Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்.. இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள் - வைகோ அறிக்கை

உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்.. இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள் - வைகோ அறிக்கை
, வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (10:34 IST)
காவிரி விவகாரம் தொடர்பாக யாரும் தீக்குளிக்க வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் நடைபயணத்தை தொடங்கியபோது, அவருடன் நடைப்பயணம் சென்று கொண்டிருந்த மதிமுக தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்து பலியானார்.
 
அந்த அதிர்ச்சி செய்தியே இன்னும் மதிமுகவினர் மனதில் வருத்தத்தை வரவழைத்து கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு மதிமுக தொண்டர் இன்று தீக்குளித்துள்ளார். விருதுநகரை சேர்ந்த மதிமுக தொண்டர் சரவண சுரேஷ் என்பவர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் உறவினர் ஆவார். 50 வயதான இவர் இவர் இன்று விருதுநகரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திடீரென தீக்குளித்தார்.
 
இந்நிலையில் இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ “சரவண சுரேஷின் திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன். அவனது மூத்த மகன் ஜெயசூர்யா மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். மகள் ஜெயரேணுகா விருதுநகரில் எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.
 
கழக நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் வந்து எனது உறவினர் என்று காட்டிக்கொள்ளாமலும், முன்னிலைப்படுத்திக் கொள்ளாமலும் கட்சி நலனையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தான். கடந்த சில நாள்களாக நான் நியூட்ரினோ நடைப்பயணம் மேற்கொண்டபோதும், அங்கும் வந்தான்.
 
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து நேற்று நான் ஆற்றிய உரையை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மிகவும் மனம் உடைந்து கவலையாகவே இருந்திருக்கிறான். ஆசிரியையாகப் பணியாற்றும் அவனது துணைவியார் அமுதா, “ஏன் கவலையாகவே இருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “மாமா பேச்சைக் கேட்டு மனசே சரியில்லை” என்று சொல்லி உள்ளான்.
 
இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து நான் நடக்கப்போகிறேன் என்று கூறி வெளியே சென்று, சூலக்கரை அருகே உடல் எங்கும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டான். உடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில், என் மருமகனை தற்பொழுது மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிறார்கள். உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போல எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது. யாருக்கு நான் ஆறுதல் கூற முடியும்?
 
நேற்று இரவு தி.மு.க செயல் தலைவர் சகோதரர் ஸ்டாலின் பங்கேற்ற கடலூர் பொதுக்கூட்டத்தில், “இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தேன்.
 
இன்று என் குடும்பத்துப் பிள்ளையே காவிரிக்காக தீக்குளித்தான் எனும்போது, என்னை நான் தேற்றிக்கொண்டாலும், சரவண சுரேஷின் பெற்றோருக்கும், என் துணைவியாருக்கும் உறவினர்களுக்கும் எப்படி தேறுதல் கூற முடியும்? என் பொதுவாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் அலைபேசியில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது. நொறுங்கிப்போன இதயத்தோடு யாரும் தீக்குளிக்காதீர்கள் என்று மீண்டும் கரம்கூப்பி வேண்டுகிறேன்’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது