Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

பிரபல எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
, சனி, 20 டிசம்பர் 2014 (12:30 IST)
பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’  நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலக்கிய உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் சாகித்ய அகாடமி விருது, ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும், பாராட்டுப்பத்திரத்தையும் கொண்டதாகும்.

இந்த ஆண்டு 20 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தமிழ் மொழிக்கான விருது, பிரபல எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘அஞ்ஞாடி’ நாவலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1,066 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.925 ஆகும்.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம், 9ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள விழாவில் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படவுள்ளது.

எழுத்தாளர் பூமணி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்க வாசகம். விருதுநகர் செந்திகுமார் நாடார் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் படித்து, கூட்டுறவு துறையில் வேலைக்கு சேர்ந்தார்.

2005ஆம் ஆண்டில் கூட்டுறவு துணை பதிவாளராக சென்னையில், பணி ஓய்வு பெற்ற அவர், அதன்பின்னர் கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.  தற்போது இவருக்கு  68 வயது.

இவருக்கு செல்வம் என்ற மனைவியும், கவிதா என்ற மகளும், சிபி, ரவி ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மகள், மகன்களுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்கள். 

சிறுவயதிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த பூமணிக்கு, ஏற்கனவே பல விருதுகள் கிடைத்து இருக்கின்றன. அதில் ‘அஞ்ஞாடி’ நாவலுக்கு மட்டும் 6 விருதுகள் கிடைத்துள்ளது.

‘பிறகு’, ‘வெட்கம்’, ‘நைவேத்யம்‘, ‘வரப்புகள்’, ‘வாய்க்கால்’, ‘அஞ்ஞாடி’ உள்ளிட்ட  பல நாவல்களை பூமணி எழுதியுள்ளார். 
இந்த நாவலுக்காகன மூலாதாரத்திற்காக, பூமணி 10 ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்துள்ளார். அதன்பிறகே இந்த ‘அஞ்ஞாடி’  நாவலை எழுதியுள்ளார்.

பூமணி ‘கருவேலம்பூக்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil