Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயில்!

ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயில்!
, ஞாயிறு, 7 செப்டம்பர் 2008 (18:05 IST)
webdunia photoWD
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் காவிரி நதியின் கரையில் உள்ள ஒரு சமாதி- கோயிலில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதத்தில் வரும் புஷ்ய பகுல பஞ்சமி திதியன்று இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, உலகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் கர்நாடக இசை மேதைகள் திரண்டு ஒரே நேரத்தில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடுகின்றனர்.

தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றாகத் திகழும் கர்நாடக இசைப் பாரம்பரியத்தின் அறிவிக்கப்படாத ஒரு குரு பீடமாகத் திகழும் அந்த இடம்தான், தான் வணங்கிய ஸ்ரீ இராம்பிரானை நினைத்து கர்நாடக இசையின் அனைத்து இராகங்களிலும் பல்லாயிரம் பாடல்களைப் பாடிய ஸ்ரீ தியாகராஜரின் சமாதி - கோயிலாகும்.

காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்ற ஐந்து நதிகள் பாயும் புண்ணியத் தலத்தில், ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் என்றழைக்கப்படும் ஐயாரப்பரின் நேரான பார்வையில், எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் பறவைகளின் ஒலிகளுக்கிடையே, மென்மையாய் நம் மேனியை தழுவிச் செல்லும் தென்றல் வீசும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ தியாக பிரம்மம் என்றழைக்கப்படும் ஸ்ரீ தியாகராஜரின் திருக்கோயில் அமைந்துள்ளது.

webdunia
webdunia photoWD
திருவாரூரில் 1767ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 6ஆம் நாள் பிறந்தவர் தியாகராஜர். மிகச் சிறிய வயதிலேயே கர்நாடக இசை கற்க அனுப்பி வைக்கப்பட்ட தியாகராஜர், வேகமாக இசையைக் கற்று பாடத் துவங்கினார். கர்நாடக இராகங்களில் புலமை பெற்றாலும், அவருடைய பாடல்கள் அவர் உள்ளத்தை பிறவியிலேயே குடிகொண்டிருந்த ஸ்ரீ இராம பிரானின் பெருமையை பாடும் பக்திப் பாடல்களாகவே இருந்தன.

ஸ்ரீ இராமனின் சிறிய சிலையை வணங்கி எப்பொதும் பக்தியுடன் அவர் பெருமையை பாடி வந்த தியாகராஜரின் பெருமை அறிந்த தஞ்சை அரசர் அவரை அவைப் பாடகராக்க பரிசுகளுடன் அழைப்பு அனுப்பி வைத்தபோது அதை நிராகரித்துவிட்டார். தனது புலமை இராம பிரானின் புகழ்பாடத்தானே தவிர வேறு பெருமைக்கு அல்ல என்று கூறி மறுத்துவிட்டார். இதனால் கோபமுற்ற அவரது சகோதரர், தியாகராஜர் வணங்கிவந்த இராம பிரானின் சிலையை ஆற்றில் எறிந்துவிட, அதனால் சோகமுற்ற தியாகராஜர், ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று ஸ்ரீ இராம பிரானைத் தொழுது பாடினார். இப்படி ஒரு புனித யாத்திரை மேற்கொண்டு திருத்தலங்களைச் சுற்றி வந்த தியாகராஜர், ஐந்து நதிகள் பாயும் இந்தப் புன்னிய தலத்தில் இறுதியாக வந்துசேர்ந்தார்.

webdunia
webdunia photoWD
இங்கு காவிரி நதியில் நீராட சென்ற அவருக்கு கோதண்ட இராமர் சிலை ஒன்று கிடைத்தது. அதனை அந்ந்திக்கரையில் தான் அமைத்த சிறு குடிலிற்கு கொண்டுவந்த பூஜை செய்து வழிபட்டார். கர்நாடக இசையில் உள்ள பல்வேறு இராகங்களில் 24,000 கீர்த்தனைகள் பாடி ஸ்ரீ இராமனை வழிபட்டு வந்தார்.

இவர் பாடிய ஒவ்வொரு பாடலும் கர்நாடக இசையின் உச்சமாக கருதப்படுகிறது. சென்னை சபாக்களில் எப்படிப்பட்ட கர்நாடக இசை மேதையாயினும் அவர்கள் தியாகராஜரின் கீர்த்தனைகளை எப்படிப் பாடுகிறார்கள் என்பதே அதிகபட்ச ரசனைக்குரியாத உள்ளது.

பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் என்று அழைக்கப்படும் பாடல்களைத்தான் இவர் பிறந்த திதியில் (நாளில்) இருந்து 5 நாட்கள் திருவையாறு தியாகராஜர் திருத்தலத்தில் குமிழும் இசை வேந்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே குரலில் பாடி அவருக்கு இராக அஞ்சலி செலுத்துகின்றனர். நாகஸ்வரம், தவில், மிருதங்கம், வயலின், கடம் என்று கர்நாடக இசையின் பக்க வாத்தியக் கலைஞர்களின் இசைப்புடன் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை கர்நாடக இசை விற்பன்னர்கள் பாடும் காட்சி கருத்தைக் கொள்ளை கொள்வதாகும்.

ஸ்ரீ தியாகராஜர் தனது 80வது வயதில் உயிரை நீத்தபின், அவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் ஸ்ரீ இராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ இராமரின் தெய்வீக சன்னதியில் தியாகராஜரின் செப்புச் சிலையும் வைக்கப்பட்டு பூசை செய்யப்படுகிறது.

webdunia
webdunia photoWD
சன்னதிக்கு வெளிச்சுற்றில் தியாகராஜர் தினமும் தொழுத ஸ்ரீ இராமரின் சிலை (சீதை, இலட்சுமனருடன்) உள்ளது. வெளிச் சுற்றின் தென்மேற்கு மூலையில் உள்ள யோக ஆஞ்சநேயர் விக்கிரத்திற்கு அருகில் அமர்ந்துதான் பல கீர்த்தனைகளை தியாகராஜர் பாடியுள்ளார்.

இக்கோயிலின் சுவர்களில் தியாகராஜர் பாடிய கீர்த்தனைகள் சிலவற்றை கற்களில் பதித்து வைத்துள்ளனர்.

ஒரு உன்னத சூழ்நிலையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலிற்கு எப்போது சென்றாலும் ஒரு தெய்வீக அனுபவத்தைப் பெறலாம்.

எப்படிச் செல்வது:

இரயில் மார்க்கமாக: சென்னையிலிருந்து தஞ்சைக்கு இரயிலில் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக அரை மணி நேரத்தில் திருவையாற்றை அடையலாம்.

விமானம் : அருகிலுள்ள திருச்சி விமான நிலையத்திலிருந்து ஒன்றரை மணி நேர சாலைப் பயணம் செய்து திருவையாற்றை அடையலாம்.
பேருந்து : சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் தஞ்சை மாநகருக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தஞ்சையிலிருந்து திருவையாற்றிற்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil