Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாண்டி, காத்ரினா, ஐரீன் மிகப்பெரிய புயல்களும் அமெரிக்கா கண்டும் காணாத உண்மைகளும்!

சாண்டி, காத்ரினா, ஐரீன் மிகப்பெரிய புயல்களும் அமெரிக்கா கண்டும் காணாத உண்மைகளும்!
, புதன், 31 அக்டோபர் 2012 (19:36 IST)
FILE
இத்தனையாண்டுகாலம் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய புயல்கள் உருவாகி வருவதற்குக் காரணம் புவி வெப்பமடைதலே அல்லது குளோபல் வார்மிங்கினால் ஏற்படும் வானிலை மற்றம், கடல்நீர் மாற்றம் ஆகியவையே என்று விஞ்ஞானிகள் சுமார் 30 ஆண்டுகாலமாக கதறி வருகின்றனர். ஆனால் அமெரிக்காவிலும் சரி எந்த நாட்டிலும் சரி எந்த அரசியல்கட்சிகளும் விஞ்ஞானிகளின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

2005ஆம் ஆண்டு அமெரிக்காவை புரட்டிப் போட்ட காத்ரீனாவாகட்டும் அல்லது ஐரீனாகட்டும் தற்போது மிக முக்கிய நகரங்களை நிலைகுலையச் செய்து அமெரிக்காவே காணாத வரலாறு காணாத சேதங்களை ஏற்படுத்திய சாண்டி புயலாகட்டும் அனைத்தும் புவிவெப்பமடைதல் என்ற மனித நடவடிக்கையின் விளைவுகளே என்பதை யாரும் ஒப்புக் கொள்வதைல்லை. கண்டும் காணாதது போல் இருக்கப் பழகிவிட்டோம்.

நுரையீரல் புற்று நோய்க்கு புகைப்பிடிப்பது எப்படி அமைப்பு ரீதியான காரணமோ அப்படித்தான் மிகப்பெரிய புயல்களுக்குக் காரணம் புவிவெப்பமடைதலே. இது மானுட உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்படுவதே.

புவி வெப்பமடைதலால் மெக்சிகோ வளைகுடா மற்றும் அட்லாண்டிக் கடல் நீரை உஷ்ணப்படுத்தியுள்ளது. இதனால் காற்றில் நீராவியின் அளவும் சக்தியும் அதிகரிக்கிறது. இது ஏற்பட்டுவிட்ட நிலையில் ஈரமான ராட்சத புயற்காற்றுகள் தவிர்க்க முடியாதவையாகி விடுகிறது. இந்த சிஸ்டமிக் காரணங்கள்தான் சாதாரண புயல் சாண்டி, ஐரீன், காத்ரினா அளவுக்கு ராட்சத புயலாக மாறுவதற்குக் காரணம்.

புவிவெப்பமடைதலால் ஒவ்வொரு நாளும் உருவாகும் கூடுதல் சக்தி 4 லட்சம் ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு சமமானது என்றே விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர். பூமி என்ற நம் கணக்கிடமுடியாத இந்தப் பரப்பளவு மற்றும் ஆழத்தில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை நம் உடல் நேரடியாக உணர வாய்ப்பில்லை.

பனிப்பாறைகள் புவி வெப்பமடைதலால் உருகும்போது கடல் நீர் மட்டம் 45 அடி உயரும். இதனால் அதிக உஷ்ண நீர் பரப்பளவு அளவில் கடல் பரப்பில் சேரும்போது சாதாரண புயல்கள் கூட ராட்சத புயலாக உருமாறுகிறது.

2டிகிரி செல்சியஸ் பூமி அதிகம் வெப்பமடைந்தால் கூட போதுமானது இந்த மனித குலத்திற்கே இது பேரழிவாகப் போய் முடியும். 2 டிகிரி செல்சியஸ் என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. எக்சான் எண்ணெய் நிறுவனம் அமெரிக்காவில் தோண்டும் கச்சா எண்ணெயின் அளவு போதுமானது. அந்த கச்சா எண்ணெய் பெட்ரோலாக மாறி எரிக்கப்படும்போது 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் அவ்வளவுதான்!

இது வெறும் எக்சான் மொபில் நிறுவன எண்ணெய் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் சேமித்து வைத்துள்ள எண்ணெய் எரிக்கபடும்போது இந்த பூமியின் வெப்ப நிலை என்னவாக இருக்கும் என்பதை யோசிக்க முடியுமா என்றே தெரியவில்லை.


ஏற்கனவே உள்ள எண்ணெய் வளம் போதுமானது. இருக்கும் எண்ணெயையே முழுதும் எரிக்க முடியாது. இதில் மேலும் மேலும் கச்சா தோண்டுவது ஏன்?

18ஆம் நூற்றாண்டின் பிரெஞ்ச் புத்தொளிவாத தத்துவ ஞானி ழாக் ரூசோ கூறியது போல், பூமிக்கு மேல் இயற்கை நமக்கு எவ்வளவோ கொடுத்துள்ளது. அது அத்தனையின் பயன்களையும் நாம் அறிந்து விட்டோமா, எதற்கு பூமியைத் தோண்டவேண்டும்? பூமியைத் தோண்ட ஆரம்பித்தான் மனிதன் அவனது அழிவு ஆரம்பமாகிவிட்டது என்றார்.

இன்று அவரது சிந்தனையை மேலும் தீவிரமாக நாம் யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறோம் என்றால் மிகையாகாது.

பிரபல சுற்றுச்சூழல் விஞ்ஞானி ராபர்ட் ஹேன்சென் கடந்த சில ஆண்டுகளின் அதி தீவிர வெப்ப நிலைக்குக் காரணம் புவி வெப்பமடைதலைத் தவிர வேறொன்றுமீலை என்கிறார்.

மேலும் 2010ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஏற்பட்ட வெப்ப அலை டெக்சாசில் மிகப்பெரிய வறட்சியையும், ஓக்லஹாமாவில் 2011ஆம் ஆண்டில் கொடுமையான வறட்சியையும் உருவாக்கியது என்கிறார் ஹேன்சென். ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சீற்றத்தை புவி வெப்பமடைதலுடன் இணைத்துக் காண்பதற்கு நிரூபணம் இல்லாவிட்டாலும் பெரிய அளவில் புவி வெப்பமடைதலின் சிறைய விளைவுகலே இது என்று ஹேன்சன் கூறுவது சிந்திக்கத் தக்கது.

சயின்டிபிக் அமெரிக்கன் என்ற ஆய்வு பத்திரிக்கை தொடர்ந்து மிகப்பெரிய புயல், வறட்சி, காட்டுத்தீ போன்றவற்றைப் பற்றி கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. 2007ஆம் ஆண்டே அட்லாண்டிக் கடல்பகுதி உஷ்ணமடைந்து வருவதால் அதிக புயல்கள் உருவாகாவிட்டாலும் உருவாகும் புயலும் ராட்சத புயலாக மாறும் என்று எச்சரித்திருந்தனர்.

எனவே இன்னும் அரசுகள் கண்ணை மூடிக் கொண்டு அனைத்தையும் புவி வெப்பமடைதலுடன் தொடர்பு படுத்த முடியாது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் எந்த வித அர்த்தமும் இல்லை.

இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாகவேண்டும். அமெரிக்காவை தாக்கினால் ஆகா ஓகோ என்று ஊடகங்கள் அனைத்தும் கச்சைக் கட்டிக் கொண்டு இறங்குகின்றன. இன்றைய புவி வெப்பமடைதலுக்கு முதன்மை பங்களிப்பு செய்து வரும் அமெரிக்கா போன்ற நாடுகளின் உற்பத்தி நடவடிக்கைகளினால் ஏழை ஆப்பிரிக்க நாடுகளின் பசி, பஞ்சம், பட்டிணி, வறுமை, வறட்சி ஆகியவை பற்றி 24 மணி நேர சேவை எதுவும் காண்பிக்கப்படுவதில்லையே ஏன்?

சிந்திப்போமாக!

Share this Story:

Follow Webdunia tamil