Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்வாதிகாரிகள் மரணமடைவார்கள்... மக்கள் விடுதலை பெறுவார்கள்: சார்லி சாப்ளினின் புகழ்பெற்ற உரை

சர்வாதிகாரிகள் மரணமடைவார்கள்... மக்கள் விடுதலை பெறுவார்கள்: சார்லி சாப்ளினின் புகழ்பெற்ற உரை

சுரேஷ் வெங்கடாசலம்

, வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (14:52 IST)
உலக வரலாற்றில் மிகச் சிறந்த கலைஞராக திகழும் சால்லி சாப்ளின் நடித்துள்ள புகழ்பெற்ற பல படங்களுள் ஒன்று "தி கிரேட் டிக்டேட்டர்".


 

 
உலகில் பல நாசங்களை விளைவித்த உலகப் போருக்குக் காரணமான ஹிட்லரை கிண்டல் செய்து அந்த படம் எடுக்கப்பட்டது.
 
அந்த படத்தின் இறுதிக் காட்சியில் ஆள்மாறாட்டம் காரணமாக முடி திருத்தும் வேலை செய்துவந்த சாப்ளினை ஹிட்லர் என நினைத்து மேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
 
அப்போது அவர் சார்லி சாப்ளின் பேசிய உரையின் தமிழாக்கம்:-
 
”என்னை மன்னித்து விடுங்கள்... எனக்கு பேரரசனாக ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. நான் யாரையும் ஆட்சிசெய்ய வேண்டும் என்றோ, மற்றவர்களை வெற்றிக் கொள்ள வேண்டும் என்றோ விரும்பவில்லை.
 
மாறாக, நான் பிறருக்கு உதவி செய்யவே விரும்புகின்றேன்... அது யூதனாக இருந்தாலும் ... கருப்பராக இருந்தாலும்... அல்லது வெள்ளையராக இருந்தாலும்... நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யவே விரும்புகின்றோம்.
 
மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும். மனிதர்கள் இயல்பிலேயே அப்படித்தான் இருக்கிறார்கள். மற்றவர்களின் மகிழ்ச்சையைப் பார்த்துப் பார்த்து நாம் ஒவ்வொருவரும் வாழவேண்டும். மாறாக, மற்றவர்களை துன்புறுத்தி அல்ல.
 
இந்த உலகில் அனைவருக்கும் இடம் இருக்கின்றது. இந்த அற்புதமான பூமி செல்வ செழிப்பைக் கொண்டது. வளம் நிறைந்தது... மனிதர்கள் அனைவருக்குமான தேவைகளை இந்த பூமியால் தீர்த்துவைக்க முடியும்...
 
நாம் நினைத்தால் இந்த உலகத்தை சுதந்திரமானதாகவும், அழகானதாகவும் மாற்ற முடியும். ஆனால், அந்த வழியை நாம் தொலைத்துவிட்டோம். நாம் வழி தவறி விட்டோம்.
 
பேராசை, மனிதர்களின் ஆன்மாவை விஷமாக்கிவிட்டது. அதனால், இந்த பூமியை வெறுப்பினால் நிறைத்துவிட்டோம். பேராசை துன்பமும், ரத்தத்தை சிந்துவதுமே அதனால் விளைவிக்கப்பட்டுள்ளது.
 
நாம் நமது வேகத்தை கூடினோம்... ஆனால் நம்மை நாமே அதற்குள் வைத்துப் பூட்டிக் கொண்டோம். நமது அறிவு நம்மை சுயநலவாதிகளாக மாற்றிவிட்டது. எனவே, அன்பில்லாதவர்களாகவும் கல்நெஞ்சம் கொண்டவராகவுமே நம்மை மாற்றி விட்டது. நாம் ஏராளமாக சிந்திக்கின்றோம்...ஆனால் மிகக் குறைவாகவே உணருகின்றோம்.

இந்த உரையின் வீடியோவை இங்கே காணலாம்:
 
 

இயந்திரங்களை விட மனிதத்தன்மையே நமக்கு தேவை. அறிவாளித்தனத்தை விட அன்பும் எளிமையுமே நமக்குத் தேவை. இந்த குணங்கள் இல்லாமல் போனல் வாழ்க்கை வன்முறை நிறைந்ததாகவும்... அனைத்தையும் தொலைப்பதாகவும் ஆக்கிவிடும்...
 
வானூர்தியும், வானொலியும் மனிதர்களை மிகவும் நெருக்கமாக்கின.... இத்தகைய கண்டுபிடிப்புகள் மனிதர்களுக்குள் இருக்கும் நன்மைகளை நோக்கி குரல் கொடுக்கின்றன... சர்வதேச சகோதரத்துவதை நோக்கி குரல் கொடுக்கின்றன... நாம் அனைவரும் ஒற்றுமைக்காக இருக்கவேண்டும் என்று அவை குரல் கொடுக்கின்றன.
 
எனது இந்த வாத்தைகளை லட்சக்கணக்கான மக்கள் கேட்டுக் கொட்டிருக்கக் கூடும். லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறு குழந்தைகளும் கேட்டுக் கொட்டிருக்கலாம். அப்பாவிகளை கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கவும், சிறையில் அடைக்கவும் ஒரு கும்பல் இங்கு துடித்துக் கொட்டிருக்கிறது.

என்னுடைய சொற்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நான் சொல்லுகின்றேன்... கவலைக் கொள்ளாதீர்கள். நம் மீது இப்போது படிந்திருக்கும் துயரம் நம்மைக் கடந்துச் செல்லும். இந்த துன்பம் பேராசையின் விளைவே அன்றி வேறல்ல... 
 
மனிதர்கள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் பாதையைக் கண்டு பயப்படும் சில மனிதர்களின் வெறித்தனமாக செயலே அன்றி வேறல்ல. இந்த மனிதர்களின் வெறுப்பு விரையில் நீங்கிவிடும்... சர்வாதிகாரிகள் மரணமடைவர்... மக்களிடம் இருந்து அவர்களால் பறிக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் மக்கள் கைகளுக்கு வந்த சேரும். மனிதர்கள் இருக்கும் வரை சுதந்திரம் அழிவதில்லை....
 
வீரர்களே...!  உங்களை நீங்களே இந்த அயோக்கியர்களிடம் ஒப்படைத்து விடாதீர்கள்... 
 
உங்களை யார் வெறுக்கின்றார்களோ.. யார் உங்களை அடிமைப்படுத்துகிறார்களோ...நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் எப்படி சிந்திக்க வேண்டும் என்றும் எதை உணர வேண்டும் என்றும் முடிவு செய்கிறார்களோ... உங்களை பயிற்றுவித்து, உணவை குறைத்து கட்டுப்படுத்தி... விலங்குகளைப்போல் போநடத்தி... உங்களை ஆயுதங்களுக்கு இரையாக்க எண்ணுகிறார்களோ... அவர்களிடம உங்களை நீங்களே ஒப்புக் ஒப்படைத்துவிடாதீர்கள்.
 
நீங்கள் இயந்திரங்கள் அல்ல...நீங்கள் ஆட்டு மந்தைகள் அல்ல...நீங்கள் மனிதர்கள்...உங்களுடைய இதயத்தில் மனிதர்களின் மீதான காதலை நீங்கள் கொண்டு இருக்கின்றீர்கள். நீங்களோ எவரையும் வெறுப்பதில்லை... அன்பில்லாதவர்களே வெறுக்கின்றார்கள்... அன்பில்லாதவர்களும் மனிதத்தன்மை அற்றவர்களுமே வெறுக்கின்றனர்.
 
வீரர்களே...! அடிமைத்தனத்திற்காக போராடாதீர்கள்...சுதந்திரதிற்காகப் போராடுங்கள்.
 
மக்களாகிய உங்களிடம்தான் அத்தனை சக்தியும் ஆற்றல் இருக்கிறது... பொருட்களை படைக்கும் சக்தி, மகிழ்ச்சியை உருவாக்கும் ஆற்றல்... உங்களிடம்தான் இருக்கின்றது.
 
மக்கள்தான் இந்த வாழ்க்கையை சுதந்திரமானதாகவும்... அழகானதாகவும், இந்த வாழ்க்கையை ஒரு அற்புதமானதாகவும் ஆக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள். நாம் மக்களின் நலன்களுக்காக... நமது ஆற்றலை பயன்படுத்துவோம்... அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். நாடைன்ற எலைகளைக் கடந்து... வெறுப்பையும் பேராசையையும் விட்டொழித்துப் போராடுவோம்.
 
ஒரு புதிய உலகிற்காக... மனிதர்கள் அனைவருக்கும் வேலைகளையும், இளைய தலைமுறையினருக்கு நல்ல எதிர்காலத்தையும், முதியோர்களுக்கு பாதுகாப்பும் தரக்கூடிய ஒரு நல்ல உலகிற்காக நாம் போராடுவோம்.
 
சர்வாதிகாரிகள் தங்களை சுதந்திரமாக்கிக் கொள்கின்றனர் ஆனால் மக்களை அவர்கள் அடிமைப்படுத்துகிறார்கள்.
 
அன்பும்... அர்த்தமும் உள்ள ஒரு உலகத்திற்காக, எந்த உலகில் அறிவியலும் முன்னேற்றமும் மனிதனின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்குமோ அந்த உலகிற்காக நாம் போராடுவோம். வீரர்களே.. மக்கள் கைகளில் அதிகாரம் வருவதற்காக நாம் ஒன்றுபடுவோம்...”
 
ஏப்ரல் 16 சார்லி சாப்ளினின் பிறந்தநாள். சாப்ளின் 1889 ஆண்டு லண்டனிலுள்ள வால்வர்த் என்னும் இடத்தில் பிறந்தார்.
 
சார்லி சாப்ளின் நடித்த, மாடர்ன் டைம்ஸ், சிட்டி லைட், த சர்க்கஸ், த கிரேட் டிக்டேட்டர், த கிட், ஏ டாக்ஸ் லைப், லைம் லைட், த கோல்ட் ரஸ் உள்ளிட்ட படங்கள் உலகெங்கும் உள்ள மக்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டும் போற்றி பாராட்டப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil