Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனுமதி பெற்று பிளக்ஸ் பேனர் வைக்கப்படுகிறதா.? காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி.!!

Madurai Court

Senthil Velan

, சனி, 17 பிப்ரவரி 2024 (11:50 IST)
உரிய அனுமதி பெற்று பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பி உள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, இந்த விவகாரத்தில், காவல்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
மதுரை பேரையூரை சேர்ந்த வாசுமதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  நான் தமிழ்நாடு அரசின் முறையான  அனுமதியோடு கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதம் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பேரையூர் சூலப்புரம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இ- சேவை மையம் நடத்தி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில்  சிலர் எனது இ-சேவை மையத்தின் முன்பு கட்டிடத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் போர்டு வைத்தனர். இதனையடுத்து நாங்கள் பிளக்ஸ் போர்டை சிறிது நகற்றி மாற்றம் செய்ததற்காக தேவையற்ற பிரச்சனையை எழுப்பி என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் டி.கல்லுப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
இது குறித்து  காவல்துறை விசாரணை செய்தனர். இதனையடுத்து மீண்டும் இ- சேவை மையத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் போர்டை மாற்றி வைத்தனர். இதுகுறித்து மீண்டும் எனது குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய போது, எனது மாமியார் மற்றும் மாமனாரை கடுமையாக தாக்கி இழிவான வார்த்தைகளால் திட்டினர்.  ஏற்கனவே உயர்நீதிமன்றம் அனுமதியற்ற பிளக்ஸ் போர்டுகளை வைக்கக்கூடாது என உத்தரவிட்டு உள்ளது. 
 
இந்நிலையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் பயன்படுத்தும் இ-சேவை மையத்தை மறைத்து அனுமதியின்றி சட்டவிரோதமாக குறிப்பிட்ட சாதி சமூகத்தினர்  வைத்துள்ள பிளக்ஸ் போர்டை அகற்ற வேண்டும், கொலைமிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
 
இந்த மனு நீதிபதி சக்தி சுகுமார குரூப் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக பிளக்ஸ் பேனர் உள்ளதாகவும் அதற்குரிய உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 
மேலும்  காவல்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதி, இந்த விவாகரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் கட்சியின் பெயரை திடீரென மாற்றும் நடிகர் விஜய்.. என்ன காரணம்?