Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானில் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் எப்படி செயல்படுகின்றன?

பாகிஸ்தானில் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் எப்படி செயல்படுகின்றன?

Sinoj

, செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (21:26 IST)
குளிர் மற்றும் பனிமூட்டமான பிற்பகலில், லாகூரில் உள்ள மன்சூராவில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைமையகத்தின் மசூதியில் மதிய தொழுகைக்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்களுள் ஜமாத்-இ-இஸ்லாமி செயலாளர் அமீர்-உல்-அஸீமும் அடங்குவார்.
 
அவர்கள் தொழுகை முடிந்ததும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ரிக்ஷாக்களில் ஏறி ஊர்வலமாக அருகில் உள்ள சந்தைக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
 
பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமி போட்டியிடுகிறது. அக்கட்சி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு 774 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
 
தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படுவதற்கு முன், அமீர் உல் அஸீம் பிபிசியிடம், "எங்களுக்கு மக்கள் மீது ஒரு பிடிப்பு உள்ளது. நாங்கள் அவர்களின் நல்லது கெட்டதில் பங்கெடுத்துள்ளோம். தொற்றுநோய்கள், வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளின் போது எங்களின் பணிகளை மக்கள் பார்த்துள்ளனர். மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், "எங்கள் கதவுகள் அனைவருக்கும் திறந்தே இருக்கிறது. நாங்கள் வகுப்புவாதக் கட்சி அல்ல. திருமணம், இறுதிச் சடங்குகள் மற்றும் விவாகரத்து போன்ற விவகாரங்களுக்கு மட்டும் இஸ்லாம் மட்டுப்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இஸ்லாமிய அரசியல் அமைப்பில் பாகிஸ்தான் இயங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இவற்றைத்தான் மாற்றப் போகிறோம்" என்றார் அவர்.
 
ஜமாத்-இ-இஸ்லாமி 1941-ல் இஸ்லாமிய அறிஞரும் இறையியலாளருமான சையத் அப்துல் அலா மௌதூதியால் நிறுவப்பட்டது. ஜமாத்-இ-இஸ்லாமி அதன் தொடக்கத்திலிருந்தே சமூக மற்றும் அரசியல் இயக்கமாக இருந்து வருகிறது.
 
இக்கட்சி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு முன், பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களிலும் பங்கெடுத்துள்ளது. ஆனால், பெரியளவில் வெற்றி பெற முடியாமல் போனதால் இம்முறை அமீர்-உல்-அஸீம் தனித்துப் போட்டியிடுகிறார்.
 
அவர் கூறுகையில், “முன்னதாக, ஜமாத்-இ-இஸ்லாமிக்கு வெவ்வேறு முன்னுரிமைகள் இருந்தன. ஆரம்பத்தில் நாங்கள் தவாத்-இ-இஸ்லாமியில் கவனம் செலுத்தினோம். அதன்படி, இஸ்லாத்தின் செய்தியை எகிப்திலிருந்து ஆப்பிரிக்காவிற்கு இலக்கியங்கள் வாயிலாக எடுத்துச் சென்றோம். அடுத்தகட்டமாக, அடிமட்ட மக்களுக்கு சேவை செய்ய உறுதி பூண்டுள்ளோம்" என்றார்.
 
“அல்-கித்மத் அறக்கட்டளையை ஜமாத்-இ-இஸ்லாமியின் தொண்டுப் பிரிவாக நாங்கள் நிறுவினோம். இப்போது ஜமாத்-இ-இஸ்லாமியை அரசியலின் மைய நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்கிறோம். ஆரம்பத்தில் நாங்கள் பெரிய வெற்றியைப் பெறாமல் போகலாம். ஆனால், விரைவில் நாங்கள் அதை அடைவோம்" என்றார்.
 
அமீர்-உல்-அஸீம் தலைமையிலான ஜமாத்-இ-இஸ்லாமி குழுவினர் சந்தையில் உள்ள ஒவ்வொரு கடைகளையும் பார்வையிட்டனர். கடைக்காரர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி ஜமாத் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அப்போது சிலர் அமீர்-உல்-அஸீமுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். சிலர் பணவீக்கம் குறித்து அவரிடம் புகார் தெரிவித்தனர்.
 
தனக்கு அருகில் கூடியிருந்த வாக்காளர்கள் மற்றும் மக்களிடம் பேசிய அமீர் உல் அஸீம், நாட்டில் இருந்து ஊழலை ஒழிப்போம், சலுகை கலாசாரத்தை ஊக்கப்படுத்த மாட்டோம் என்றார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஜமாத்-இ-இஸ்லாமி இந்தியாவுக்கு எதிரான கட்சி. ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஜிகாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. காஷ்மீர், பாலத்தீனம் போன்ற பிரச்னைகளை தீர்க்க இதுவே ஒரே வழி என்று அக்கட்சி நம்புகிறது.
 
ஜமாத்-இ-இஸ்லாமி காஸா மக்களுக்கு ஆதரவாக பல பேரணிகளை ஏற்பாடு செய்து தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் பெரும் பகுதியை அங்கு அனுப்பி வைத்தது.
 
இருப்பினும், பல ஆய்வாளர்கள் ஜமாத்-இ-இஸ்லாமி தனது அடிப்படைவாத பிம்பத்தை மாற்றி தன்னை தாராளவாத அரசியல் சக்தியாக காட்ட முயற்சிப்பதாக நம்புகின்றனர்.
 
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மக்கள் எங்களை அடிப்படைவாதிகள் என்றும் ஆட்சிக்கு வந்தால் கையை வெட்டுவோம் என்றும் நினைத்தார்கள். எங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாகவும் நாங்கள் அமெரிக்க ராணுவத்தின் பி டீம் என்றும் சிலர் நினைத்தனர்" என்றார்.
 
அவர் பேசுகையில், “மக்கள் எங்களைப் பற்றிய இந்த கருத்தை ஊடகங்கள் மூலம் உருவாக்கிக் கொண்டனர். ஆனால், இப்போது சமூக ஊடகங்கள் எங்களை பற்றியும் எங்கள் எண்ணங்களைப் பற்றியும் மக்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு தளத்தை வழங்கியுள்ளன" என்றார்.
 
மஸ்ஜித் ரஹ்மத்துல்-லில்-அலெமீன் லாகூரில் உள்ள முல்தான் சாலையில் மன்சூராவிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. இது தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தானின் நிறுவனர் காதிம் ஹுசைன் ரிஸ்வியின் ஆலயம். அவருடைய சீடர்கள் குழு ஒன்று இங்கு கூடியிருந்தது. “லப்பைக் லப்பைக் லப்பைக் யா ரசூல் அல்லா” என்று கைகளை உயர்த்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
 
தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (டி.எல்.பி) என்பது கிட்டத்தட்ட 83 வருட ஜமாத்-இ-இஸ்லாமியில் இருந்து வேறுபட்ட ஒரு புதிய கட்சியாகும். இது 2015-ல் காதிம் ஹுசைன் ரிஸ்வி என்பவரால் நிறுவப்பட்டது.
 
அரசியல் விமர்சகர் சல்மான் கானி, டி.எல்.பி கட்சி இயற்கையாக உருவானது அல்ல என்று நம்புகிறார். இது 2015-ல் லாகூரில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக மற்றொரு மத அரசியல் கட்சியான மில்லி முஸ்லிம் லீக் (எம்.எம்.எல்) உடன் தொடங்கப்பட்டது.
 
மில்லி முஸ்லிம் லீக் ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவாவின் அரசியல் பிரிவாக இருந்தது.
 
"முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் நவாஸின் வாக்குகளைப் பிரிப்பதே இதன் நோக்கம்” என்கிறார் சல்மான். அவர் லாகூர் இடைத்தேர்தலில் வேட்பாளராக இருந்தார். டி.எல்.பி மற்றும் எம்.எம்.எல் ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 15 ஆயிரம் வாக்குகள் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அக்கட்சிகளால் இதைச் செய்ய முடியவில்லை. குல்சூம் நவாஸ் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், முதல் தேர்தலுக்குப் பிறகும் இந்த இரு கட்சிகளும் சிறப்பாக செயல்பட்டன.
 
இந்த இரண்டு கட்சிகளையும் யார் தொடங்கினார்கள் என்ற கேள்விக்கு, கானி நேரடியாக ராணுவத்தின் பெயரை குறிப்பிடவில்லை.
 
மில்லி முஸ்லிம் லீக் கட்சியால் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடியவில்லை. ஹபீஸ் சயீத் உட்பட தலைவர்கள் பலர் சிறையில் இருந்தனர். எம்.எம்.எல் அடுத்தகட்டத்திற்கு முன்னேறவில்லை.
 
மறுபுறம், டி.எல்.பி பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வந்தது. இக்கட்சி முகமது நபிக்கு மரியாதை அளிக்கும் விவகாரத்தில் ஆதரவைத் திரட்டுகிறது. பல சமயங்களில் அது அரசாங்கங்களை தனது எதிர்ப்பின் மூலம் மண்டியிட வைத்தது. முகமது நபியின் கார்ட்டூன்களை அச்சிடுவது தொடர்பாக பிரான்சுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் அக்கட்சியின் சர்ச்சைக்குரிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.
 
2017-ம் ஆண்டில், அப்போதைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) அரசாங்கத்தில் மத்திய அமைச்சரை ராஜினாமா செய்ய டி.எல்.பி கட்டாயப்படுத்தியது.
 
நிறுவப்பட்டதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, டி.எல்.பி 2018 பொதுத்தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டது. அத்தேர்தலில் சுமார் 22 லட்சம் வாக்குகளை அக்கட்சி பெற்றது. இருப்பினும், இது அக்கட்சிக்கு எந்த பெரிய தேர்தல் வெற்றியையும் கொடுக்கவில்லை. சிந்து சட்டசபையில் அக்கட்சியால் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்தத் தேர்தலில் டி.எல்.பி நாட்டின் ஐந்தாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
 
வாக்குகள் அடிப்படையில், பஞ்சாப் மாகாணத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. இது பல அரசியல் அறிஞர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
 
டி.எல்.பி-யின் ஊடக மேலாளர் சதாம் புகாரி இந்த தேர்தலில் தனது கட்சி போதுமான இடங்களில் வெற்றி பெறும் என்று கூறுகிறார்.
 
அவர் கூறுகையில், “பிஎம்எல்-என் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிகளில் சீட் கிடைக்காத தலைவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். வேட்பாளரை முடிவு செய்ய பல மாதங்கள் ஆனது. வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல்கள் நடைபெற்றன. எங்கள் கட்சியின் சித்தாந்தத்தை மட்டும் புரிந்துகொள்ளாமல் வெற்றி பெறும் திறமையும் உள்ள நல்ல வேட்பாளர்களை நாங்கள் நிறுத்தியுள்ளோம்” என்றார்.
 
தேசிய சட்டமன்றத்தின் 223 இடங்களில் டி.எல்.பி தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இது பி.எம்.எல்(என்) மற்றும் பாகிஸ்தான் டெஹ்ரிக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) எண்ணிக்கையை விட அதிகம். 18-35 வயதுக்குட்பட்டவர்களுக்கு சீட் வழங்கிய கட்சிகளிலும் முன்னணியில் உள்ளது. டி.எல்.பி இந்த வயதினருக்கு 36 சதவீத இடங்களை வழங்கியுள்ளது.
 
தேசிய சட்டமன்றத்திற்கான அதன் வேட்பாளர்களில் ஒருவரான அபித் ஹுசைன், நாடு முழுவதும் டி.எல்.பி-க்கு செல்வாக்கு உள்ளது என்று பிபிசியிடம் கூறினார்.
 
அவர் கூறுகையில், “நாங்கள் இமாம்கள் மற்றும் உலமாக்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களின் ஆதரவை நாங்கள் பெற்றுள்ளோம். அவர்கள் எங்கள் பிரசாரத்தை அடிமட்ட அளவில் நடத்துவார்கள்” என்றார்.
 
அவரது கிளர்ச்சியூட்டும் கடந்த காலம் குறித்த கேள்விக்கு, அபித் ஹுசைன் கூறுகையில், "முகமது நபியை கௌரவிக்க டி.எல்.பி தெருக்களில் போராட்டம் நடத்தியதாக மக்கள் நினைக்கிறார்கள். எங்கள் எதிரிகள் எங்களை தீவிரவாதிகள் என்று அழைக்கிறார்கள். ஆனால், பாரபட்சமற்ற வாக்காளர்கள் நாங்கள் தேசிய நலனுக்காக போராடுகிறோம் என்பதை புரிந்துகொள்கிறார்கள்" என்றார்.
 
மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மானின் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் அல்லது ஜே.யு.ஐ-எஃப் சற்று வித்தியாசமானது. இம்ரான் கானின் அரசை வீழ்த்திய கூட்டணியில் மௌலானா முன்னணியில் இருந்தார். இம்ரான் கான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஆட்சிக்கு வந்த பாகிஸ்தான் ஜனநாயக இயக்கக் கூட்டணியில் அவர் அங்கம் வகித்தார்.
 
ஜே.யு.ஐ-எஃப்-ன் செல்வாக்கு கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் அதிகமாக உள்ளது. பஞ்சாப் தேர்தலுக்குப் பிறகு பிஎம்எல்-என் உடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் மற்றும் அவரது கட்சியினர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் ஐ.எஸ் அமைப்பின் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும்.
 
கடந்த ஆண்டு ஜூலை மாதம், பஜௌர் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜே.யு.ஐ-எஃப் பேரணி நடந்து கொண்டிருந்த இடத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.
 
ஜே.யு.ஐ-எஃப்-ன் பல வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பே குறிவைக்கப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு, மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி இருந்தார். ஆனால் அதற்காக மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற முடியவில்லை.
 
காபந்து அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், ஜே.யு.ஐ-எஃப் அதன் செயல்திறனை விமர்சிக்க முடியாது. எனவே, அவர் தனது பழமைவாத வாக்காளர்களின் ஆதரவைப் பெற இஸ்ரேல்-பாலத்தீனப் போரை ஒரு பிரச்னையாக்குகிறார்.
 
கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வார்ட் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் மௌலானா, “அல்லாஹ் எங்களுக்கு பலத்தை அளித்தார். நான் மட்டும் கத்தாருக்குச் சென்று ஹமாஸ் பிரதிநிதிகளை எந்தத் தயக்கமும் இல்லாமல் சந்தித்தேன். யூதர்களுக்கு எதிராக முஸ்லிம்களுடன் தோளோடு தோள் நிற்கிறோம் என்பதை உலகுக்குச் சொன்னோம். இதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. நமது அரசியல் எதிரிகள் யாருக்காவது முஸ்லிம் சகோதரர்களுடன் நிற்க தைரியம் உள்ளதா?” என்றார்.
 
 
இந்த மூன்று பெரிய கட்சிகளைத் தவிர, பல சிறிய மற்றும் பெரிய மதக் குழுக்களும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. கருத்தியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் ஷரியாவின் படி கல்வி, நீதி மற்றும் பொருளாதார அமைப்பை நிறுவுவதற்கான வாக்குறுதியின் மீது வாக்குகளை கோருகின்றனர்.
 
அவர்களில் யாரேனும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று சல்மான் கானி நம்புகிறார். இந்த அரசியல் கட்சிகள் பிரதான அரசியல் கட்சிகளின், குறிப்பாக பி.எம்.எல்-ன் வாக்குகளை குறைக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களில் யாருக்கும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
 
"முந்தைய மதக் குழுக்கள் அரசியல் ரீதியாக மிகவும் பொருத்தமானவை, ஆனால் இப்போது அது இல்லை. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி சேர்ந்தால்தான் ஆட்சியில் அங்கம் வகிக்க முடியும். மற்றபடி அவர்களுக்கு வாய்ப்பு இல்லை" என அவர்கள் கூறுகின்றனர்.
 
பாகிஸ்தானில் மக்களுக்கு மத அடையாளம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் போது, ​​மக்கள் ஏன் மதவாத கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள்?
 
இந்த கேள்விக்கு, சல்மான் கானி கூறுகையில், "வாக்களிக்கும் போது, ​​​​மக்கள் நாடாளுமன்றத்திற்கு வரக்கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்ய விரும்புகிறார்கள். மதக் குழுக்களைப் பொறுத்தவரை, மக்கள் அவர்களை மதிக்கிறார்கள். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியாது என்ற எண்ணம் இருக்கும்போது, ​​அவர்கள் மற்ற பிரதான கட்சிகளை நோக்கி நகர்கிறார்கள்" என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்பவாரின் வசம் தேசியவாத காங்கிரஸ்...தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது!