Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌திடீ‌ர் த‌ற்கொலை முடிவு எதனா‌ல் வரு‌கிறது?

‌‌திடீ‌ர் த‌ற்கொலை முடிவு எதனா‌ல் வரு‌கிறது?
, வியாழன், 9 செப்டம்பர் 2010 (19:36 IST)
தற்கொலை? நாம் எதிர்பாரதவர்களெல்லாம் திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார்கள். பொதுவாக தற்கொலையை மனித மனம் எதிர்க்கத்தான் செய்கிறது. இருந்தாலும், திடமான மனநிலை உள்ளவர்கள் கூட, இந்த தற்கொலைக்கு தள்ளப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றதென்றால் அது ஜாதக ரீதியான நிலையா?

ஒரு குடும்பம் வந்திருந்தார்கள். எல்லோருக்கும் சனி நடக்கிறது. ஏழரை சனி, அஷ்டமத்துச் சனி, சனி திசை, ராகு திசையில் சனி புத்தி என்று எல்லோருக்கும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. கொடுத்த இடத்தில் இருந்து காசு எதுவும் கைக்கு வரவில்லை. இவர்கள் தரவேண்டியதிலும் பல விதமான நெருக்கடிகள். அவமானங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள். அந்தச் சூழ்நிலையில் குடும்பத்தோடு எல்லோருமே விஷம் குடித்துவிட்டு இறந்துவிடலாம். ஏனென்றால், நாம் மட்டும் இறந்துவிட்டால் பிள்ளைகள் மட்டும் அனாதையாக நிற்பார்கள். எனவே, பிள்ளைகளுக்கு முதலில் விஷம் கொடுத்துவிட்டு அவர்கள் இறந்துவிட்ட பிறகு நாம் இறந்துவிடலாம் என்றெல்லாம் ஆலோசித்துவிட்டு பிறகு என்னிடம் வந்திருந்தார்கள்.

அவர்களுக்குச் சொன்னேன், கிரக நிலைகள் தொடர்ந்து அப்படியே இருக்காது. அடுத்தடுத்து மாறக்கூடியது. முதலில் இருக்கிற இடத்தில் இருந்து இடம் மாறுங்கள். மாறிய பிறகு சில மாற்றங்கள். செல்வம், படிப்பு என்று பழையதையே நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். சாதாரணமாக ஒரு கூலித் தொழில் செய்துகொண்டு பிழைப்பதற்கான வழியை முதலில் பாருங்கள். இதுபோன்று அடிமைப்படும்போதும், அசிங்கப்படும்போது சனியினுடைய எதிர்விசை போய்விடும். அடிமைப்படுதல், அசிங்கப்படுதல் இருந்தாலே உடனே சனி பகவான் ஆயுளைக் காப்பாற்றுவார். ஏனென்றால் சனிதான் ஆயுளுக்கான கிரகம்.

தற்பொழுது அவர்கள் வேறு மாநிலத்திற்கு மாறி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிறது. இந்த 4 மாதங்களில் அவர்கள் ஓரளவு தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள். 3 பிள்ளைகளுக்கும், உணவு, உடை என்று வாழ்ந்துவந்த நிலையில், அடுத்த மாற்றமாக வேறு ஒரு பெரிய வேலை கிடைத்திருக்கிறது. கடன்காரர்களைக் கண்டுபிடித்து பாதி வட்டி கொடுப்பது என்று போய்க் கொண்டிருக்கிறது.

இதுபோல கிரகங்கள் ஒரு சில நேரங்களில் சில நெருக்கடிகளைக் கொடுக்கும். இனிமேல் இருக்க வேண்டுமா? மாய்த்துக் கொள்ளலாமே? என்று தோன்றும். இந்த மாதிரியான நேரங்களில் இடமாற்றம் என்பது பெரிய தீர்வாக இருக்கும். அதைத்தான் உடனே செய்ய வேண்டும். அந்த வீட்டை வெளியேறுவதோ? அந்த ஊரை விட்டு வெளியேறுவது அல்லது அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி வேறொரு மாநிலத்திற்குப் போய்விடுவது என்று செய்யும் போது அவர்களுக்கு சூழ்நிலை மாறுகிறது.

சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு?

என்ன சொந்த வீடு இருக்கிறது. எதுவுமே சொந்தமில்லாத போது அதைப்போய் சொந்த வீடு என்று சொல்வதை விட, அந்த சொந்த வீடுதானே அதிகமான பிரச்சனைகளைக் கொடுக்கிறது. பாதி பேர் எப்படி தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று பார்த்தீர்களென்றால், இந்த வீட்டை விட்டு எப்படி போவது? யாரிடம் ஒப்படைப்பது என்று தெரியவில்லை. வாடகைக்கு விட்டாலும் என்னவாகும் என்று இப்படி குழம்பிப்போய் அதே வீட்டில் இருந்து அழிந்து போவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஏறக்குறைய 142 தற்கொலை ஜாதகங்கள் என்னிடம் இருக்கிறது. ஆய்வு நடத்தும்போது, பத்திரிக்கையாளர்களின் நட்புடன் போய் எடுத்தது. இதில் பல காரணங்கள் உண்டு. வறுமையும் உண்டு. ஆனால் கிட்டத்தட்ட 70 பேர் பார்த்தீர்களென்றால் தவறான காதல், தவறான காமம் இதனால் இறந்தவர்கள். 20 பேர் சொத்து பிரச்சனை. அங்காளி, பங்காளி என்று சொல்வார்களே அந்த மாதிரி.

பங்காளி தெரியும். அங்காளி என்றால்?

அங்காளி என்றால் உடன் பிறந்தவர்கள். பங்காளி என்றால் ஒன்றுவிட்டவர்கள். அங்கம், உடம்போடு ஒட்டிப்போனால் அங்காளி. பங்கோடு போனால் பங்காளி. மற்றவர்கள் வறுமை, கடன் பிரச்சனை, மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தும் சரிசெய்ய முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டவர்கள்.

இதுபோன்றதற்கெல்லாம் இடம் மாறுவது என்பது நல்ல தீர்வாக இருக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து மோசமான நேரம் வரப்போகிறது என்று தெரிந்துகொண்டால், முன்கூட்டியே வியாபாரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு வருடம் கழித்து பிரச்சனை வரப்போகிறது என்றால், தற்போது முதலீடுகளையெல்லாம் குறைத்துக் கொண்டு, நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் போது வேறொரிடம் நடத்தச் சொல்லிவிட்டு ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம். ஷேர் வோல்டராக இருந்தால், என்னை விட்டுவிடுங்கள் என்று இதுபோல நிறைய விதங்களில் தப்பிக்கலாம்.

ஆனால், நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் போது வியாபாரத்தில் இருப்பவர்களோ மற்றவர்களோ அடுத்து என்ன என்று யோசிப்பதே கிடையாது. இதுபோன்று செய்ய ஆரம்பித்தால் தற்கொலைகளை கொஞ்சம் தடுக்க முடியும். சனியும், புதனும் இந்தத் தற்கொலையைத் தூண்டக் கூடிய கிரகங்கள். ஆனால் இந்த இரண்டும்தான் தன்னம்பிக்கைக்கும் உரிய கிரகங்கள். இதேபோல கேதுவும் தற்கொலையைத் தூண்டும். கேது தசையும், ஏழரை சனியும் ஒன்றாக வரும்போதெல்லாம் தற்கொலை முயற்சிகளை நிறைய பார்க்கிறோம். ஆயுள் ஸ்தானம் எட்டுக்குரியவர் நன்றாக இருக்க வேண்டும். லக்னாதிபதியும் நன்றாக இருக்க வேண்டும். சனியும் ஒத்துழைத்தால் தீர்க்க ஆயுசு உண்டு. இவர்கள் தெளிவாக இருந்து அனைத்தையும் செய்தால் ஒரு பிரச்சனையும் வராது.

கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் சமீபத்தில் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். நன்றாக வாழ்ந்துக் கொண்டிருந்தார்.

இந்த கொடுக்கல், வாங்கல் இந்த மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் உரிய கிரகம் குரு பகவான். இந்த குரு பகவான் மோசமான இடத்திற்குப் போகிறாரென்றால், அந்தக் காலகட்டம் அவர்களை மோசமாக்கிவிடும். பணமெல்லாம் வராமல் போய்விடும். 10ல் குரு வரும் போது, பதவியைக் கெடுக்கும் என்று சொல்வார்கள். 10ல் குரு வரும்போது அவர்களுடைய தசாபுத்தியும் கெட்டுப் போய்விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது, பிறக்கும் போது இருக்கிறது கிரக அமைப்புகள், தற்பொழுதுள்ள கிரக அமைப்புகள் இரண்டுமே மோசமாகும் போது அவர்கள் தன்னம்பிக்கையை இழப்பார்கள். இனிமேல் இந்த உலகம் நம்மை எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறது? நான்கு பேர் எப்படி மதிப்பார்கள் என்று தோன்றும்.

ஆனால், 6க்குரிய கிரகம், 8க்குரிய கிரகங்களெல்லாம் அவமானத்தைக் கொடுத்துதான் வெகுமானத்தைக் கொடுக்கும். அவமானத்தைக் கொடுக்கும் போது இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது வெகுமானத்தைக் கொடுக்கும். வெகுமானத்தை மட்டும் ஏற்பதற்கு மனது சாத்தியமாக இருக்கிறது. கிரகங்கள் இரு வேறு துருவங்களாக செயல்படும். குரு பாஸிடிவ், குரு நெகடிவ் என்று இரண்டு பகுதிகள் உண்டு. அதனால்தான் ஒரு தசை 16 வருடம் என்றால், முதல் 8 வருடம் ஒரு மாதிரியும். அடுத்த 8 வருடம் இன்னொரு மாதிரியும் இருக்கும். இதெல்லாம் ஜோதிட அமை‌ப்‌பி‌ல் உண்டு.

இதை மக்கள் புரிந்துகொண்டு கிரகங்கள் கெடுக்கும் போது இதுவும் நன்மைக்குத்தான், இதன்மூலம் அது ஏதோ படிப்பினைகளை நமக்குச் சொல்ல வருகிறது. நம்முடைய போக்கையும், மனநிலையையும் மாற்றிக்கொள்ள வேண்டும். இதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும். இதைவிட்டுவிட்டு, நாம் இனிமேல் வாழ முடியுமா? எல்லாவற்றையும் இழந்துவிட்டோமே என்பதெல்லாம் கூடாது. ஹீரோவில் இருந்து ஸீரோவிற்கு வருவதையெல்லாம் நாம் பார்க்கிறோம். 4 கார்களை விற்றுவிட்டு நடந்து போகிறவர்களையெல்லாம் பார்க்கிறோம். அவர்களே தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அதே 4 கார் நிலைமைக்கு வருவதெல்லாம் உண்டு.

அதனால் எந்த முடிவையும் உடனே எடுத்துவிடக் கூடாது. அதுவும் தற்கொலைக்கான முடிவை எப்போதுமே எடுக்கக் கூடாது. மனதை பக்குவப்படுத்தி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil