Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பந்தை என்ன செய்கிறார்கள் இங்கிலாந்து பவுலர்கள்? ஆஸி. கேப்டன் சந்தேகம்!

பந்தை என்ன செய்கிறார்கள் இங்கிலாந்து பவுலர்கள்? ஆஸி. கேப்டன் சந்தேகம்!
, வியாழன், 13 ஜூன் 2013 (15:30 IST)
FILE
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பந்துகள் பழசாகாது இருக்கும்போதே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வது சந்தேகத்தை கிளப்புகிறது என்று தற்போதைய ஆஸ்ட்ரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஐயம் எழுப்பியுள்ளார்.

சனிக்கிழமையன்று ஆஸ்ட்ரேலியாவை இங்கிலாந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அப்போது ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவார்ட் பிராட் பந்துகளை ரிவர்ஸ் ஸ்விங் செய்தனர்.

இரு முனைகளிலும் வேறு வேறு பந்து பயன்படுத்தப்படும்போது ஒருநாள் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பது ஏறக்குறைய இல்லாத வஸ்துதான். ரிவர்ஸ் செய்ய முடியாது. ஆனாலும் இங்கிலாந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வது எப்படி? அதே மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் பந்துகளை ரிவர்ஸ் செய்ய முடியாதபோது இவர்கள் மட்டும் எப்படி செய்கிறார்கள் என்று பெய்லி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே ஆஸ்ட்ரேலியாவின் பயங்கர சொப்பனமாக முடிந்த 2005 ஆஷஸ் தொடரில் ரிவர்ஸ் ஸ்விங்தான் ஆஸ்ட்ரேலியாவை அழித்தது. அந்த அச்சத்திலிருந்தே ஆஸ்ட்ரேலியா இன்னும் விடுபடவில்லை. இந்த நிலையில் புதிய பந்திலும் ரிவர்ஸ் ஸ்விங்கா என்று வாயைப் பிளந்துள்ளார் ஆஸ்ட்ரேலிய தற்போதைய கேப்டன் ஜார்ஜ் பெய்லி.

ரிவர்ஸ் ஸ்விங் என்பது யாதெனின், பந்தின் ஒரு பகுதி நல்ல பளபளப்புடனும் மற்றொரு பகுதி வறண்டு பளபளப்பு போயும் இருக்கும்போது அவுட் ஸ்விங்கர் கிரிப்பில் வீசினால் பந்து காற்றில் சற்றே வெளியே சென்று பிட்ச் ஆன பிறகு உள்ளே வரும். பந்துகளை வேண்டுமென்றே சேதம் செய்தால்தான் இது முடியும் என்பது முன்னாள் இங்கிலாந்து நிபுணர்களின் கருத்து. ஆனால் 2005ஆம் ஆண்டு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அந்தக் கலையைக் கற்றுக் கொண்டவுடன் வாயை கப்சிப் என்று மூடிக் கொண்டது இங்கிலாந்து.

பாகிஸ்தான் இதே உத்தியைக் கொண்டு கலக்கியபோது அவர்கள் மீது சந்தேகங்களை அள்ளி வீசியது இங்கிலாந்து ஊடகங்கள். ஒரு போட்டி இந்த சர்ச்சையினால் கைவிடப்பட்டதும் நினைவில் இருக்கலாம். இன்சமாம் உல் ஹக் அப்போது பாகிஸ்தான் கேப்டனாவார்.

2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில்...

webdunia
FILE
ஜேம்ஸ் ஆண்டர்சன், மற்றும் ஸ்டூவர்ட் பிராட் பந்தை சேதம் செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. ஆனால் புகார் அளிக்கப்படவில்லை. யாரும் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், "இங்கிலாந்தை விட வல்லமை உடைய பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் இதே பிட்சில் செய்ய முடியாத ரிவர்ஸ் ஸ்விங்கை இங்கிலாந்து பவுலர்கள் செய்கிறார்கள் என்றால் அதனை நிச்சயம் கண்காணிக்கவேண்டும்" என்று அவர் கூறியுள்ளர்.

இதன் பின்னணியில் இங்கிலாந்தின் வரலாறு ஒன்று உண்டு. இங்கிலாந்து வீரர்களில் ஓவர்களுக்கு இடையே பந்தைக் கையாளும்போது குளூக்கோஸ் இனிப்பு தின்ற வாயில் ஊறிய எச்சிலைக் கொண்டு பந்துகளை ஒரு முனையில் பளபளப்பு ஏற்றினர். அப்போது மார்கஸ் டிரெஸ்கோதிக் மீது சந்தேகம் எழுந்தது. ஏனெனில் அவர்தான் பந்துக்கு ஷைனிங் ஏற்றுவார்.

ஒரு சமயத்தில் ஆட்டம் நடைபெறும்போது எல்லைக்கோட்டருகே 12வது வீரர் ஒருவர் டிரெஸ்கோதிக்கிற்கு ஏகப்பட இனிப்புகளை வழங்கினார் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் டெரிக் பிரிங்கிளே கூறியுள்ளார்.

இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக அனைவருக்கும் உள்ளதுதான்! மற்றவர்கள் தவறு செய்தால் பெரிய கிரிக்கெட்டின் மானம் போய்விட்டதாக அங்கலாய்க்கும் இங்கிலாந்து ஊடகங்கள், முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து செயற்கையாக பந்துகளின் நிலையை மாற்றுவது குறித்து வாயைத் திறக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.

தற்போது ஆஸ்ட்ரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி எழுப்பியிருக்கும் இந்த புதிய சந்தேகம் ஆண்டர்சன், பிராட் அண்ட் கோ மீது புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்னவோ உண்மைதான்!

Share this Story:

Follow Webdunia tamil