Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"இந்திய மீனவர்களால் எங்கள் வாழ்வாதாரம் பறிபோகிறது" - இலங்கை மீனவர்கள் கொந்தளிப்பது ஏன்?

fisherman

Sinoj

, திங்கள், 4 மார்ச் 2024 (22:04 IST)
தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்களும், இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்நாடு மீனவர்களும் நடுக்கடலில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். மீனவர்களுக்கு இடையே என்ன பிரச்னை?
 
தமிழக மீனவர்கள் தங்கள் கடற்பரப்பினுள் வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி, அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று (ஞாயிறு, மார்ச் 3) நடத்தினர்.
 
யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்துள்ள கடற்கரைப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர். படகுகளில் கறுப்பு நிறக்கொடிகளை பறக்கவிட்டு, நடுக்கடலுக்கு சென்று இலங்கை மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
 
இதனால், இதை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிறன்று மண்டபம் மற்றும் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கவில்லை.
 
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தினர்.
 
முன்னர், கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தனர்.
 
இரண்டு நாட்டு மீனவர்களும் கடலில் போராட்டம் நடத்தும் அளவுக்கு என்ன நடக்கிறது இவ்விஷயத்தில்?
 
அதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ், யாழ்ப்பாணம் மற்றும் ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்திய மீனவர்களிடம் பேசியது.
 
ல் கறுப்பு நிறக்கொடிகளை பறக்கவிட்டு, நடுக்கடலுக்கு சென்று இலங்கை மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்
 
போராட்டம் எப்படி நடத்தப்பட்டது?
மார்ச் 3-ஆம் தேதி இலங்கை யாழ்ப்பாணம் கடலில் சுமார் மூன்று மணிநேரம் நடத்தப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்திய மீனவர்களின் வருகையை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
 
தடை செய்யப்பட்டுள்ள இழுவை முறையிலான மீன்பிடி நடவடிக்கைகளில் இந்திய மீனவர்கள் ஈடுபடுவதனால் இலங்கையின் கடல் வளங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தமது கடல் வளத்தையும் அழித்து, தமது வாழ்வாதாரத்தையும் இந்திய மீனவர்கள் அழித்து வருவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
 
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இலங்கை கடற்படைக்கு மகஜரொன்றை கையளிக்க இலங்கை மீனவர்கள் முயற்சித்தனர்.
 
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான படகை மறித்து, மகஜரை கையளிக்க முயற்சித்த போதிலும், இலங்கை கடற்படை படகு நிறுத்தாது அங்கிருந்து பயணித்தது.
 
இதையடுத்து, யாழ்ப்பாணம் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் கரைக்குத் திரும்பினார்கள்.
 
இலங்கை மீனவர்கள் சொல்வது என்ன?
 
போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர் அருள்தாஸ், "இந்திய மீனவர்களின் வருகையால் எங்கள் மக்கள் படகை இழந்திருக்கிறார்கள். தொழில் செய்ய முடியவில்லை," என்கிறார்.
 
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக, தமது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாக யாழ்ப்பாணத்து மீனவர்கள் கூறுகின்றனர்.
 
''நேற்று 8 வலைகள் இல்லாமல் போயின. மூன்று பேரின் வலைகளை அறுத்து விட்டார்கள். எப்படித் தொழில் செய்வது. இன்றைக்கு தொழிலுக்கு போகாத காரணம் இது தான். இப்படி தொழில் செய்து என்ன பிரயோசனம்? ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இல்லாமல் போயின. அப்படியே எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள்," என ஒரு மீனவர் குறிப்பிட்டார்.
 
“ஒருமுறை வல்வெட்டித்துறை கடலுக்கு வந்து இந்திய மீனவர்கள் எங்கள் வலைகளை இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். எங்கள் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிராலர் வலைகளை நிறுத்தினால்தான், இலங்கை மீனவர்கள் வாழ முடியும்," என மற்றுமொரு மீனவர் கூறினார்.
 
இந்திய மீனவர்கள் தங்கள் கடற்பரப்பில் புகுந்து டிராலர் வலைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆவன செய்யவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறினர்.
 
இலங்கை அமைச்சரின் பதில் என்ன?
இலங்கை மீனவர்கள், இலங்கை அரசாங்கம் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டு குறித்து, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பிபிசி தமிழ் வினவியது.
 
“அரசாங்கத்தை பொருத்தவரையில் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் நாங்கள் எங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம்," என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளித்தார்.
 
கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தனர்
 
தமிழக மீனவர்கள் கூறுவது என்ன?
 
இலங்கை மீனவர்கள் நடத்திய இந்தப் போராட்டம் குறித்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதி எமரிட் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த வாரம் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகக் கூறினார்.
 
“ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை, இந்திய அரசை கண்டித்து மட்டும் போராட்டம் நடத்தினரே தவிர இலங்கை மீனவர்களுக்கு எதிராக இதுவரை தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தியதில்லை. ஆனால் இன்று தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலில் போராட்டம் நடத்தியது தமிழக மீனவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது,” என்றார்.
 
மேலும் பேசிய அவர், இரு நாட்டு அரசுகளும் உடனடியாக மீனவர் பிரச்சனையில் கவனம் செலுத்தி மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளதாகக் கூறினார்.
 
“இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்னையை தீர்வு கிடைப்பதற்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையில் மட்டுமே நிரந்தர தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது."
 
“இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே இரு நாட்டு அரசும் மீனவர் பிரச்னைக்கு கவனம் செலுத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க தமிழக மீனவர்கள் எதையும் விட்டுக் கொடுத்து போவதற்கு தயாராக உள்ளோம்,” என்றார்.
 
இலங்கை மீனவர்களுடன் மோதல் போக்கு தொடர்வதை தமிழக மீனவர்கள் விரும்பவில்லை. வரையறுக்கப்பட்ட மீன்பிடி தொழில் செய்வதற்கு இரு நாட்டு அரசும் உதவி செய்ய வேண்டும் என்பது தமிழக மீனவர்கள் கோரிக்கை என்றார் மீனவ சங்க பிரதிநிதி எமரிட்.
 
இலங்கை மீனவர்களின் கருப்புக்கொடி போராட்டம் குறித்து இலங்கை இந்திய பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த சில மாதங்களாக இருநாட்டு மீனவர்கள் இடையே பிரச்னை பெரிதாகி வருகிறது, என்றார்.
 
"இது தொடர்பாகவும், இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய மீன்வளத்துறை அமைச்சர் ரூபாலா மற்றும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருவரையும் ராமேஸ்வரம் மீனவர்கள் டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். இருவரும் விரைவில் இரு நாட்டு மீனவ பேச்சுவார்த்தை நடைபெற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ள நிலையில் இன்று தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் கடலில் கருப்பு கொடி கட்டி முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர், இது வேதனையளிக்கிறது," என்றார்.
 
“மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக இலங்கையில் மீனவர்கள் போராடுகிறார்கள். அதை தமிழக மீனவர்கள் ஏற்று கொள்ள கூடிய ஒன்று தான். அதே நேரத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை அடைக்கபட்ட மீனவர்களுக்காக இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினோம்.
 
“ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தியதால் இன்று இலங்கை மீனவர்கள் கருப்பு கொடி கட்டி இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது எந்த வகையிலும் நியாயம் இல்லை,” என்றார்.
 
மேலும் பேசிய அவர், இரு நாட்டு மீனவர்களும் ஒருவருக்கொருவர் ஆர்ப்பாட்டம் செய்வதால் எந்த பயனும் இல்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுமே தவிர பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது, என்றார்.
 
“இலங்கை மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக மீனவர்கள் மீன்பிடி முறையில் மாற்று திட்டம் கொண்டு வர பல்வேறு யோசனைகளை செய்து வருகிறோம். தமிழக மீனவர்கள் இழுவை மடி படகை மாற்றி மீன்பிடிக்க அரசுடன் ஆலோசனை செய்து மாற்றுத் திட்டத்திற்கு காத்திருக்கின்றோம்."
 
"போராட்டம் தொடர்ந்தால் கடலில் இரு நாட்டு மீனவர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்படும். இரு நாட்டு மீனவர் பேச்சு வார்த்தையை மீண்டும் நடத்தி மீனவப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க அரசாங்கங்கள் முயற்சி செய்ய வேண்டும்," என இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசுராஜா தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.16,500 கோடி அபராதம்