Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழம் கனிந்து கொண்டிருக்கிறதா? - பழுத்த அரசியல்வாதிக்கு களக்கமா?

பழம் கனிந்து கொண்டிருக்கிறதா? - பழுத்த அரசியல்வாதிக்கு களக்கமா?

அ.லெனின் அகத்தியநாடன்

, செவ்வாய், 8 மார்ச் 2016 (15:32 IST)
வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் தொடர்ந்து 12 நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணல் இன்றுடன் நிறைவடைந்தது.
 

 
பின்னர், அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியிடம் செய்தியாளர்கள், திமுக - தேமுதிக கூட்டணி முடிவாகிவிட்டதா? என்று கேட்டதற்கு என்று கேட்டபோது, ”பழம் கனிந்து கொண்டிருக்கிறது. பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
 
இன்றும் தனது 91ஆவது அகவை வரை தமிழக அரசியலில் தேர்தல் களம் காணும் மூத்த அரசியல்வாதி, 1957ஆம் ஆண்டு முதல், இன்று வரை ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் அரசியல் வாழ்க்கையில் கனிந்து கிடப்பவர் கலைஞர் கருணாநிதி.
 
ஆனால், கூட்டணி வைப்பதற்கு மற்றொரு கட்சியை எதிர்ப்பார்த்து இவ்வளவு நாள் காத்துக்கிடப்பது, அதுவும் மற்றொரு மாநில கட்சியுடன் என்பது கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்.
 
அரசியல் தந்திரங்களிலும், காய் நகர்த்தலிலும் பெயர்போனவர் கலைஞர் கருணாநிதி. கடந்த சட்டமன்ற தேர்தலில், தேர்தல் தேதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டவர் கருணாநிதி.
 
ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் இன்று வரை, திமுக தனது கூட்டணியை முடிவு செய்யமுடியாமல் திணறி வருகிறது.

இதற்கு காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெறும் 119 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. மற்ற தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கியது. இதற்கு 2ஜி அலைகற்றை முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மேலிடம் கொடுத்த நெருக்கடி என்று கூறப்பட்டது.
 
மேலும், பாமகவிற்கு 30 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகளும், கொங்கு முன்னேற்றக் கழகம் 7ம், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3ம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவைக்கு தலா ஒரு தொகுதிகளும் வழங்கப்பட்டன.
 
இதிலும், 119 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்த பிரச்சனையை அல்லது முடிவை வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக சந்திக்கக் கூடாது என்பதில் திமுக கண்ணும் கருத்துமாக இருக்கிறது.
 
இதனால், இந்த தேர்தலில் கூட்டணிக்கு வருகின்ற கட்சிகளிடம் முன்பே தொகுதிப் பங்கீட்டை முடித்துக்கொண்டு, பின்பு கூட்டணி குறித்து முடிவு செய்யலாம் என திமுக கருதுவதாகவும், அதனாலேயே, தேமுதிகவுடனான பேச்சுவார்த்து இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
திமுகவுடனான பேச்சுவார்த்தை முடிவிக்கு வராததனாலேயே, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாஜகவுடன் நெருக்கம் காட்ட தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், திமுக தொகுதிகளை குறைத்துக்கொடுக்கும் பட்சத்தில் துணை முதல்வர் பதவியை விஜயகாந்த் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
ஆனாலும், எத்தனையோ தேர்தல்களில் தைரியமாக கூட்டணி முடிவு எடுத்து, வேட்பாளர்களை களமிறக்கிய பழுத்த அரசியல்வாதியான கருணாநிதி இன்று தேமுதிகவின் வருகைக்காக பழம் கனிந்து கொண்டிருக்கிறது என்று கூறி காத்திருப்பது என்பது திமுகவிற்கு இந்த தேர்தல் களக்கத்தை தந்துள்ளது என்று கருத வேண்டியுள்ளது.
 
ஆனால், காத்திருப்பதும் அரசியல் சாணக்கியதனங்களுல் ஒன்று என்று நமக்கு பதில் அளிக்கின்றனர் திமுக தரப்பினர். எது எப்படியோ வேட்புமனு தாக்கல் முடியும் தேதி வரை பழம் கனியாமல் இருந்துவிடப்போகிறது.

Share this Story:

Follow Webdunia tamil