Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோதியை திடீரென புகழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் - அமெரிக்க பயணத்தின் விளைவா?

modi and putin
, வெள்ளி, 30 ஜூன் 2023 (21:53 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்திற்குப் பிறகு, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு குறித்துப் பல விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன.
 
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், வியாழன் அன்று மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, ​​பிரதமர் மோதியை தனது சிறந்த நண்பர் என்றும், அவருடைய 'மேக் இன் இந்தியா' மிகச் சிறப்பான திட்டம் என்றும் தெரிவித்தார்.
 
“பிரதமர் மோதி ரஷ்யாவின் மிக நெருங்கிய நண்பர். அவருடைய 'மேக் இன் இந்தியா' திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்தது.
 
இந்தத் திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் பல்வேறு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நாமும் மேக் இன் இந்தியா திட்டத்தைப் பின்பற்றினால் அதில் எந்தத் தவறும் இல்லை. இது எங்களுடைய திட்டம் அல்ல. ஆனால் எங்கள் நண்பரின் திட்டம்," என்றார் அவர்.
 
புதினின் இந்த வீடியோ கிளிப்பை ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தித் தொலைக்காட்சியான ஆர்.டி. ட்வீட் செய்துள்ளது.
 
இந்தியாவுடனான உறவுகள் ரஷ்யாவுக்கு அரசியல்ரீதியிலும், பொருளாதாரரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளன என்ற ஒரு செய்திதான் ரஷ்ய அதிபர் பிரதமர் மோதியை பாராட்டியதிலிருந்து தெரிய வருகிறது.
 
யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கிய பிறகு, மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால் அந்நாட்டுக்கு பொருளாதார ரீதியாகப் பெரும் இழப்புகள் ஏற்பட்ட நிலையில், ​​​​ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரித்தது. இந்த நகர்வு ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியாக பெரிதும் உதவியது.
 
இந்தியாவின் பெரிய சந்தையில் ரஷ்ய நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று புதின் விரும்புகிறார். மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான தடைகள் காரணமாக ரஷ்யா மற்ற வழிகள் குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
 
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகம் இதுவரை அரசு மட்டத்தில்தான் இருந்து வருகிறது. இப்போது அந்நாட்டுக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என ரஷ்யா விரும்புகிறது.
 
பிரதமர் மோதி 2014இல் 'மேக் இன் இந்தியா' திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். நரேந்திர மோதியின் ஆட்சியில் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.
 
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், எத்தனை சவால்களைக் கடந்தும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு நிலையாக நீடித்து நிற்கிறது என்று கூறினார்.
 
"எவ்வளவு சவால்கள் இருந்தாலும், ரஷ்யாவுடனான எங்கள் உறவு அசைக்க முடியாதது" என்று ஜெய்சங்கர் அப்போது கூறியிருந்தார்.
 
மேலும், "ரஷ்யாவுடனான உறவுகளின் முக்கியத்துவம் குறித்துப் பல ஆண்டுகளாக மதிப்பீடு செய்துள்ளோம். ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்பை பாதுகாப்புத்துறையுடன் மட்டும் தொடர்புபடுத்திப் பார்ப்பது தவறு.
 
அதைத் தாண்டி நாங்கள் பல விஷயங்களில் உறவுகளைக் கொண்டுள்ளோம். ரஷ்யாவுடனான எங்களது உறவுகளின் விளைவாக சொந்த புவிசார் பயன்கள் குறித்தும் நாங்கள் ஏற்கெனவே ஆராய்ந்துள்ளோம். இந்த உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பையும் அதிகரித்துள்ளன," என்றார்.
 
பனிப்போர் காலத்தில் இருந்தே, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் ஒரு காலத்தின் சோதனையாகக் கருதப்பட்டு வருகிறது.
 
பாதுகாப்பு, எண்ணெய், அணு ஆற்றல், விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு நிலவி வருகிறது. ஆனால் சீனாவுடன் ரஷ்யாவின் நெருக்கம் அதிகரித்து வருவது, இந்தியாவுடனான அந்நாட்டின் உறவு மீது ஒரு சந்தேகப் பார்வையை விழ வைத்துள்ளது.
 
யுக்ரேனுடன் நடந்து வரும் போர் காரணமாக ரஷ்யா சீனாவை அதிக அளவில் சார்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 1950களில் இருந்து, பனிப்போர் காலத்தில், இந்தியா சோவியத் யூனியனுடன் வலுவான உறவுகளை உருவாக்கத் தொடங்கியது. இந்தியா - பாகிஸ்தான் போரின் போது ரஷ்யாவுடனான இந்திய உறவுகள் கணிசமான அளவுக்கு அதிகரிக்கத் தொடங்கின.
 
கடந்த 1965ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் சோவியத் யூனியனின் பேச்சுவார்த்தைகள் பெரும் பங்காற்றின. 1971ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது, ​​சோவியத் யூனியன் இந்தியாவுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியது.
 
ஆனால் அதேநேரம், அமெரிக்கா, வங்காள விரிகுடாவுக்கு ஓர் அதிரடிப் படையை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவியது.
 
இந்தியாவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே 1971இல் அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது. பின்னர் சோவியத் யூனியன் சரிந்தபோது, ​​கடந்த 1993 ஜனவரியில் இந்த உடன்படிக்கை இந்திய-ரஷ்ய நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையாக மாற்றப்பட்டது.
 
 
"ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்" - புதின்
 
கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 13 நாட்கள் போர் நடந்தது. பாகிஸ்தான் அரசு கிழக்கு பாகிஸ்தான் மக்களைப் பல விதங்களில் சுரண்டியதாகவும், போதுமான உதவிகளை அளிக்கவில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் இருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானில் பெரும் போராட்டங்கள் நடந்தன. அதை மனிதாபிமானமற்ற முறையில் பாகிஸ்தான் அரசு ஒடுக்க முயன்று, சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்தியது.
 
இதனால் அங்கிருந்து ஏராளமான பொதுமக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். இதை உலக நாடுகளுக்கு உணர்த்த இந்தியா பெருமுயற்சி மேற்கொண்டது.
 
இந்தக் காலகட்டத்தில்தான் கடந்த 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி 'இந்தியா-சோவியத் அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில்' கையெழுத்திட்டார்.
 
இந்த உடன்படிக்கையின் கீழ், இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே போர் மூண்டால், ராஜதந்திர மற்றும் ஆயுத உதவிகளை அளிக்க இந்தியாவுக்கு சோவியத் யூனியன் உறுதியளித்தது.
 
இதற்கிடையே, வங்கதேசத்துக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் படைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தப் போருக்குப் பிறகுதான் கிழக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் என்ற தனி நாடாக மாறியது.
 
 
அதன் பின்னர் இந்தியாவிற்கு நம்பகமான நட்பு நாடாக ரஷ்யா தொடர்ந்து நீடித்து வருகிறது. அதேநேரம், இந்தியாவைவிட பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளித்து வருகிறது.
 
பிப்ரவரி 2022இல் ரஷ்யா யுக்ரேனை தாக்கியபோது, ​​ஐக்கிய நாடுகள் அவையில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிப்பதை இந்தியா தவிர்த்தது.
 
யுக்ரேன் மீதான தாக்குதலுக்கு எதிராக இந்தியா ரஷ்யாவை விமர்சித்ததில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், நரேந்திர மோதி கடந்த ஆண்டு செப்டம்பரில் புதினிடம், "இப்போது போருக்கு உகந்த காலம் இல்லை," என்று கூறினார்.
 
மேலும், ஜனநாயகம், ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் உலகை ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்றும் பிரதமர் மோதி அப்போது கூறினார்.
 
பின்னர் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் அதிபர் புதினை பிரதமர் மோதி சந்தித்துப் பேசினார்.
 
கடந்த 1962இல் நடந்த சீனாவுடனான போருக்குப் பிறகு, இந்தியா சோவியத் யூனியனுடன் பாதுகாப்பு கூட்டாண்மையை அதிகரித்தது.
 
பிறகு, 1990களின் தொடக்கத்தில் இருந்து, இந்திய ராணுவத்தில் சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பங்கு 70% ஆகவும், விமானப்படை அமைப்பில் 80% ஆகவும், கடற்படையில் 85% ஆகவும் இருந்தது. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி கப்பலை 2004ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியது.
 
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்துக்குப் பிறகு, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது
 
ரஷ்ய தூதர் அவரது ஒரு பேட்டியின் போது என்ன சொன்னார்?
பிரதமர் மோதி அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருந்தபோது, ​​இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழிடம், ரஷ்யா தனது தேவைக்கேற்ப இந்தியாவுக்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் வழங்கும் என்று கூறியிருந்தார்.
 
எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய இரு நாடுகளும் செயல்பட்டு வருவதாகவும், வர்த்தகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய முயnRu வருவதாகவும் அப்போது அவர் கூறியிருந்தார்.
 
மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் இரு நாடுகளும் புதிய நிதிப்பரிமாற்ற முறையை உருவாக்கி வருவதாகவும், இதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாகவும் தூதர் அலிபோவ் தெரிவித்திருந்தார்.
 
ரஷ்யா, சீனாவுக்கு இடையே நிலவும் ஆழமான உறவுகளின் விளைவாக இந்திய - ரஷ்ய உறவுகளில் பாதிப்பு ஏற்படுமா என அப்போது அலிபோவிடம் கேட்கப்பட்டது.
 
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், “ரஷ்யாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவிப்பதற்குப் பதிலாக, ரஷ்ய சந்தையில் இந்தியாவின் ஆதிக்கத்தை அதிகரிக்க ஊக்குவித்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும்,” எனத் தெரிவித்தார்.
 
 
இந்திய எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவில் இருந்து வருகிறது
 
இந்தியாவுக்குள் வரும் ரஷ்ய எண்ணெய் அளவு, என்றைக்கும் தொடருமா என அலிபோவிடம் ஒரு கேள்வி வைக்கப்பட்டது.
 
இதற்குப் பதிலளித்தபோது, “இந்தியாவில் தேவை இருக்கும் வரை, எண்ணெய் விநியோகமும் தொடரும்,” என்று பதில் அளித்தார்.
 
"எண்ணெய் விநியோகம் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2022-23ஆம் நிதியாண்டில் 44.4 பில்லியன் டாலர்களை எட்டியது. இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கை ரஷ்யா விநியோகித்து வருகிறது.
 
இந்நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் ரஷ்யா மிகப்பெரிய பங்குதாரராக மாறியுள்ளது. மேலும், நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு எண்ணெய் விநியோகிக்கத் தேவையான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.
 
சீனாவுடனான ஆழமான உறவுகள் குறித்துப் பேசிய அவர், ரஷ்யா எந்த நாட்டையும் சார்ந்திருக்க விரும்பவில்லை என்று கூறினார்.
 
“சீனாவுடனோ அல்லது வேறு எந்த நாட்டுடனோ பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது என்பது ஓர் அரசியல் சார்ந்த நடவடிக்கை அல்ல,” எனத் தெரிவித்தார் அவர்.
 
"இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் ரஷ்யா மிகச் சிறந்த உறவுகளைப் பேணி வருகிறது. மேலும், இந்த உறவுகள் பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டவை. இது மட்டுமின்றி நாங்கள் மிகவும் வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறோம் என்பதைத் தாண்டி மறைமுகமாக எந்தச் சிந்தனையும் இல்லை," என்றார்.
 
மேலும், “இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் இயல்பாக இருக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது. யூரேசியாவில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இது மிகவும் அவசியம். யுக்ரேன் நெருக்கடியிலும் கூட, உலகின் பொறுப்புள்ள ஒரு சக்தியாக இந்தியா நடந்துகொண்டது என்பதே உண்மை," என்று கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீப்பெட்டி தொழிற்சாலையில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி- முதல்வர்