகத்திற்கும் ஓரளவு கதையில் சில சாயல்கள் ஒன்றாக இருந்தாலும் இதன் திரைக்கதை முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். முதல் பாகத்தில் நடித்த சூரி இப்போது ஹீரோவாகி விட்டதால் அவரை அழைப்பது சாத்தியப்படாது.

இந்த படத்தில் ஜனா, புகழ், ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கின்றது. கதாநாயகிகளாக, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நடிக்கிறார்கள்.

அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படத்திற்கு பிறகு இசை அமைப்பாளர் வித்யாசாகருடன் இதில் இணைகிறேன். பல சாதனைகளை கடந்தவர்.
படபிடிப்பு நடந்து வருகிறது. சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது.


 
சினிமாவில் இப்போது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. அதற்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும். அதே சமயம் சிறிய பட்ஜெட் படங்களில் பெரிய மாற்றங்களை செய்ய முடியாது. பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே அது சாத்தியம். சமீபத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, “என்ன ஆச்சு உங்களுக்கு ? எதற்காக இப்படி ட்ரெண்ட் மாறி வித்தியாசமாக பாடல்களை கேட்டு வாங்கிகொள்கிறீகள் ..” என கேட்டார்.

வித்தியாசமான பாடல்கள் எனது படங்களில் இருந்தாலும், என்னை பொருத்த வரை மெலோடி பாடல்களை எப்போது கொடுத்தாலும்  ரசிகர்கள் கேட்கத் தயாராக தான் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் வருவதை விட சுயாதீன இசையமைப்பாளர்கள் தான் மெலடி பாடல்களை அதிகம் கொடுக்கிறார்கள். அதை இன்றைய இளைஞர்கள் ரசித்து கேட்கிறார்கள்.

எனது இயக்கத்தில் விஷ்ணு விஷாலின் ‘ஜகஜால கில்லாடி’, ஜிவி பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என இரண்டு படங்களும் அடுத்தடுத்து வரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் தூர்தர்ஷனில் மீண்டும் ‘ஒளியும் ஒலியும்’: புதிய பொலிவுடன் தயார்..!