Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதாபிஷேகம்

பாரதசாரி

சதாபிஷேகம்
, புதன், 28 மார்ச் 2012 (12:07 IST)
"சூரியும், வெங்குட்டுவும் தான் வரனும், மத்த எல்லாரும் வந்தாச்சு" என்று அமர் சொல்லும்போதே அவர்களும் வந்து விட்டார்கள்.ஒரு ஓர நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த பரிதாபமானவரை எல்லோருமாக சேர்ந்து முறைத்தபடி,

"என்ன சொல்றப்பா நீ?"

"முடியாது, என்னால முடியாது"

"எல்லாருமே அப்படிதான் நினைக்கிறோம், உன்னால் முடியாது, விலகி போய்டு"

"நீங்க சொல்ற முடியாது வேற, நான் சொல்றது வேற. நான் சொன்னது என்னால அத விட முடியாது"

"ஏன் இப்புடி அடம் புடிக்கற? உன்னோட நல்லதுக்கு தான் சொல்றோம், போதுமே"

"அத சொல்ல நீங்க யாரு?"

"நாங்க சொல்லாம யாரு சொல்லுவா?இப்படி பெரியவா எல்லாரையும் , மரியாதையில்லாம பேசப்டாது, நோக்கும் வயசாரது"

"நேக்கும் வயசாரதுன்னு தெரியரதோன்னோ , அப்ப நீங்க எனக்கு மரியாதை குடுங்கோ"

"இப்படி எதிர்த்து எதிர்த்து பேசாத, நாங்க தான் ஒனக்கு செல்லம் குடுத்து குட்டிசுவராக்கிடோம்னு ஊரே பேசறது"

"அன்னிக்கு அப்படிதான் கப்பு மாமா ஏதோ ஆதங்கத்துல யார்கிட்டயோ சொன்னத மனசுல வெச்சிண்டு, அவர இன்னது தான்னு இல்லாம அப்படி பேசியிருக்க நீ?" சற்று காட்டமாகவே அமர்.

"அவர் யாரு என்ன சொல்ல?"

"என்ன எழவுடா இது, யார பாத்தாலும் கொஞ்சம் கூட மட்டு மரியாதை யில்லாம அவா யாரு இவா யாருன்னு கேக்கற?ஒடனடாத்தாப்புல உங்கூட தான் இருந்தான், அன்னிக்கி கல்கட்டால கண்ணீரும் கம்பலையுமா வந்த புள்ள அதுக்கப்பறம் லவலேசம் அத தொடவே இல்லயே.கொழந்தன்னா அது கொழந்தை"

"அவன் பயந்தாங்குளி"

"இப்புடியே தர்க்கம் பண்ணாத.தோப்பனார் சாவவிட நோக்கு அதான் பெருசா போச்சா?அன்னிக்கும் திரும்பி பாக்கறதுக்குள்ள கம்பிய நீட்டிட்டயே படவா நீ?"

"ஆமாம் எனக்கு அது தான் முக்கியம்"

சூடான சமோசாக்கள் வந்தது. அதை கடித்தவாறே கிச்சா "உன்ன யாரு அத அப்படியே பொசுக்குனு விட சொன்னா? இதோ இங்க பம்பாய்லயே இருந்துண்டு உள்ளூர்ல மட்டும் ஜோலிய ஒத்துக்கோ, மத்த நேரத்துல ஹோட்டல பாத்துக்கோ, கல்லால நீ பொறுப்பா இல்லேன்னா வியாபாரம் படுத்துரும்"

"அதான் அண்ணா பாத்துக்கறாரே"

"ஆமாம்டா அவனும் எவ்வளவு தான் செய்வான்? அவனுக்கு குடும்பம் குட்டியெல்லாம் இல்லயா?நீ இப்படியே சுத்தற, பாவம் ஒரு கரண்ட் பில்லு கட்டறதுலேந்து, பால் வாங்கறவரைக்கும் அவன் தான் பாவம் போறான்"

"ஒனக்கு வக்காலத்து வாங்கறதுக்கு ஒரு கூட்டம் வேற வெச்சிண்டு ஆர்ப்பாட்டம் செய்யறியே"

"உன்னோட கொழந்த பள்ளிகூடத்துக்கு அப்லிகேஷன் ஃபார்ம்ல கூட நீ கையெழுத்து போடலையாமே? அஞ்சு சொல்லி ஆத்து ஆத்து போயிட்டா"

"இல்ல அப்போ நான் ஃபார்ம்.."

"போதும் அத பத்தி மட்டும் நீ பேசாத. சாய்பாபா மேல சத்தியமா இனிமே அத நீ விடனும் " என்று உஷ்னமாக சொன்ன சூரி , சமோசா தட்டுக்கு அடியில் ரகசியமாக மறைத்து வைக்கபட்டிருந்த சூடத்தை எடுத்து ஏற்றி பலவந்தமாக சத்தியம் வாங்கிவிட்டார்.

தான் ஏமாந்ததை சற்றும் பொறுக்க முடியாமல் தலையை தொங்கப் போட்டுகொண்டே, அறையை விட்டு வெளியேறினார் சச்சின் டெண்டுல்கர்.

Share this Story:

Follow Webdunia tamil