Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மண்ணில் உறங்கும் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் எனும் சகாப்தம்’ - நினைவு நாளை முன்னிட்டு!

மண்ணில் உறங்கும் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் எனும் சகாப்தம்’ - நினைவு நாளை முன்னிட்டு!

ரேகா கார்ல் மொழி

, செவ்வாய், 26 ஜூலை 2016 (22:11 IST)
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்று பொதுவாக அழைக்கப்படும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று....

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும்  ஏ.பி.ஜே அப்துல் கலாம்
 
பிறப்பு: அக்டோபர் 15, 1931
 
மரணம்: ஜூலை 27, 2015
 
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)  
 
பிறப்பு:
 
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
 

 
இளமைப் பருவம்:
 
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
 
கல்லூரி வாழ்க்கை:
 
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
 
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:      
 
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
 
webdunia

 
குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
 
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
 
 
விருதுகள்:
 
1981 – பத்ம பூஷன்
 
1990 – பத்ம விபூஷன்
 
1997 – பாரத ரத்னா
 
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
 
1998 – வீர் சவர்கார் விருது
 
2000 – ராமானுஜன் விருது
 
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
 
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
 
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
 
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
 
2009 – ஹூவர் மெடல்
 
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
 
2012 –  சட்டங்களின் டாக்டர்
 
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
 
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
 
அக்னி சிறகுகள்
இந்தியா 2020
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
 
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
 
எதிர்கால இந்தியா: 2020
 
அவருடைய இந்தியா 2020 என்ற புத்தகத்தில் கலாம், இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு தனது பணியை அர்ப்பணிக்கிறார்.
 
அவருடைய புத்தகங்களின் மொழி பெயர்ப்புப் பதிப்புகளுக்கு தென் கொரியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் வேறு பல வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். உயிரி செயற்கை பதியன்கள் (BIO-IMPLANTS) வளர்ப்பதற்கான ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். அவர் தனியுரிமை தீர்வுகள் மீது திறந்த மூல ஆதரவாளராகவும் மற்றும் பெரிய அளவிலான இலவச மென்பொருள் பயன்படுத்துதல், பெருமளவு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப நன்மைகளை கொண்டு வரும் என்றும் நம்புகிறார்.
 
விஞ்ஞான ஆலோசகர் பதவியிலிருந்து 1999 ல் ராஜினாமா செய்த பிறகு, ஒரு லட்சம் மாணவர்களுடன் இரண்டு வருடங்களுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார்.
 
அவர் அவரது சொந்த வார்த்தைகளில் "நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.
 
இனிமேல் என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கமும் அவர்களுடைய கற்பனா சக்தியை ஊக்குவிக்கவும் இந்தியாவை வல்லரசாக மாற்றும் திட்டத்திற்கு அவர்களை தயார்படுத்தவும் வரை படம் ஏற்கனவே தயாரித்துள்ளேன்.
 
அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், அதற்கு பிந்தைய காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தோரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும், அதிபராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும், பேராசிரியராக சென்னை அண்ணா பலகைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேர்ப்பு / வருகை ஆசிரியராகவும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார்.
 
மறைவு:
 
ஜூலை 27, 2015-ல் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.
 
இறுதி மரியாதை:
 
இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 ஜூலை மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய தேசத்தை முன்னெடுத்து செல்வதற்காக எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்ட, இந்திய தேசத்தின் எதிர்கால கனவினை சுமந்த திரு. ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களுடைய நினைவு நாளை போற்ற வேண்டியது நமது கடமையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து பதிலடி - 330 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி