Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகையர் திலகம்: திரைவிமர்சனம்

நடிகையர் திலகம்: திரைவிமர்சனம்
, வெள்ளி, 11 மே 2018 (17:09 IST)
தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் சுமார் 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து காலத்தால் அழியாத காவிய படங்கள் ஏராளமானவற்றை கொடுத்த நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் தான் இந்த படத்தின் கதை
 
அப்பா இல்லாமல் அம்மாவின் பாதுகாப்பிலும் பின்னர் பெரியப்பாவின் துணையிலும் வளரும் சாவித்திரிக்கு சின்ன வயதிலேயே நடிப்பின் மீது அவ்வளவு ஆசை. 14 வயதிலேயே நடிகையாகும் எண்ணத்தில் சென்னைக்கு வரும் சாவித்திரிக்கு முதலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் ஓரிரண்டு வருடங்கள் கழித்து அவருடைய வீட்டிற்கே வாய்ப்பு தேடி வருகிறது. அடுத்தடுத்த வெற்றிப்படங்களால் நடிகையர் திலகமாக மாறும் சாவித்திரி ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஜெமினி கணேசனை காதலிக்கின்றார். அதன்பின்னர் வாழ்க்கையில் ஏற்படும் வெற்றி தோல்விகள், ஈகோவினால் ஏற்படும் இழப்புகள், மதுப்பழக்கம், பின்னர் பரிதாபகரமான மரணம் என சோகத்தில் முடிந்த சாவித்திரியின் கதையை நம்கண்முன் நிறுத்துவதுதான் இந்த படத்தின் கதை
 
கீர்த்திசுரேஷால் இந்த அளவுக்கு நடிக்கமுடியுமா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அவரது நடிப்பு அபாரம். அவர் சாவித்திரியாகவே வாழ்ந்துள்ளார் என்று போற்றப்படுவது உண்மைதான் என்பது படம் பார்த்தவர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த படத்திற்கு கீர்த்திசுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
webdunia
ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான், ரெங்காராவ் கேரக்டரில் மோகன்பாபு, நாகேஸ்வரராவ் கேரக்டரில் அவரது பேரன் நாக சைதன்யா, பத்திரிகையாளராக சமந்தா, அவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
இயக்குனர் நாக் அஸ்வின், சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் பலரும் அறியாத தகவல்களை திரட்டி சுவாரஸ்யமான திரைக்கதையுடன் கொடுத்துள்ளார். அவர் செய்த ஒரே தவறு சமந்தாவின் கேரக்டரை நீளமாக்கியதுதான். சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் சமந்தாவின் தனிக்கதை இடைஞ்சலாக உள்ளது.
 
மதன்கார்க்கியின் பாடல் வரிகள் மற்றும் வசனங்கள் மிக அருமை. ஒரு டப்பிங் படம் என்ற உணர்வே இல்லை.. இசையமைப்பாளர் மிக்கி மி மேயரின் அனைத்து பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். அதேபோல் பின்னணி இசை இந்த படத்தின் மிகப்பெரிய பலம். தோட்டாதரணியின் செட்டுக்கள் மற்றும் டானி சா லோ கேமிரா படத்தை சாவித்திரி காலத்திற்கே கொண்டு செல்கிறது.
 
மொத்தத்தில் குறிஞ்சி மலர் போல் எப்போதாவது கிடைக்கும் மிக நல்ல படம் நடிகையர் திலகம்
 
ரேட்டிங் 4/5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரும்புத்திரை திரை விமர்சனம்