Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்யாவுக்கு ஆதரவாக பேசிய டிரம்ப்: கொதித்தெழுந்த அமெரிக்கர்கள்!

ரஷ்யாவுக்கு ஆதரவாக பேசிய டிரம்ப்: கொதித்தெழுந்த அமெரிக்கர்கள்!
, செவ்வாய், 17 ஜூலை 2018 (21:29 IST)
அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற அமெரிக்க உளவு அமைப்புகளின் கூற்றை மறுக்கும் வகையில் ரஷ்யா மீது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
 
இதற்கு அமெரிக்காவில் அவரது சொந்தக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்கள்கிழமை டொனால்டு டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இரண்டு மணி நேரம் தனியறையில் பேச்சு வார்த்தை நடத்தினர். 
 
இந்த சந்திப்புக்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்தது என்று கூறும் தமது சொந்தப் உளவு அமைப்புகளை நம்புகிறாரா அல்லது ரஷ்ய அதிபரை நம்புகிறாரா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.
 
"ரஷ்யா தலையிடவில்லை என்கிறார் அதிபர் புதின். அவர்கள் தலையிடுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை," என்று பதில் அளித்தார் டிரம்ப். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக தேர்தலை நகர்த்தும் வகையில் ரஷ்ய அரசு உதவியோடு அமெரிக்காவில் இணையதளத் தாக்குதல்கள், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளை வெளியிடுவது ஆகிய வேலைகள் நடந்ததாக அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவில் கண்டனங்கள்
தங்கள் சொந்தப் புலனாய்வு அமைப்பை மறுத்து, ரஷ்யாவை ஆதரிக்கும் டிரம்பின் செயலுக்கு உடனடியாக அமெரிக்காவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. "ரஷ்யா நமது கூட்டாளி நாடல்ல என்பதை டிரம்ப் உணரவேண்டும்," என்று கூறியுள்ளார் அமெரிக்க நாடாளுமன்ற (காங்கிரஸ்) மக்கள் பிரதிநிதிகள் அவைத் தலைவர் பவுல் ரய்யான்.
 
கடுமையான மொழியில் வெளியான அவரது அறிக்கையில், "அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் அறம் சார்ந்து பொதுவான விஷயங்கள் இல்லை. நமது அடிப்படையான விழுமியங்களுக்கும், கொள்கைகளுக்கும் ரஷ்யா எதிராகவே உள்ளது. 2016 தேர்தலில் ரஷ்யா அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டதா என்ற சந்தேகத்துக்கே இடமில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூத்த செனட்டர் ஜான் மெக்கைன் இது பற்றிக் கூறும்போது, அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவரின் "வெட்கக்கேடான செயல்பாடு" இது என்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
 
"இதற்கு முன்பு இருந்த எந்த அமெரிக்க அதிபரும் எதிராளியிடம் தம்மை இந்த அளவு மோசமாக தாழ்த்திக்கொண்டதில்லை," என்று அவர் கூறியுள்ளார். 2016 தலையீட்டுக்கு ரஷ்யாவை பொறுப்பாக்கும் வகையில் உறுதியாக நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை தவறவிட்ட செயல் இது என்று விமர்சித்திருக்கிறார் இன்னொரு குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம்.
 
"டிரம்பின் செயல்பாடுகள் நமது எதிரிகளை வலுப்படுத்தி நமது தரப்பையும் நமது கூட்டாளிகளின் தரப்பையும் பலவீனப்படுத்தியுள்ளது" என்று டிவீட் செய்துள்ளார் ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான சக் ஷும்மர். இவர் இது குறித்து தொடர்ந்து பல ட்விட்டர் பதிவுகளை இட்டுள்ளார்.
 
அமெரிக்க தேசிய உளவுத் துறை இயக்குநர் டேன் கோட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்க ஜனநாயகத்தை பாதிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ரஷ்யா ஈடுபட்டுவருவது உளவுத்துறையினருக்கு தெளிவாகத் தெரியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
டிரம்ப் விளக்கம்
விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் டிவீட் செய்த டிரம்ப், தமது உளவுத் துறையினர் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டார். அத்துடன், "நமது கடந்த காலத்தின் மீது மட்டும் நாம் கவனம் குவிக்க முடியாது. உலகின் இரண்டு மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளாக இருக்கும் இரண்டு நாடுகளும் ஒன்றாகப் போகவேண்டும் என்றும் உணர்ந்துள்ளேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
அமெரிக்க வணிகத் துறையில் ஒரு கூட்டத்தில் பேசிய துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்க-ரஷ்ய உச்சி மாநாட்டைப் பாராட்டியதோடு, டிரம்பையும் புகழ்ந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் பிரசாரத்தை பாதிக்கும் வகையில் இமெயில்களை ஹேக் செய்ததாக ரஷ்ய ராணுவ உளவுத் துறையினர் 12 பேர் மீது அமெரிக்க அட்டர்னி ஜெனரல் குற்றம் சுமத்திய நிலையில், இந்த டிரம்ப்-புதின் உச்சி மாநாட்டை ரத்து செய்யவேண்டும் என்று சில அமெரிக்க அரசியல் தலைவர்கள் கோரியிருந்தனர்.
 
புதின் என்ன சொன்னார்?
செய்தியாளர் சந்திப்பில் பேசிய புதின் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படுவது குறித்து ரஷ்ய அதிகாரிகளிடம் விசாரிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வாளர்களை அனுமதிக்கவும் தயார் என்று தெரிவித்தார். பிறகு ஃபாக்ஸ் நியூசிடம் பேசிய அவர் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட முடியும் என்று சிலர் கருதுவது அபத்தமானது என்று தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 வயது சிறுமி பாலியல் கொடுமை: மேலும் ஆறு பேர் கைது