Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானில் வறுமையால் பெண் குழந்தைகளை விற்கும் குடும்பங்கள் - கள நிலவரம்

abuse
, புதன், 4 அக்டோபர் 2023 (21:08 IST)
ஏற்கனவே ஏழ்மையான பாகிஸ்தானில் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் சௌகி ஜமாலி கிராமம், 2022-ஆம் ஆண்டின் வெள்ளத்தால் மேலும் பாதிக்கப்பட்டது. அதனால், வறுமையின் காரணமாக கடன் வாங்கிய விவசாயிகள் இப்போது அதை அடைக்கத் தங்கள் பெண் குழந்தைகளை, வயது முதிர்ந்த ஆண்களுக்கு ‘திருமணம்’ என்ற பெயரில் விற்கின்றனர்.
 
“கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது என் மனைவிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது. குழந்தையின் உயிர் போய்விடும் அல்லது மனைவி இறந்துவிடுவார் என்று டாக்டர் கூறினார். மூன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆபரேஷன் செய்தேன். கடனை சீக்கிரமாக அடைக்கும்படியும் வட்டியை கட்டுமாறும் கடன் கொடுத்தவர்கள் சொன்னார்கள். மூன்றரை லட்சத்திற்கு பதிலாக ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதனால் என் பத்து வயது மகளை, ஒரு கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் ஒருவருக்கு விற்றுவிட்டேன்.”
 
வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஓராண்டுக்குப் பிறகு நான் அங்கு சென்றபோது பலுசிஸ்தானின் சௌகி ஜமாலி பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, இந்தக் கதையைச் சொன்னார்.
 
கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பலுசிஸ்தானின் பல பகுதிகளுக்கு நான் சென்றிருந்தேன். அந்த வெள்ளத்தில் மாகாணத்தின் பல பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்தன. சௌகி ஜமாலியும் அந்தப்பகுதிகளில் அடங்கும்.
 
பலுசிஸ்தானின் தொலைதூர ஜாஃப்ராபாத் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும்கூட பார்வையில் இருந்து எளிதாக தப்பிவிடக்கூடிய ஒரு பகுதி இது.
 
பொதுவாக அதிகாரிகள் இங்கு வருவதில்லை. ஆனால் 2022 வெள்ளத்திற்குப் பிறகு, அரசு அமைப்புகள் செளக்கி ஜமாலி மற்றும் பிற பகுதிகளுக்குச் சென்றன, அதன் பிறகு பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
 
 
2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு அந்தப் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் கடுமையான வறுமையில் தள்ளப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் பெண்களை விற்கிறார்கள் என்பதை இங்கு வந்த பிறகு நான் அறிந்தேன்.
 
சௌகி ஜமாலி பகுதி, சிந்து மற்றும் பலுசிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் தொகை சுமார் 50,000 என்று கூறப்படுகிறது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள்.
 
வெள்ளத்தால் சுமார் 32 லட்சம் குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும், சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் அதிக சேதத்தை சந்தித்ததாகவும் 2022-ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் பிபிசியிடம் கூறியிருந்தார்.
 
இவ்வளவு பெரிய வெள்ளம் கடைசியாக 1976-இல் ஏற்பட்டது என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதற்குப் பிறகு, 2010-ஆம் ஆண்டிலும், 2022-ஆம் ஆண்டிலும் இதுபோன்ற வெள்ளம் ஏற்பட்டது.
 
வெள்ளத்துக்குப் பிறகு சௌகி ஜமாலியின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
 
வறுமை காரணமாக தஙகள் இளம் மகள்களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 
ஒரு கூலித்தொழிலாளி குடும்பம் தங்கள் மகளை விற்றதை ஒப்புக்கொண்டது
 
கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் விவசாயிகள்
பெண் குழந்தைகள் விற்கப்படும் காரணத்தை விளக்கிய பள்ளி ஆசிரியர் ஒருவர், வெள்ளத்திற்குப் பிறகு விவசாயிகள் தொடர்ந்து வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், வட்டிக்கு வட்டி சேர்ந்து வந்தாகவும் தெரிவித்தார்.
 
பின்னர் கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் போகும்போது 40 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்களிடம் வயது குறைந்த பெண் குழந்தைகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் கூறினார்.
 
2022 வெள்ளத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் முன்பை விட அதிகமாக நடப்பது தெரியவருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
 
இப்பகுதியில் நான் ஒரு தொழிலாளியைச் சந்தித்தேன். அவர் தனது தினசரி வருமானம் 500 ரூபாய் (இந்தியாவில் சுமார் ரூ. 145) என்று என்னிடம் கூறினார்.
 
தனது பத்து வயது மகளை 40 வயது ஆணுக்கு ஏன் விற்க வேண்டி வந்தது என்பதையும் அவர் விளக்கினார்.
 
 
தனது 10 வயது மகளை 40 வயது ஆணுக்கு விற்க வேண்டி வந்தது என்று ஒரு தொழிலாளி கூறினார்
 
பள்ளியை நிறுத்திவிட்டு குழந்தைக்குச் திருமணம்
"எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. குழந்தை உயிர் பிழைக்கவில்லை, ஆனால் மனைவி பிழைத்தார். வெள்ளம் வந்து சில நாட்கள் கழித்து இது நடந்தது. சாலைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. மருத்துவமனைக்குச் செல்ல வழி இல்லை. வழி இருந்தாலும் அங்கு செல்லப் பணம் இல்லை," என்றார் அவர்.
 
"இப்போது நான் கடனை வாங்கினால் எப்படி அடைப்பேன்? நீ இவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதற்கு ஈடாக நமக்கு பணம் கிடைக்கும், உன் அம்மாவுக்கு சிகிச்சை செய்யமுடியும். மருந்து வாங்க முடியும் என்று என் மகளிடம் விளக்கினேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
நான் சென்ற கூலித்தொழிலாயின் வீட்டில் ஒரு வேளை உணவு கூட இல்லை. காலியான மாவு டப்பாவைக் காட்டிய அவர், ஒரு வேளைக்கு ரொட்டி செய்யக்கூட மாவு இல்லை என்றார்.
 
"அதனால்தான் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நாங்கள் சாப்பிடுகிறோம். மீதமுள்ள நான்கு நாட்கள் பட்டினியாக இருக்கிறோம்,” என்று சொன்னார்.
 
அந்த நேரத்தில் வீட்டில் இருந்த தனது மகளை சுட்டிக்காட்டிய அவர், “சில தகராறுகளைத் தீர்ப்பதற்காக இவளது கணவர் ஊருக்குச் சென்றுள்ளார். எனவே இவளை பள்ளிக்குச் செல்ல அனுமதித்துள்ளார்,” என்றார்.
 
“ஆனால் இங்கிருந்து சென்றபிறகு அவளை பள்ளிக்கூடத்திற்குச் செல்ல அனுமதிப்பாரா இல்லையா என்று தெரியாது,” என்கிறார் அவர்.
 
 
திருமணம் செய்துகொண்ட சிறுமிகள் தாங்கள் எதிர்கொள்ளும் வன்முறையைப் பற்றிக்கூறுகின்றனர் என்கிறார் உள்ளூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாதியா
 
3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்கப்படும் சிறுமிகள்
பெரும்பாலான சிறுமிகளுக்கு, மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது.
 
இந்தத் தொகையைக் கொண்டு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்கள், சிகிச்சைக்காக கராச்சிக்குச் செல்கிறார்கள், அல்லது தங்கள் ஆண் பிள்ளைகளின் கல்வியில் முதலீடு செய்கிறார்கள்.
 
“நாங்கள் மகள்களை மட்டுமே விற்கிறோம். மகன்களை விற்பதில்லை. ஏனென்றால் அவர்கள் மூலம் எங்களுக்கு எதுவும் கிடைக்காது,” என்கிறார் ஒரு தந்தை.
 
மேலும், நாங்கள் அப்பகுதிக்குச் சென்றிருந்த போது, தங்கள் வீட்டில் மகள்கள் இல்லை என்று கூறி சிலர் வீட்டுக் கதவுகளைத் திறக்கவில்லை.
 
வெள்ளத்திற்குப் பின் எஞ்சியிருந்த சில வீட்டுப் பொருட்களை விற்று அல்லது நில உரிமையாளரின் நிலத்தில் வேலை செய்து அவர்கள் கடனை அடைத்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
 
இந்தக் கடன் இரண்டு வகைப்படும். ஒன்று, கூலித்தொழிலாளர்கள் விவசாயத்திற்காகக் கடன் வாங்குகிறார்கள். இதில் குறைந்த கூலிக்கு அவர்கள் வேலை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி வெள்ளத்தால் அழிந்த நிலத்திற்கான கடனையும் செலுத்த வேண்டும்.
 
இரண்டாவது மருத்துவச் சிகிச்சைக்காகவும் வீட்டுச் செலவுகளை சமாளிக்கவும் வாங்கப்படும் கடன்.
 
ஆனால் இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் தங்கள் இளம் மகள்களை விற்றுக் கடன் தொகையை திருப்பிச் செலுத்துகிறார்கள்.
 
பல நேரங்களில் இளம்பெண்கள் இரண்டு முதல் மூன்று முறைகூட விற்கப்படுவதாக உள்ளூர் ஆசிரியர் ஒருவர் கூறினார்.
 
பல சமயங்களில் பெண்கள் தாங்கள் விற்கப்பட உள்ள செய்தியைக்கேட்டு வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் ஓடிப்போனதால் ஏற்பட்ட இழப்பை, அவர்களின் மிகச்சிறிய வயதிலான தங்கைகளை திருமணம் செய்துகொடுத்து ஈடுசெய்கிறார்கள்.
 
விவசாயிகள் வேலை செய்யும் நிலத்தின் உரிமையாளர்கள், இளம் சிறுமிகள் மீது எந்த நேரத்திலும் விபச்சாரக் குற்றம் சுமத்தக்கூடும். இந்த அவதூறுக்கு பயந்து பெற்றோர்கள் வயதில் இளைய மகள்களுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைக்கிறார்கள் என்றும் அந்த ஆசிரியர் கூறினார்.
 
பருவநிலை மாற்றம் மற்றும் வெள்ளம் காரணமாக இந்த மாகாணத்தில் விவசாயத்தின் மூலம் சம்பாதிப்பது மிகவும் கடினமாகிவிட்டது
 
இந்தச் சூழ்நிலையைக் கடந்து செல்லும் இளம்பெண்களைக் குறிக்க ’க்ளைமேட் ப்ரைட்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
 
பலுசிஸ்தானில் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் 'மதத் கம்யூனிட்டி' என்ற அமைப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் வெள்ளம் காரணமாக இந்த மாகாணத்தில் விவசாயத்தின் மூலம் சம்பாதிப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்று சமீபத்தில் கூறியது.
 
"பலுசிஸ்தானின் நடுத்தரவர்க்க மக்கள் உட்பட பெரும்பாலான மக்கள் இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏழை விவசாயிகளுக்குத் தற்போது எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. கடும் வெப்பம் காரணமாக பஞ்சம் மற்றும் வெள்ளம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது," என்று இந்த அமைப்பின் அமைப்பாளர் மரியம் ஜமாலி கூறினார்.
 
குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நிலத்தில் இருந்து வருமானம் கிடைப்பது தற்போது கடினமாகிவிட்டது. ஒவ்வொரு பருவத்திலும் விளைச்சல் குறைந்து வருகிறது. உணவு தானியங்களின் பற்றாக்குறையை சமாளிக்க அவர்கள் கடன் வாங்குகிறார்கள், என்கிறார் அவர்.
 
குறைந்த வருமானமே கிடைப்பதால் சௌகி ஜமாலி கிராமத்தில் மக்கள் பெண்களை விற்றுப் பிழைப்பு நடத்தி வருவதாக மரியம் தெரிவித்தார்.
 
இதற்கு முன்னரும் இங்கு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வந்ததாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்கும் மாகாண அமைப்பான PDMA (Provincial Disaster Management Authority - மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம்) 2022 ஆகஸ்டில் பலுசிஸ்தானின் 14 மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது.
 
குழந்தைத் திருமணங்கள் மூலம் பெண் குழந்தைகளை விற்கும் சம்பவங்கள் 13% அதிகரித்துள்ளதாக அக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
 
சௌகி ஜமாலியில் உள்ள ஒரு பள்ளிக்கு நான் சென்றேன். அதன் தலைமை ஆசிரியர் சாதியா, “திருமணம் செய்துகொள்ளும் சிறுமிகள் தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்து கூறுகின்றனர்,” என்று தெரிவித்தார்.
 
"கல்வி ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பெற்றோர்கள் தங்கள் பெண்களை விற்பதை இன்னும் நிறுத்தவில்லை," என்கிறார் அவர்.
 
இந்தப் பள்ளியிலிருந்து சிறிது தொலைவில் சௌகி ஜமாலியின் சுகாதார மையம் உள்ளது. கர்ப்ப கால மரணங்கள் ம் ஏற்படும் நிகழ்வு பெரும் எண்ணிக்கையில் நடக்கிறது என்று இங்குள்ள பெண் சுகாதாரப் பணியாளர் ஷாஜாதி தெரிவித்தார்.
 
சில நேரங்களில் சிறுமிகள் வலியால் துடித்து அழுகிறார்கள். சிலர் அங்கேயே இறந்துவிடுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். "நம்மால் இது குறித்து ஏதாவது சொல்லமுடிகிறது. குரல் எழுப்ப முடிகிறது. ஆனால் அந்த பெண்களின் தாய்மார்களால் இந்த விஷயத்தில் எதுவும் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால் வீட்டில் உள்ள ஆண்கள் இந்த முடிவை எடுக்கிறார்கள்," என்கிறார் அவர்.
 
சமீபத்தில் ஒரு தாய் தனது 16 வயது மகளுடன் தன்னிடம் வந்ததாக அவர் கூறினார்.
 
"வெள்ளத்திற்குப் பிறகு அதிகரித்த வறுமை காரணமாக, தனது 16 வயது மகளை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் தாய் கூறினார்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
2022 வெள்ளத்திற்குப் பிறகு, சௌகி ஜமாலியின் பெரும்பாலான குடும்பங்கள் கடும் வறுமையில் சிக்கித்தவிக்கின்றன
 
சிந்து மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் இளம் பெண்கள் கர்ப்ப காலத்தில் இறக்கும் நிகழ்வுகள் அதிகமாக நடப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இது தவிர ஃபிஸ்டுலா நோய், கருத்தரிப்பதில் சிரமம் மற்றும் சிறுநீர் பாதையில் இருந்து ரத்தப்போக்கு போன்றவை ஏற்படுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 
UNFPA உடன் தான் பணிபுரிந்தபோது இந்த இரண்டு மாகாணங்களிலும் இளம் வயது திருமணங்கள் நடைபெறுவதை அறிந்ததாகவும், 2022 வெள்ளத்திற்குப் பிறகு இது அதிகரித்துள்ளதாகவும் கராச்சியைச் சேர்ந்த டாக்டர் சஜ்ஜாத், பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"கர்ப்ப காலத்தில் இளம் பெண்கள் இறப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். பெற்றோர்கள் அவர்கள் வயதை மறைக்கிறார்கள். ஆனால் பெண்களின் வயதை அவர்களின் மணிக்கட்டில் இருந்து மதிப்பிட முடியும்," என்கிறார் அவர்.
 
மேலும், "இது அந்த பகுதிகளில் நடக்கிறது என்பது நீண்ட காலமாகத் தெரியும். ஆனால் 2022 வெள்ளத்திற்குப் பிறகு சிறுமிகளை விற்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன," என்கிறார்.
 
எல்லாம் தெரிந்தும் அதிகாரிகளால் ஏன் இந்தத் திருமணங்களைத் தடுக்க முடியவில்லை என்பதே இப்போதைய கேள்வி.
 
பலுசிஸ்தானில் இளம் சிறுமிகளின் திருமண சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மகளிர் ஆணையத் தலைவர் ஃபவுஸியா ஷாஹீன் தெரிவித்தார்.
 
"முழுமையான புள்ளிவிவரங்களை எங்களால் அளிக்க முடியாது. ஏனென்றால் திருமணங்களை பதிவு செய்யும் வழிமுறை இங்கு இல்லை. ஆனால் இளம் வயது திருமணங்கள் அதிகரித்துள்ளன என்பதில் சந்தேகமில்லை," என்றார் அவர்.
 
குழந்தை திருமணங்களைத் தடுக்க வலுவான சட்டம் எதுவும் இல்லை என்று ஃபவுஸியா ஷாஹீன் கூறினார்.
 
"இத்தகைய திருமணங்கள் மிக வேகமாக அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக இருப்பதால் குழந்தை திருமண தடை மசோதாவை நிறைவேற்ற முயற்சித்தோம். இந்த மசோதா பல தசாப்தங்களாக பலுசிஸ்தானின் சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த மசோதா அவையில் சமர்ப்பிக்கப்படவில்லை. நாங்கள் இன்னும் முயற்சித்து வருகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
இந்தத் திருமணங்கள் மற்றும் இளம் சிறுமிகளை விற்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் எதுவாக இருந்தாலும், பலுசிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தின் விலையை இந்த சிறுமிகள்தான் செலுத்த வேண்டியுள்ளது என்பதே உண்மை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘’காலை உணவு திட்டடத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்