Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயேசு கிறிஸ்துவின் மரணம் குறித்து அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்த தகவல்கள்

Jesus

Sinoj

, சனி, 30 மார்ச் 2024 (22:52 IST)
மதம் ஒருபுறம் இருக்கட்டும். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் இயேசு என்ற மனிதர் வாழ்ந்தார் என்று சிலர் கருதுகின்றனர்.
 
அதிருப்தியடைந்த ஒரு யூதராக அவர் இருந்தார். தன்னை பின்தொடர்பவர்களை அவர் வழிநடத்தினார். அவரது நடவடிக்கைகள் ரோமானிய பேரரசை தொந்தரவு செய்தது.
 
எனவே, அவர் இறுதியாக ஈஸ்டர் தினத்தன்று சித்திரவதை செய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். இத்தகைய வழியில் மரண தண்டனை வழங்குவது, அக்காலத்தில் நிலவிய பொதுவான நடைமுறை.
 
இயேசுவின் மரணத்திற்குப் பின்னர், அவரைப் பின்தொடர்பவர்கள் அவருடைய போதனைகளைப் பரப்புவதற்குப் பொறுப்பேற்றனர். இயேசு மரணத்திற்குப் பின், புராணம், மதம், இறையியலின் காலம் தொடங்கியது.
 
இந்த மாற்றத்தில், முக்கியமாக அக்காலத்தின் சிறந்த எழுத்தாளர், கிறிஸ்தவ திருச்சபையின் முன்னோடி ஒருவருக்குப் பங்குள்ளது. பைபிளின் பல பகுதிகளை அவர் எழுதியுள்ளார். அவர்தான் பால் ஆஃப் டார்சஸ் (c. 5-67).
 
கி.பி முதல் நூற்றாண்டில், இயேசு இறந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, டி டார்சஸ் ஏழு கடிதங்களை எழுதினார். அவை, இன்றுவரை அழியாமல் உள்ளன.
 
"இந்தக் கடிதங்களின் மையப் பொருளில் மாற்றம் இருப்பதை நாங்கள் கவனிக்கிறோம். அவர் வரலாற்று இயேசு குறித்துப் பேசாமல், விசுவாசத்தின் இயேசு குறித்துப் பேசுகிறார்" என்று வரலாற்று ஆசிரியரும் பேராசிரியருமான ஆண்ட்ரே லியோனார்டோ செவிடரேஸ் தெரிவிக்கிறார்.
 
"தனக்கு அரசியல் மரணம் ஏற்படும் என வரலாற்று இயேசு அறிந்திருக்கிறார். அக்காலத்திய தலைமைத்துவத்தில் மதமும் அரசியலும் கலந்தே இருந்திருக்கிறது," என்று செவிடரேஸ் மேலும் கூறுகிறார்.
 
"இயேசுவின் செயல்களை அரசியல் அல்லது வெறுமனே மதம் என்று பிரிக்க எந்த வழியும் இல்லை. அதற்கு எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இது இயேசு உயிருடன் இருக்கும்போதும் அவர் இறந்த பின்னரும் அவரைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது,” என்கிறார் அவர்.
 
புனித வாரம்: அறிவியல் ரீதியாக இயேசு கிறிஸ்துவின் மரணம் எப்படி நிகழ்ந்திருக்கும்?
இயேசுவின் கடைசி நேர துன்பங்கள்
சிலுவையில் அறையப்பட்டு மரண தண்டனை விதிப்பது அக்காலத்தில் அரிதான நிகழ்வு அல்ல.
 
"சிலுவையில் அறையப்படுவது கி.மு. 217 முதல் அடிமைகள் மற்றும் ரோமானிய பேரரசின் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் ரோமானியர்களால் வழங்கப்பட்ட மரண தண்டனை முறை" என்று அரசியல் விஞ்ஞானியும் மத்திய கிழக்கில் நிபுணத்துவம் பெற்ற வரலாற்றாசிரியருமான ஜெரார்டோ ஃபெராரா விளக்குகிறார்.
 
"இது மிகவும் கொடூரமான, அவமானகரமான ஒரு சித்திரவதை. இந்த தண்டனை ரோமானிய குடிமக்களுக்கு விதிக்கப்படாது. தண்டனை விதிக்கப்படுபவர்களின் சமூக பின்னணியைப் பொறுத்து அவர்களுக்குக் கசையடியும் வழங்கப்பட்டது," என்கிறார் அவர்.
 
"சிலுவையில் அறையப்படுவது ரோமானிய கண்டுபிடிப்பு அல்ல. ஆனால் அது ரோமானியப் பேரரசில் பரவலாக இருந்தது. இப்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் பிரதேசங்களில் இந்த தண்டனை வழக்கமான நடைமுறையாக இருந்தது," என்று செவிடரேஸ் குறிப்பிடுகிறார்.
 
"இயேசு இறந்த சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெருசலேம் கைப்பற்றப்பட்டபோது, ​​ஆயிரக்கணக்கான யூதர்கள் சிலுவையில் அறையப்பட்டனர்."
 
 
சிலுவையில் அறையப்படுவது ஒரு ரோமானிய கண்டுபிடிப்பு அல்ல, ஆனால் அதன் நடைமுறை ரோமானியப் பேரரசில் பரவலாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரே லியோனார்டோ செவிடாரேஸ் கூறுகிறார்.
 
பைபிளில் உள்ள சுவிசேஷங்கள் (கிறிஸ்துவின் உபதேசங்கள்) இயேசுவின் கடைசி மணிநேர துன்பங்களை விவரிக்கின்றன. பைபிளில் குறிப்பிட்டுள்ளதன்படி, அவரை அந்த நேரத்தில் அதிகாரிகள் சிறிது தயக்கத்துடன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டார்.
 
வரலாற்று ரீதியாக இது உண்மையாக இருக்க முடியாது என்று வரலாற்றாசிரியர் செவிடரேஸ் கூறுகிறார். ஏனென்றால், கதைகளின்படி யூதர்களின் பாஸ்காவுக்கு (யூத விழா) முன்பு இயேசு கொலை செய்யப்பட்டார்.
 
"ஈஸ்டர் விடுமுறை ஒரு அரசியல் விடுமுறையாகும். இந்நாள், பண்டைய எகிப்தின் அடிமை முறையிலிருந்து விடுதலையாகிய விடுதலைப் பயணத்தைக் குறிக்கிறது," என்று வரலாற்றாசிரியர் நினைவு கூர்ந்தார்.
 
"எனவே கற்பனை செய்து பாருங்கள்: யூதர்களால் நிரம்பி வழியும் ஒரு நகரம், பல யூதர்களுக்கு நடுவில், எப்படி ஒரு யூதரை சிலுவையில் அறைந்து நகரைச் சுற்றி வரச் செய்திருக்க முடியும்?
 
அப்படி நிகழ்ந்திருந்தால் அதுவொரு கிளர்ச்சிக்கான அழைப்பாக இருந்திருக்கும். இயேசு உடனடியாகப் பிடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்," என்று அவர் கூறுகிறார்.
 
செவிடரேஸை பொறுத்தவரை, வியாழன் முதல் வெள்ளி வரை அதிகாலையில் இயேசு கைது செய்யப்பட்டதற்கும், சிலுவையில் அறையப்பட்டதற்கும் இடையிலான நிகழ்வுகளுக்கு வரலாற்றுபூர்வ ஆதாரங்கள் இல்லை. அது இறையியல் சார்ந்தது மட்டுமே.
 
சில நாட்களுக்கு முன்பு, பனை ஞாயிறு அன்று, இயேசு ஜெருசலேமுக்குள் நுழைந்தார். பெரிய நகருக்குள் இயேசு செல்வது அரிதானது என்பதால், அன்றைய தினம் அதிகாரிகள் அவரைப் பிடித்தனர்.
 
இயேசு கிறிஸ்துவின் மரணம் குறித்து அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்த தகவல்கள்பட மூலாதாரம்,GETTY IMAGES
நான்கு தூண்கள்
ஆனால் அது ஏன் சங்கடமாக இருந்தது? ஏனென்றால் அவர் ஒரு புதிய ராஜ்ஜியத்தை வழிநடத்தினார். அது, பரலோக ராஜ்ஜியம் அல்லது தந்தையின் ராஜ்ஜியம்.
 
நான்கு அடிப்படைத் தூண்களின்படி, அவரது பேச்சு ரோமானியப் பேரரசுக்கு முற்றிலும் எதிரான ஒரு ராஜ்ஜியத்தை பற்றியது. "அந்த யோசனையின் காரணமாக அவர் இயேசு கிறிஸ்துவாக மாறினார்" என்று செவிடரேஸ் கூறுகிறார்.
 
இயேசுவால் பாதுகாக்கப்பட்ட ராஜ்ஜியத்தின் முதல் தூண் நீதி.
 
நீதி மட்டுமல்ல, தெய்வீக நீதி. "அவர் கடவுளைத் தனது பரலோகத் தந்தை என்று குறிப்பிட்டார்" என்று வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.
 
"என் ராஜ்ஜியத்தில் நீதி இருக்கிறது; சீசருடையது அநீதியின் ராஜ்ஜியம்’ என இயேசு கூறுகிறார்,” என்கிறார் அவர்.
 
ரோமானியர்களால் திணிக்கப்பட்ட போர்க்கால அரசாங்கத்திற்கு எதிராகவும் இயேசு சமாதான ராஜ்ஜியத்தை அறிவித்தார்.
 
இரண்டாவது தூண் அனைவரும் சமமாக உண்பது.
 
"இயேசுவுடன் இருந்த குழுவினர் அவருடைய பிரசங்கத்தை சுவாரஸ்யமானதாக உணர்ந்தனர்" என்கிறார் செவிடரேஸ்.
 
இறுதியாக, இயேசு அனைவரின் பங்கேற்புடன் சமத்துவ ராஜ்ஜியத்தை பற்றிப் பேசினார். "இயேசுவின் ஊழியம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரியது" என்று வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.
 
இயேசு கிறிஸ்துவின் மரணம் குறித்து அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்த தகவல்கள்பட மூலாதாரம்,GETTY IMAGES
"முக்கியமான விஷயம் என்னவென்றால், அரசியல், மதம், பொருளாதாரம், சமூகம் என அனைத்தும் இயேசு கிறிஸ்து பிரசங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அரசியல் எங்கு தொடங்கியது, மதம் எங்கு முடிந்தது, சமூக பிரச்னைகள் எங்கு தொடங்கின என்பது தெளிவாகத் தெரியவில்லை. எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டது," என்று அவர் தொடர்கிறார்.
 
"கடவுளின் ராஜ்ஜியத்தால் இயேசு இறக்கிறார். இது இயேசுவின் இயக்கம். இயேசு இல்லாத அடுத்த தலைமுறை இயக்கம், அவரது மரணத்தை ஒரு தியாக மரணம் எனக் குறிக்கிறது. இது ஒரு கடுமையான மத பரிமாணத்தைப் பெறுகிறது."
 
இப்பகுதியில் பணியாற்றிய ரோமானிய அதிகாரிகள் ஏற்கெனவே இயேசுவின் நகர்வுகளைக் கண்காணித்து வந்தனர். அவர் ஜெருசலேமுக்குள் நுழைய முடிவு செய்தபோது அவர்கள் அதைச் சரியான வாய்ப்பாகக் கருதினர்.
 
"பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த யூதர்கள் நிறைந்த நகரத்தில் ஈஸ்டர் தினத்தன்று, அவர் கோவிலில் குழப்பத்தை உருவாக்குவதை அவர்கள் கண்டார்கள். எனவே, அவரை விரைவில் கைது செய்து சிலுவையில் அறைய வேண்டும் என அதிகாரிகள் கருதினர்," என்று வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
 
"அனைத்து சுவிசேஷகர்களும் இயேசுவின் மரணத்தை வெள்ளிக்கிழமை, ஈஸ்டர் விடுமுறைக்குள் நிகழ்த்த ஒப்புக்கொள்கிறார்கள்" என்று ஃபெராரா கருத்து தெரிவிக்கிறார்.
 
விட்டா டி கேஸு கிரிஸ்டோ ( Vita di Gesù Cristo) எனும் புத்தகத்தின் ஆசிரியரும் இத்தாலிய பாதிரியாரும் விவிலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான கிசுபே ரிசியோட்டி (Giuseppe Ricciotti), வரலாற்று தகவல்களைச் சேகரித்து, மரண தண்டனை பெரும்பாலும் ஏப்ரல் 7, கி.பி.30க்கு சமமான தேதியில் நடந்ததாக முடிவு செய்தார்.
 
 
கிறிஸ்துவின் பேச்சு ரோமானிய பேரரசின் பேச்சுக்கு முற்றிலும் எதிரான ராஜ்ஜியத்தை பற்றியது.
 
பண்டைய ரோமில் ஒரு குற்றவாளியைத் தூக்கிலிட மூன்று வழிகள் இருந்தன. வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி, மரண தண்டனைக்கு ஆளானவர்களின் உடலைப் பதப்படுத்த முடியாது.
 
பொதுவாக, கொலை, தந்தையைக் கொலை செய்தல், அரசுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரோமானிய திறந்தவெளி அரங்குக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
 
அரங்கில், இந்தக் குற்றவாளிகள் மரணம் வரை பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இறந்த பிறகு அவர்களின் உடல் எச்சங்கள் பூச்சிகள் திண்பதற்கு விடப்பட்டன. மரண தண்டனையின் இரண்டாவது வடிவம் நெருப்பு. இதில், இறந்தவர்களின் தடயமே இல்லாமல் ஆனது.
 
சிலுவையில் அறையப்படுவது, தங்கள் எஜமானர்களின் உயிரைக் கொல்ல முயன்ற அடிமைகளுக்கும், கிளர்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கும், இயேசுவை போன்ற ரோமானிய குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் வழங்கப்படும் தண்டனையாக இருந்தது.
 
"சிலுவையில் அறையப்படுபவர்கள் உயிருடன் இருக்கும்போதே, அவர்களை வேட்டையாடும் பறவைகள் உண்ணத் தொடங்கும். அதன்பின், மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு, சிலுவையில் இருந்து அழுகி விழும் அவர்களின் சதைகளை விலங்குகள் உண்ணும்" என செவிடாரெஸ் தெரிவிக்கிறார்.
 
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், நியூயார்க் மெடிகோ-லீகல் இன்ஸ்டிடியூட்டில் முன்னாள் தலைமை நோயியல் நிபுணருமான ஃபிரடெரிக் தாமஸ் ஜூகிபே (1928-2013), 2000களின் முற்பகுதியில் மனித உடலை சிலுவையில் அறைவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கண்காணிக்க பல தன்னார்வலர்களைக் கொண்டு தொடர்ச்சியான சோதனைகளை நடத்தினார்.
 
இந்த சோதனைகளின் முடிவுகள் ‘க்ரூசஃபிக்‌ஷன் ஆஃப் ஜீசஸ்: எ ஃபாரன்சிக் என்கொயரி’ எனும் புத்தகத்தில் வெளியிடப்பட்டது.
 
அந்த ஆய்வுக்கு, 2.34 மீட்டர் உயரமும் 2 மீட்டர் நீளமும் கொண்ட மரச் சிலுவைகள் பயன்படுத்தப்பட்டன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் அந்த மரச்சிலுவையில் கட்டப்பட்டு, அவர்களின் உடலில் நிகழும் மாற்றங்கள் மின்னணு முறையில் கண்காணிக்கப்பட்டன. எலக்ட்ரோ கார்டியோகிராம் மூலம் அவர்களின் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை அளவிடப்பட்டது.
 
அவர்கள் சிலுவைக்குப் பின்னே தங்கள் கழுத்தைச் சாய்த்துக்கொண்டு ஓய்வெடுக்க முடியாது. இதனால் கழுத்தில் கடுமையான வலி, முழங்கால், தொடைகளில் தொடர்ந்து கூச்ச உணர்வு ஏற்பட்டது.
 
இயேசுவின் காலத்தில், பல்வேறு வகையான சிலுவைகள் மரண தண்டனைகளில் பயன்படுத்தப்பட்டன. அதில், ’டி’ வடிவ (T) சிலுவைகளும் குத்துவாள் வடிவ சிலுவைகளும் முக்கியமானவையாக இருந்தன. இயேசுவுக்கு எந்த வகை சிலுவை பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் ஆராய்ச்சியாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. வாள் வடிவ சிலுவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என, ஃபெராரா நம்புகிறார்.
 
 
தண்டனை விவரங்கள் வரலாற்று ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
 
மரண தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்குச் செல்லும் வழியில் சிலுவையின் கிடைமட்டப் பகுதியை மட்டுமே இயேசு சுமந்து சென்றார் என, டாக்டர் ஜூகிபே தெரிவிக்கிறார். நகருக்கு வெளியே சிலுவையில் அறையப்படும் இடத்தில் செங்குத்தான சிலுவை சுமக்கப்படும் என்று அவர் எழுதினார்.
 
கிடைமட்ட பகுதி சுமார் 22 கிலோ எடையுள்ளதாக இருந்தது. சிலுவையின் கிடைமட்டம், செங்குத்து பகுதியைச் சேர்த்து 80 முதல் 90 கிலோ வரை இருந்தது. அதைச் சுமந்துகொண்டு நீண்ட நடைபயணத்தை மேற்கொள்ள முடியாது. இயேசு சுமார் 8 கி.மீ. சென்றதாக நம்பப்படுகிறது.
 
"தண்டனையின் விவரங்கள் ரோமானிய பழக்க வழக்கங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தண்டனையைப் பெறுபவர்களின் கைகள் சிலுவையில் கட்டப்பட்டிருக்கும் அல்லது ஆணியால் அறையப்பட்டிருக்கும்," என்று ஃபெராரா விளக்குகிறார்.
 
"மறுபுறம், பாதங்களும் கட்டப்பட்டும் அல்லது ஆணியால் அறையப்படும். மிக மெதுவாக மரணம் நிகழும் வகையில் பயங்கரமான துன்பங்களுடனும் சித்ரவதைகள் செய்யப்பட்டன. சிலுவையில் அறையப்பட்டு, நிலத்திலிருந்து அரை மீட்டர் உயரத்திற்கு நிறுத்தப்படுவர். நிர்வாணமாக்கப்பட்டுப் பல மணிநேம் அல்லது நாள்கணக்கில் சித்ரவதைகள் செய்யப்படும். இதனால், வலி, குமட்டல் மற்றும் சரியாக சுவாசிக்க இயலாமை போன்றவை ஏற்படும். ரத்தம் கால்களுக்குக்கூட செல்லாது என்பதால் கை, கால்கள் சோர்வடையும்," என்கிறார் அவர்.
 
ஆராய்ச்சியாளர்களிடையே உள்ள ஒருமித்த கருத்து என்னவென்றால், ஆணிகள் உள்ளங்கைகளில் அல்லாமல் மணிக்கட்டுகளில் அடிக்கப்பட்டன. இதனால், உடல் எடையின் காரணமாக, கைகள் முழுதும் கிழிந்துவிடும்.
 
"கைகளின் அமைப்பு மற்றும் முக்கியமான எலும்புகள் இல்லாததால், அதிக எடை காரணமாக கைகளின் சதை கிழிந்துவிடும்," என்று ஃபெராரா கூறுகிறார்.
 
ஆணிகள் 12.5 சென்டிமீட்டர் நீளம் கொண்டவை என்று கூறும் டாக்டர் ஜூகிபே, இயேசுவின் உள்ளங்கையின் மையத்தில் அல்லாமல், கட்டை விரலுக்குக் கீழேதான் ஆணி அடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.
 
ஏற்கெனவே சிலுவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இயேசுவின் கால்களும் ஆணிகளால் அடிக்கப்பட்டன. ஆணி அடிக்கப்படுவதால், முக்கியமான நரம்புகள் பாதிக்கப்படுவதால், தாங்க முடியாத மற்றும் தொடர்ச்சியான வலி ஏற்படும்.
 
"இத்தகைய சித்ரவதைகள் செய்யப்படும் ஒரு நபர் இறக்க எவ்வளவு நேரம் ஆகும்? அவர்கள் தசைப்பிடிப்பு ஏற்பட்டு இறப்பர். இதனால் அவர்களின் தசைகள் சிதைந்து, உடல் முழுவதும் பெரும் வலியுடன் காற்று பற்றாக்குறையால் இறப்பர்," என்கிறார் செவிட்டரேஸ்.
 
இத்தகைய சித்ரவதைகளால் இயேசு மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக இறந்தார் என்று என்று ஃபெராரா கூறுகிறார்.
 
அவரது சோதனைகள் மூலம், ஜூகிபே இயேசுவின் மரணம் பற்றி மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று கருதுகோள்களைப் பகுப்பாய்வு செய்தார்: மூச்சுத்திணறல், மாரடைப்பு மற்றும் ரத்தப்போக்கு அதிர்ச்சி.
 
அவருடைய ஆய்வின் முடிவு என்னவென்றால், இயேசுவுக்கு ஹைபோவோலீமியா காரணமாக மாரடைப்பு ஏற்பட்டது. அதாவது, சிலுவையில் அறையப்பட்டு சித்திரவதைகள் செய்யப்பட்டதால் அவருக்கு ரத்தத்தின் அளவு கணிசமாகக் குறைந்தது. அதனால், ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் இறந்திருப்பார்.
 
"[சிலுவை மரணம்] உடல் ரீதியான வன்முறையின் மரணம். சிலுவையில் அறையப்பட்ட நபரின் உடல்நிலையைப் பொருத்து அவர் இறக்கும் நேரம் மாறுபடும். சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவர் அனுபவித்த சித்திரவதை மிகவும் தீவிரமானதாக இருந்திருந்தால், சிறிது நேரத்திலேயே இறந்திருக்கலாம்," என்கிறார் செவிட்டரேஸ்.
 
"இயேசுவின் வேதனை சில மணிநேரங்களுக்கு நீடித்திருக்கலாம். சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பான கொடுமைகள் காரணமாக ஏற்பட்ட அபரிமிதமான ரத்த இழப்பால், ஒருவேளை இரண்டு மணிநேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே இறந்திருக்கலாம்," என்று ஃபெராரா நம்புகிறார்.
 
 
"சிலுவை மரணம் என்பது உடல் வன்முறையின் மரணம்."
 
சிலுவையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ரோமானியர்களால் "அழுக்கானவர்" என்றோ, ரோமானிய குடிமகன் அல்லாதவராகவோ, சமூக அடுக்கில் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறார் என்றாலோ, மரண தண்டனையை நிறைவேற்றுபவர்கள் அந்நபர்களை அனைத்து வகையான தாக்குதல்களுக்கும் உள்ளாக்கியதாகக் கருதப்படுகிறது. இவற்றுக்கு, அசோராக் எனப்படும் ஒரு குறிப்பிட்ட சவுக்கு பயன்படுத்தப்பட்டது.
 
இயேசுவை பொறுத்த வரையில், தோலைக் கிழித்து, சதைத் துண்டுகளைக் கிழிக்கும் திறன்கொண்ட முள் முனையுடைய உலோகப் பந்துகள் பயன்படுத்தப்பட்டதாக ஃபெராரா நம்புகிறார்.
 
"அவர் சமூகத்தின் விளிம்புநிலையில் இருந்து வந்த 'குற்றவாளி', உன்னதமற்ற தோற்றம் கொண்டவர். இயேசு ரோமானிய பேரரசின் ஒரு சிறிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த யூதர்" என்று ஃபெராரா கூறுகிறார்.
 
டாக்டர் ஜூகிபே மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி, இயேசுவை சாட்டையால் அடிக்கப் பயன்படுத்தப்பட்ட சாட்டையின் மாதிரி மூன்று கீற்றுகளால் செய்யப்பட்டது.
 
இதுபோன்ற தண்டனை பெற்றவர்கள் அக்கருவியால் 39 அடிகளைப் பெறுவது வழக்கம்; ஆட்டுக்குட்டி எலும்பால் செய்யப்பட்ட இவற்றால் அடிக்கப்படும்போது 117 கசையடிகளைப் பெறுவது போன்று இருக்கும்.
 
நடுக்கம், மயக்கம், கடுமையான ரத்தப்போக்கு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் சேதம், நுரையீரலில் ரத்தம் மற்றும் திரவங்கள் குவிதல் போன்றவை இதனால் ஏற்படும் என மருத்துவர் விளக்குகிறார்.
 
சிலுவையில் அறையப்படும் இடத்திற்குச் செல்லும் வழியில், சித்திரவதைக்கு வரம்புகள் இல்லை. அவர்கள் தாக்கப்பட்டனர், கேலி செய்யப்பட்டனர், தீவிர வன்முறையால் பாதிக்கப்பட்டனர். கேலியாக, இயேசுவின் தலையில் முள் கிரீடம் வைக்கப்பட்டதாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முள்கிரீடத்திற்கு எந்தச் செடி பயன்படுத்தப்பட்டது என்பதை ஜூகிபே அறிய விரும்பினார். தாவரவியலாளர்கள் மற்றும் மத்திய கிழக்கு அறிஞர்களை நேர்காணல் செய்த பிறகு, போதுமான பெரிய முள்ளைக் கொண்டிருக்கும் சாத்தியமான தாவர இனங்களைக் கண்டறிந்தார். அவற்றின் விதைகளைப் பெற்று தானே அந்தத் தாவரங்களை வளர்த்து பகுப்பாய்வு செய்தார்.
 
இயேசு சிலுவையில் அறையப்பட்டது, பைபிள் சொல்வதற்கு மாறாக, நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து வெகு தொலைவில் நிகழ்ந்தது என்று செவிட்டரேஸ் கூறுகிறார். ஏனென்றால் மக்கள் மத்தியில் கிளர்ச்சியைத் தூண்டாதபடி இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்கலாம் என்கிறார் அவர்.
 
மேலும், மதரீதியாகக் கூறப்படும் கதைகளைப் போல் அல்லாமல், இயேசு அடக்கம் செய்யப்பட்டதோ அவருடைய உடலின் எச்சங்களோ பாதுகாக்கப்படவில்லை.
 
"சிலுவையில் அறையப்பட்டவர்கள் புதைக்கப்படவில்லை. அவர்கள் உயிருடன் இருந்தாலும் சிலுவையிலேயே அறையப்பட்டிருந்தார்கள். அவர்களால் அசைய முடியாது என்பதை வேட்டையாடும் பறவைகள் அறிந்திருந்தன. அவர்களின் கண்கள், மூக்கு மற்றும் கன்னங்களை அப்பறவைகள் சாப்பிட்டன," என்று அவர் விளக்குகிறார்.
 
"அவர்களின் உடல் சிலுவையிலேயே நான்கு அல்லது ஐந்து நாட்கள், தொங்கிக் கொண்டிருக்கும். சதை அழுக ஆரம்பித்துக் கீழே விழும். நாய்களும் மற்ற விலங்குகளும் தங்கள் விருந்துக்கு அந்த மனித எச்சங்களைப் பயன்படுத்திக் கொண்டன," என்று அவர் கூறினார்.
 
அவரைப் பொறுத்தவரை, இந்த ஆய்வறிக்கை என்னவென்றால், அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான அடிமைகள் சிலுவையில் அறையப்பட்டனர் . கல்லறைகள் அல்லது எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கான பதிவுகள் எதுவும் இல்லை.
 
"வரலாற்றுரீதியாக, சிலுவையில் அறையப்பட்டவர்கள் புதைக்கப்படவில்லை," என்று அவர் கூறுகிறார். "ஆனால் இறையியல் ரீதியாக, இயேசு அடக்கம் செய்யப்பட்டு, பின்னர் உயிர்த்தெழுப்பப்பட வேண்டியிருந்தது தெளிவாகிறது,"

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமாவளவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி பிரசாரம்