Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் மொழிப் போலிகள்- தொட‌ர்‌ச்‌சி

ஆர்.முத்துக்குமார்

உடல் மொழிப் போலிகள்- தொட‌ர்‌ச்‌சி
, வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (12:13 IST)
உடல் மொழிப் போலிகள் - தொட‌ர்‌ச்‌சி
க‌ட்டுரை‌யி‌ன் 3‌ம் பா‌ம் இது.

கொங்கைகள், ஸ்தனங்கள் துறந்து 'முலைகள்' என்று பிரயோகிக்கும் துணிவு யோனிக்கு பதில் 'அல்குல்' என்று பிரயோகிப்பதில் இல்லை. யோனி என்ற வடமொழிச் சொல்லுக்கும் வெறும் பாலியல் உறுப்பு என்ற பொருள் தவிற தத்துவார்த்த, குறியீட்டு பொருள்கள் உண்டு. வெறும் பாலியல் உறுப்பு என்று பயன்படுத்தவேண்டுமென்றால் புழை, அல்குல் என்று பயன்படுத்தலாம் (புழை மற்றும் அல்குல் போன்ற வார்த்தைகளுக்கு உள்ள அனைத்குப் பொருள்களும் நாம் அறியாதவையே).

'அல்குல்' என்ற பதத்தை பயன்படுத்துவதில் என்ன கூச்சம்? என்ற கேள்வியுடன் இவரது சுயபிரஸ்தாப உடல் மொழி பற்றி பார்ப்போம்:

பூனையைப்போல் அலையும் வெளிச்சம் என்ற முதல் தொகுப்பில் 'மலையேறும் காலம்' என்ற கவிதையில் "ஏதோ ஒருவனின் பார்வை/ தெறித்து வீழ்ந்து/ பாலையில் மலரானது/னாணம் உடைந்து பருவமெய்தினேன்" என்ற பருவமெய்து காதை வருகிறது. பாலையாய் இருந்தது ஏதோ ஒருவனின் பார்வை பட்டதும் பருவம் எய்துவதாய்க் கூறுவது மோசமான திரப்படப் பாடல் கற்பனையாகும். பருவம் எய்துதல் உடற்கூறியல் தொடர்பான தற்செயல் இல்லை போலும், அதிலும் ஒரு ஆணின் பார்வை பட்டதும்தான் பருவம் எய்துவதாகக் கூறுவதும் அதற்கு முன்பு பாலையாய் காய்ந்திருக்கிறது என்று கூறுவதும் இவரது சுயபிரஸ்தாப உடல் மொழி அதுவும் பெண்ணின் உடல்மொழி!

'மௌன வெளியில்' கவிதையில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவளது உடலுக்குள் இயற்கையின் ரகசியப் பிரவேசம் விதை முனைகளை எழுப்பியது அவள் தனது உடலை பிறிதொரு (மற்றொரு என்று கூறினால் 'கவித கவித' ஆகாது அல்லவா?) பெண்ணுடலை நோக்குவது போல ஸ்பரிசித்துப் பார்க்கிறாள். 'பார்வை ஒரு முத்தம்' -கவிதையில் அவன் முத்தமிட்ட இடத்தில் பூக்களுடன் செடிகள் முளைக்கின்றன. இதெல்லாம் மிகவும் சினிமாத்தனமான கொச்சைகள் இல்லாமல் வேறு என்னவாம்? மேலும் ஆண்துணை அயர்ந்து உறங்குதல் அல்லது முயக்கத்திற்குப் பின் ஆண் சோர்ந்து விடுகிறான் போன்ற கற்பனைகள் Soft Porno ரகக் கற்பனைகள். பெண்ணின் உடல் உணர்ச்சிகள், அதன் "வித்தியாசம்" என்றெல்லாம் பல்வேறு விதமாக பேசப்பட்டு வந்தாலும் அவை ஒரு போதும் முடிந்த முடிவுகளாகா. பல நூற்றாண்டு அடக்குமுறைக்கும், ஒழுக்கவாத ஆதிக்கத்திற்கும் ஆட்பட்டு அதில் ஊறிப்போன பெண்ணின் உடல் தனது அந்தரங்க ஆழங்களை அறிந்து விடுவது அவ்வளவு சுலபமல்ல. எப்போதும் அவர்கள் தங்கள் உடலுக்கு அன்னியப்பட்டவர்களே என்பதை தீவிரமாக யோசித்தால்தான் பெண் உடல் அனுபவங்கள் என்று பிரத்யேகமாக ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும், பின்புதான் அது படைப்புத்தளத்தில் அலைகளை உருவாக்க முடியும். ஆனால் அறிந்துவிட்டதான வெற்றுக் கற்பனைதான் குட்டி ரேவதியினடித்தில் மிஞ்சி இருக்கிறது. தீயின் உடல் என்ற கவிதையில் வானம் பார்த்த பூமி என்ற புளித்துப் போன படிமம் வருகிறது. தீயின் உடல் பெண் உடலாக பிரசங்கிக்கப்படுகிறது.

'இரவு என்பது ஒரு தேவதையின் பணி' என்ற உரை நடைத் தனமான வெறும் வாசகங்கள் அடங்கிய கவிதைகளில் "அவர் உறங்கிக்கொண்டிருக்கிறார்?" நான் காத்திருக்கிறேன் போன்ற சாஃப்ட் போர்னோ முன் தயாரிப்புக் காட்சிகள் இடம்பெறுகிறது.

நான் மழையின் வீழ்ச்சி/ நீ நதியின் ஈர்ப்பு என்று ஆண்/பெண் செய்வினை/செயப்பாட்டு வினை என்ற எதிர் நிலையை தலைகீழாக முயற்சி செய்கிறார். ஆனால் அதன் உணர்வு தட்டையாக உள்ளது. வீழ்ச்சி என்பதற்கு பதிலாக பெருக்கு என்று கூறியிருந்தால் பரவாயில்லை ரகமாக இருந்திருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் நான் மழை என்னை நீ உறிஞ்சும் நதி என்று பொருள் தருவதால் இது பெண் இச்சையின் செயபாடுத் தன்மையை ஏற்பதாகவே அமைகிறது. 'இது விற்பனைக்கு அன்று' என்ற கவிதை முலைகள் விற்கப்படுவது பற்றியது. இது இவரது சொந்தக் கற்பனையல்ல. மகாஸ்வேதாதேவியின் ஸ்தனதாயினி மற்றும் வெட் நர்ஸ் போன்ற கதைகளிலிருந்து அப்படியே உருவப்பட்டதின் கொச்சைப் புரிதல் நகல். உடல்திணை என்ற கவிதை வெற்று முழக்கங்கள் மற்றும் பிரச்சாரத்தின் உச்ச கட்டமாய் இருக்கிறது. நதியில் மடிந்து புரண்டு பாய்ந்தோட முடியும், நீர்த்தாவரமாய் பல்கிப்பெருக முடியும் என்று ஒரே ரொமான்டிக் 'முடியும்கள்'. "வாய்மூடி அலறும் வெள்ளம் பீறிடும் யோனி" என்பது நீருடல் என்றவாறு காமக் கிளர்ச்சி உடல் திரவங்கள் இயற்கையின் உவமையாக குறிப்பிடப்படுகிறது. எங்குமே உடல் உடலாய் இல்லை. மரம், தாவரம், நீர், கடல், மழை, வெயில் என்று க்ளிஷே ஆகப்பட்டுள்ளது. உடலில் கதவு தொகுப்பில் 'ஏதோ ஒருவனின் பார்வையில் நாணமுடைந்து பருவமெய்திய பெண் உருவம் திடுமென மண்டையில் பற்றிய பொறியில் ஆணமையை மறுக்கும் அவள் முன்னே கோழை வடிய மண்டியிடுகின்றனர் ஆண்கள், ஒவ்வொரு ஆணாய் வெட்டி எறியப்படுகின்றனர். என்று militant feminism பிரஸ்தாபம் செய்யப்படுகிறது. 'உடலின் கதவு' (உடலே கதவு அல்ல!) பக்.84ல் "வெளியே நிகழ்வெதெல்லாம் கனவுக்குள் குடிபுக உள்ளே எண்ணியதெல்லாம் காட்சியாய் சரிந்தது" என்று நிறைவேறாக் காமம் அலங்காரமாக குறிப்பிடுவது "காண்பதெல்லாம் மறைவதென்றால் மறைவெதெல்லாம் காண்பமன்றோ" என்ற பாரதியார் வரிகளின் அப்பட்டமான எதிரொலியாகவும், அதன் மோசமான ஒரு கூற்று வடிவ மொழிபெயர்ப்பாகவும் உள்ளது.

"வெள்ளம் கவிதையில் "வெள்ளம் பீறிடும் யோனி" என்று வரி வரும்போதுதான் பெண் உறுப்பிலிருந்து வெளிவரும் காமக் கிளர்ச்சித் திரவங்களை குறிப்பிடுவது நமக்கு தெரிகிறது. எந்த ஒரு காமத்தூண்டுதலுக்கும் சுரக்கும் உடல் திரவங்கள் சிறு நீர் துவாரம் வழியாகவே வெளியேறும். அதில் எந்த நேரமும் 'fungus' மற்றும் E-coli என்ற பாக்டீரியாவும் மிதந்தவண்ணம் இருக்கும். இவை சாதாரணமாகவே நோய்க்குறு கொண்டவை. இந்த திரவங்கள் தெருக்களில் வெள்ளமாக பாய்கிறதாம் குட்டி ரேவதியின் கற்பனையில். நமக்கின்பம் பிறர்க்கு துன்பமே. மேலும் மழையால் இந்த வெள்ளம் ஏற்படுகிறது என்று குட்டி ரேவதி குறிப்பிட்டுள்ளார். மழைக்குத் தேவை மேகம். அதுபோன்று இந்த காமத் திரவங்களுக்கு தேவை என்ன? புறத் தூண்டுதல். உடலின் ரசாயனம் தொடர்பான மாற்றங்களை புற இயற்கையாக உருவகப்படுத்துவது அவ்வளவு ஒன்றும் சிறந்த கற்பனையாகத் தெரியவில்லை. 'பீறிடும் யோனியின் திரவங்களே' ஒரு வேளை வெளியிலிருந்துதான் வருகிறதோ?

தத்துவ, மருத்துவ விஞ்ஞானச் சொல்லாடல்கள் பேதப்படுத்தப்பட்ட, எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய ஒரு "உடலை" (உடல் என்ற கருத்தாக்கத்தை) பண்பாட்டின் மீது திணித்துள்ளது என்று சிந்திக்கப்பட்டு வரும் இந்த விமர்சன காலக் கட்டத்தில் உடலை இயற்கையுடன் சமன் செய்யும் பழைய பஞ்சாங்கத்தை நம் மீது விசிறியடிக்கிறார் குட்டி ரேவதி.

உடலின் கதவு தொகுப்பில் "மணப்பெண்" என்ற கவிதையில் "இடுக்கோடு கசியப்போகும் வெண் கிரணத்துக்காய்" காத்திருக்கும் ஒரு மணப்பெண்ணை கேலி பேசுகிறார் குட்டி ரேவதி. கேலிப்பார்வையில் விந்துவை "வெண்கிரணம்" (இது ஒரு மோசமான பதப்பிரயோகம் ஏன் என்று பின்னால் வருகிறது) என்று ஏன் கூறவேண்டும். இங்குதான் இவரது இச்சையும் வெளிப்படுகிறது. அதாவது "இடுக்கோடு கசியப்போகும்" ஆண் விந்துக்காகத்தான் ஒரு பெண் திருமணம் செய்துகொள்கிறாள் என்ற குப்பைப் பார்வையை பெண்ணிற்கு எதிராகவே பிரயோகிக்கிறார். "இடுக்கோடு கசியப்போகும்" ஏதோ ஒன்றுக்காய் அனைத்துப் பெண்களும்தான் காத்திருக்கிறார்கள். இங்கு கேலிபேசப்படும் ஒரு விஷயம் வேறு இடத்தில் புலம்பலாக மாறுகிறது, அதாவது "விதைக்கவோ வளர்க்கவோ யாருமேயில்லாது பாழ் நிலமாய் உலர்ந்து வெடிக்கிறது உடல்" என்று சுய முரண்பாடு கொள்கிறார். இது ஒரு விதமான இரட்டை நிலையை காண்பிக்கிறது. ஆணின் விந்துக்காய் ஏங்குவது ஒரு பெண் தன்னிலையாய் குற்றவுணர்வு ஏற்படுத்துகிறது ஆனால் விதை விதைத்து அறுவடை செய்ய அது தேவையும் படுகிறது. இதுதான் இந்த இரட்டை நிலை. இடையறாத ஆசை நம்மை ஒயாது செலுத்திக்கொண்டேயிருக்கும் சுய முரண்பாடு.

மேலும் "கண் திறக்காத விதைகளுக்காக" "விதைகளை விரையம் செய்யும்" ஆணின் சுய மைதுனம் பெண்ணின் இழப்பாக ஏன் பார்க்கப்படவேண்டும்?


மற்றொரு கவிதையில் "தோழியின் திருமணத்திற்கு முந்தைய இரவு விரல்கள் பின்னிப்படுத்திருந்ததாகவும்" "காமமாய் அறியாத உணர்ச்சி" உடலைத் தின்று கொண்டிருந்தது என்ற வரிகள் வருகிறது. அது காமமற்ற உணர்ச்சியாய் இருக்குமாயின் பிரிய்ம் தோழி ரக உணர்வுகளையே வெளிப்படுத்தியிருக்கலாமே? இங்கும் அந்த இரட்டை மனோ நிலை வெளிப்படுகிறது. அதாவது சுயப்பிரஸ்தாப உடல் மொழியை எழுதப் புறப்படும்போதே இவ்வளவு சிக்கல்கள் ஏற்படுகிறது. 'contradiction is a force of desire'.என்கிறார் ஃபிராய்டு. அதாவது நாம் எதனை வெளிப்படையாக மறுக்கிறோமோ அது ஆழ் மனதில் மேலும் வலுவாக உறுதிகொள்கிறது என்பதே அதன் தொழிற்பாடு.

முனி அண்டும் புளியமரமும் ஆணுறுப்பு உடையதுதான்", "ஆணுறுப்பு மலையருவி" என்று முதிய பெண்களையும், வனதேவதைக்கு அருவியை ஆணுறுப்பாகவும் அலங்கரிக்கும் குட்டி ரேவதியின் உடல் மொழி ஆண் உறுப்பிற்கான இச்சையாக இருப்பதைத்தான் காணமுடிகிறது.

"உன் நினைவின் மதகு... என் வெயில் பிரதேசமெங்கும் பெருகி வழிகிறது"
"நுரை சுழித்த திமிரில் எனது பூமியில் குழி பறிக்கிறது"
"குகையினூடே ஒளி துளைக்கும்...
"யொணியின் மதகைத் திறக்கும் உன் நினவின் பெருக்கு"

ஆகிய குட்டிரேவதியின் "கவிதா" லைபிடினல்(!) வரிகளில் "உடலின் கதவு" ஒரு போதும் உள்ளிருந்து திறக்கப்படுவதில்லை, எப்போதுமே வெளியிலிருந்து திறக்கப் படுவதற்கு, திறக்கப்பட முடிவதற்குப் பெயர் கதவு அல்ல. அது கதவாக இருக்க முடியாது. கிருஷாங்கினியின் "அடைத்தலும், திறத்தலும், உத்தரவு அவசியமற்ற கதவாக" சாமானியக் கதவாகவே இருந்து விட்டுப் போகலாமே. "உடல்மொழி" என்று ஏன் இத்தனை ஆர்பாட்டம்?

'குகையினூடே ஒளி துளைக்கும்' 'இடுக்கின் வழியே கசியும் கிரணம்' என்று ஆணின் விந்து கிரணம், ஒளி என்றெல்லாம் லட்சியமாக்கம் செய்யப்படுவது ஆணாதிக்கச் செய்கை. முண்டகோபனிஷத் 2வது முண்டகத்தில் ரேதசை ஸ்த்ரீகளிடத்தில் பொழிபவன் பரம புருஷன் எனவும் "ஒளி நிறைந்தவன்" எனவும் உள்ளது. ஐத்ரேய உபனிஷத்தில் ஆணின் "விந்து" ஸ்த்ரிக்களின் ஒரு உறுப்பாகவே ஐக்கியமாவதாக கூறப்பட்டுள்ளது. குட்டி ரேவதியின் சுயபிரஸ்"தாப" "உடல் மொழி" பீஜமையவாத உபனிஷத புருஷத் தத்துவத்தில் போய் முடிந்துள்ளது. அதுவும் இயற்கையான விந்து உள்செல்லுதல் உயர்ந்தது எனவும் ஆர்டிஃபீஷியல் இன்செமினேஷன் தீயது என்று "கண் திறகாக விதைகள்" கவிதையில் கூறப்பட்டுள்ளது.

மறு உற்பத்தி தொழில் நுட்பங்களில் கருத்தரிப்பும், குழந்தை பிறப்பும் 3 விதமான தொழில் நுட்பங்களின் கீழ் விவாதிக்கப்படுகிறது.

1.Managerial Technology: கருத்தரித்தலுக்கு முன், கருத்தரிப்பு மற்றும் குழந்தை பிறப்பு ஆகியவற்றை மருத்துவ ரீதியாக முழுதும் நிர்வகித்தல்.

2. Contraceptive Technology: ஹார்மோன் அடக்கிகள், உள்கருப்பை சாதனங்கள் மற்றும் பாதுகாப்பான உடலுறவ

3. Conceptive Technolgy: இதில் செயற்கை முறையில் விந்து செலுத்தப்படுதல், கருவுண்டாக்கும் மருந்துகள், விதைக்காப்பகம் மற்றும் வினியோகம், சோதனைக்குழாய் கருவுற்பத்திகள் ஆகியவை அடங்கும்.

இந்த மறு உற்பத்திகள் ஒரு சில பெண்ணியவாதிகளாலும், மருத்துவ சமூகவியாளர்களாலும் ஒழுக்க, மருத்துவ மற்றும் அரசியல் காரணங்களுக்காக பிரேரணை செய்தவையே. ஷூலாமித் ஃபயர்ஸ்டோன் என்ற ஃபிராய்டைப் பாராட்டிய பெண்ணியக் கோட்பாட்டாளர் தனது 1971ம் ஆண்டு நூலான "The Dialectic of Sex"- ல் இத்தொழில் நுட்பங்கள் உயிரியல் கட்டுப்பாடுகளிலிருந்து பெண்களை விடுவிப்பதாய் வாதிட்டுள்ளார். பெண்ணிய கோட்பாட்டுகளில் பல்வேறு நிலைப்பாடுகளும், ஒன்றுக்கொன்று முரண்பட்டும் சிலவேளைகளில் இணைந்தும் சிந்தித்துள்ளதும் நிகழ்ந்துள்ள சூழ் நிலையில் எதிரும் புதிருமான, சிக்குமுக்கான கோட்பாட்டு வலைகளில் ஒன்றை மட்டுமே பிடித்து தொங்கிக் கொண்டு இதுதாண்டா பெண்ணியம் அதுதாண்டா பெண்ணியம் என்று கூச்சல் இடுவது தவறு. எந்த கோட்ப்படுகளின் தற்காலிக தன்மையை உணர்ந்து சுய ஐயுறவுடனான ஒரு அணுகுமுறையே அறிவுடைமை.

பாராட்டும் ஒரு சில விமர்சகர்கள் அல்லது பேராசிரியர்கள், "ஒரு காமக் கிழத்தியைப் போல் ஆண்களை ருசிப்போம்" என்று குட்டிரேவதி எழுதியவுடன் மெய்சிலிர்ப்பது ஏன் என்று புரியவில்லை. மரபு தெரிந்தவர்களும் இது போன்ற போக்கை பாராட்டி மகிழ்வது மடமை இல்லாமல் வேறு என்னவாம்?

கலிங்கத்துப் பரணியில்:

"அவசமுற்று உளம் நெகத், துயில் நெகப் பவள வாய
அணி சிவப்பு அற, வழிக்கடை சிவப்பு ஊற, நிறைக
கவசம் அற்று இள நகை கனிவரக் களிவரும
கணவரைப் புணர்வீர்...

என்றும்,

போகக்களி மயக்கில
புலர்ந்தது அறியாதே...

வாயின் சிவப்பை விழிவாங்க,
மலர்க்கண் வெளுப்பை வாய் வாங்க,
தோயக் கலவி அமுது அளிப்பீர்,

கடல் போன்ற புணர்ச்சி இன்பமாகிய அமுதத்தை அளிக்கும் பெண்கள். என்று தமிழ் இலக்கியங்கள் நெடுக "ஆண்களை ருசிக்கும்" பெண்கள் ஏராளம்... ஏராளம்...

பாகவதத்தில் வரும் ஒரு கதையில் உஷை என்ற அரக்கர் மகள் கனவிலே அனிருத்தன் என்ற அழகனைப் புணர, விழித்துப்பார்க்கையில் அனிருத்தன் இல்லாததைக் கண்டு, வெகுண்டு, மந்திர வித்தை தெரிந்த சேடிப்பெண்களிடம் அனிருத்தனை அந்தப்புரத்திற்கு அழைத்து வருமாறு உத்தரவிடுகிறாள். உறங்கி கொண்டிருக்கும் அனிருத்தனை கொண்டு வந்து புணருகிறாள். இதுதவிர காமச்சாத்திரம், வாமசாரம் என்று "உடல் மொழிகள்" ஏராளம். ஆனால் இவையெல்லாம் இன்று பின் நவீனத்துவம் கூறும் உடல் மொழிகளா என்பது ஆய்வுக்குரியது.


ாம் மேலும் உடலின் கதவை உடைப்போம். கனவுகளின் படுக்கை என்ற கவிதையில்: எனது அப்பா ஒரு கனவில்/தனது சூடான கரங்களால்/ பனி மார்பகங்களின் வீக்கம் தீர/ தடவிக் கொடுத்தார்/ அவை சுரந்து வழிந்தன.

முலைகள் தொகுப்பில் "னெளியும் பிரதி" என்ற தலைப்பின் கீழ் "என் தந்தையின் வித்துகள் வீழ்ந்த நிலத்தைக் கண்டடைந்து, ஒரு மரமாய் முளைத்தெழுவேன்" போன்ற வரிகளில் தந்தைமை தேடல், தந்தையின் வம்சாவழியாவதற்கான ஏக்கம் வெளிப்படுகிறது.

இறந்த தந்தை, தந்தை வழி சமுதாயத்தின் அடையாஅளம். ஒரு விதத்தில், கற்பனையான, சமூகத்திற்கு முந்தைய சகாப்தம் என்பது ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு உண்மை. இந்தத் தந்தை குறியீட்டு ஒழுங்கில் தந்தையின் பெயரால் தன் ஆதிக்கத்தை தக்கவைத்திருப்பவர். இந்த இறந்த தந்தையை, குறியீட்டு ஒழுங்கில் தந்தையின் பெயராக வாழ்ந்து வரும் இந்த தந்தையை எதிர்த்தும், விரும்பியும் என பல்வேறு உளச்சிக்கல்களை சந்தித்து ஆணும் பெண்ணும் தங்கள் பண்பாட்டு இடத்தை, அடையாளத்தை கண்டுபிடித்துக் கொள்கின்றனர். இதனால் எழுவதே ஒரு தலைபட்சமான ஆதிக்கவாதம், அதுபோன்ற ஒரு ஆதிக்கவாத தந்தமை இச்சை இங்கு வெளிப்படுகிறது.

சுயமைதுனம் செய்யும் ஆணின் விந்து பெண்களுக்கு இழப்பு, தந்தைமை தேடல், ஆண்விந்தை கிரணம், ஒளி, பொழிவு என்று மேலிருந்து கீழாக பாயும் படிமங்களை பயன்படுத்தி மேல்/கீழ் என்ற ஆதிக்கவாத இருமைக்குள் சரிந்தது. ஆண்களுடனான உறவிற்கான தவிர்க்கமுடியாத ஏக்கம், விதைகள் மீதான பீடிப்பு, ஆகியவை உடல்மொழியும் அல்ல 'பெண் உடல் வித்தியாசமும்' அல்ல. பெண்ணியம் போராடி தகர்க்கவேண்டிய பீஜமையவாதம், ரேதஸ மையவாதம் என்ற ஆதிக்கவாதங்களின் விகாரசேகரங்களே.

பெண்ணுடல், பெண்மை, இயற்கை, காமம் ஆகியவற்றிற்கான ஒட்டுமொத்த உருவகத்தை சிந்திக்க இயலாமையை கொடுங்களூர் பகவதி, செங்கல் சாமி என்ற கிராம வெகுஜன வழிபாடு பற்றி எழுதி பதிலீடு செய்யும் சாமர்த்தியம்தான் தெரிகிறது.

குட்டி ரேவதி "நீலி" யை ஒரு கருத்தாக முன்மொழிவது, நீலி பற்றிய பல்வேறு நாட்டார் வடிவங்களை அறியாமல்தான். பெண்ணியம், உடல் மொழி, சிறுதெய்வங்கள் என்ற பொத்தாம் பொதுக்களை ஒரு பட்டியலாக தயாரித்து அவையெல்லாம் பற்றி தனக்கு தெரிந்த பொத்தாம் பொதுக்களை அவிழ்த்து விட்டு பெரிய 'ரேடிகல்' என்ற பிம்பத்தை கட்டமைக்கும் போலித்தனங்களும், சாமர்த்தியங்களும் இவரது கவிதைகள் முழுதும் இருப்பதை சூட்சமமான வாசகன் ஒருவன் சுலபமாக புரிந்து கொண்டு தோலுரிக்கும் காலம் வரும் என்று நம்பலாம்.

இது போன்ற போக்குகளை,

"முறை மனம் உடல் எதையும
மறைக்காதே; கழற்ற
தடை எதுவும் வேண்டாம்,
உடைக்கக் கிளம்பிடு;

என்பதே அந்த இயகத்தின் கொள்க
என்றேன். இயக்குனர் சிரித்தார்.
'பூஉ!' இவ்வளவுதானா?
இதைத்தானே இவ்வளவு நாளாய் காட்டி வருகிறோம
தமிழ்ப்பட காதற் காட்சியில் என்றார்."

என்று சி.மணி தனது "பூஉ இவ்வளவுதானா" என்ற கவிதையில் எளிதாக பகடி செய்துள்ளார்.

இந்த சுயப்பிரஸ்தாப 'உடல்மொழி' வெற்றுச் சலசலப்புகள், ஆரவாரங்களுக்கு வெளியே, இருண்ட திக்குத் தெரியாத காட்டில் எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி-மாதவி- வெடிச்சிரிப்பு சிரிக்கின்றாள். இது தமிழ் "மெடூசாவின் புன்னகை" அல்ல.

இறுதியாக ஒரு கருத்துமையமாக்கம்: பாரதி தொடங்கி பிச்சமூர்த்தி வழிவந்ததாக கூறப்படும், "நவீனத்துவம்" என்று லேபிள் ஒட்டப்பட்ட கவிதை இயக்கம் ரொமான்டிசமே என்பதை நிறுவ முடியும். நோயல் ஜோசப் இருதய ராஜ் தனது முதல் கவிதைத்தொகுதியான "மறுமொழி" யில் மேல் நோக்கிய பயணிகளையும், "காட்டு வாத்தின் தாசர்களையும்" "விருட்ச மனிதர்கள்" படைத்த "குரங்குகக்கும் பண்டிதர்களையும்" கவிதை வழி தகர்த்துள்ளார். இது தவிர இயற்கை உலகை மானுடப் பிரக்ஞைக்கு குறுக்கும், தற்குறிப்பேற்றங்கள் மலிந்து கிடக்கும் சூழலில் பெண்ணியக் கவிதைகள், உடல்மொழிக் கவிதைகள் என்ற பெயரில் அதே ரொமான்டிசிசக் கூறுகள் சுற்றி சுற்றி வருவது ஆகியவை தோற்றமும் (appearance) கருத்தும் (idea) ஒன்றே என்ற மாயையைக் கட்டமைக்கும் ஒரு ரொமான்டிசிச உற்பத்தியே.

இதன் மொழி அடையாளப் புறத் தோற்றங்கள் அதன் கற்பனையான கருத்தியல்களால், விடுதலைக்கான குரல்களாக அடையாளம் காணப்பட்டு, அவை சிறப்புரிமை கோரும் "தீ"-யை ஜொலிக்குமாறு செய்கின்றன. இது வெறும் மங்கும் ஜொலிப்பு மட்டுமே. இந்தத் தீ எரியாது. எதனையும் எரிக்காது. இந்த ரொமாண்டிக் கற்பனை இந்த உருவத்தை சில தருணங்களில் தனி நபரின் வடிவமாகவோ, பெண்ணின் வடிவமாகவோ, ஆணின் வடிவமாகவோ, ஆணுமற்றதன் பெண்ணுமற்றதன் வடிவமாகவோ, விளிம்பு நில வடிவமாகவோ மூர்த்திகரணம் செய்யும். இந்த மூர்த்திகரணங்கள் நிஜ உலகில் நடமாடும் தன்னிலை என்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இது romantic disease.

இதனை வெகு நுட்பமாக விவரிக்கும் யேல் பல்கலைக் கழக தகர்ப்பு விமர்சகர், பால் டெ மான், மொழி, வெளிப்பாடு என்ற உள்ளார்ந்த முகமூடிகள் உருவாக்கும் விளைவுகள் என்பதாக வலியுறுத்தும் விஷயத்தை நம் சிறுபத்திரிகா சுயப் பிரஸ்தாப "ரேடிகல்களுக்கும்" நாம் வலியுறுத்தலாம்.

"We know that our entire social language is an intricate sysem of rhetorical devices designed to escape from direct expression of desires, that are in the fullest sense of the term unnamable, not because they are ethically shameful, ( for this would make the problem a very simple one), but because unmediated expression is a philosophical impossibility. And we know that the individual who chose to ignore this fundamental convention would be slated either for crucifixion if he were aware, or if he were naive destined to the total ridicule..." (Criticism and Crisis)


நம் உடல் மொழி, பாலியல் கொச்சை ரேடிகல்கள் பால் டெ மான் கூறுவது போல் Naive வும் அல்ல, crucifixion என்பதற்கு தயாரானவர்களும் அல்ல. என்பதாலேயே முழு எள்ளலுக்கும்(total ridicule) உகந்தவர்களே.



Share this Story:

Follow Webdunia tamil