Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடைசி வரை...

கடைசி வரை...
, திங்கள், 5 டிசம்பர் 2011 (15:17 IST)
விக்டருக்கு மரண பயம் இல்லை. அவனுக்கு 19 வயதுதான். ஆனால் இந்தச் சின்ன வயதில் சாகப் போகிறோம் என்ற அதிர்ச்சி அவனுக்குக் கொஞ்சம் கூட இல்லை. சினிமாவில் வருவது போன்உச்சரிக்க முடியாத பெயருள்ள ஒரு விநோதமான வியாதி அவனுக்கு இருந்தது.

நன்றாகத்தான் இருப்பான் ஆனால் திடீரென்று தான் எங்கே இருக்கிறோம் என்று அவனுக்குத் தெரியாது. அப்படி நடக்கும்போதெல்லாம் ஒரு வாரம் படுத்த படுக்கையாக இருப்பான். அவனுக்கு மரணம் நெருங்கிவிட்டது என்று எல்லாரும் நினைப்பார்கள. ஆனால் ஒவ்வொரு முறையும் தானாக சரியாகி மீண்டும் சகஜமாகிவிடுவான். இது பத்து வருடக் கதை.

சாவதற்கு முன் வாழ்க்கையை முடிந்த அளவு அனுபவித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான் விக்டர். அவன் பாஷையில் `அனுபவிப்பது' என்றால் நல்ல சினிமாவுக்குப் போவது, நல்ல புத்தகங்களைப் படிப்பது, நல்ல இசையைக் கேட்பது, நண்பர்களுடன் கடற்கரைக்குப் போவது இதெல்லாம்தான்.

அவனுக்குக் காதலி என்று யாரும் கிடையாது. காதல் கதைகளைப் படித்துக் கனவு காண்பதோடு சரி. இந்த சூழலில்தான் அவன் தெருவில் ஒரு புதிய கேசட் கடை திறந்தது. மற்ற கடைகளில் கிடைக்காத சில அரிய சி.டி.களும் கேசட்களும் அங்கே கிடைக்கிறது என்று விக்டரின் நண்பர்கள் சொன்னார்கள்.

தான் ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டிருந்த ஒரு பாடகரின் ஆல்பம் அங்கே இருக்கிறதா பார்ப்போம் என்று கிளம்பினான் விக்டர். அது சின்ன கடைதான். அந்தக் கடையில் அவனையும் கடையின் கவுன்டரில் உட்கார்ந்திருந்த பெண்ணையும் தவிர வேறு யாரும் இல்லை. கொஞ்ச நேரம் தேடிய பிறகு அது கிடைத்தது.

கேசட்டை எடுத்துக்கொண்டு கவுன்டருக்குப் போனான் விக்டர். அப்போதுதான் அந்தப் பெண்ணை சரியாகப் பார்த்தான். ஒரு நொடி விக்டர் ஸ்தம்பித்துப் போனான். அவ்வளவு அழகு அந்தப் பெண். அவன் கேசட்டை அவளிடம் நீட்டியதும் அவள் அழகாகப் புன்னகைத்து அதை வாங்கிக் கொண்டாள்.

அதற்குப் பிறகு ஏதாவது ஒரு சாக்கு வைத்து அந்தக் கடைக்கு மீண்டும் போக முடியாதா என்று நினைத்தான் விக்டர். அடுத்த நாள் திரும்பவும் ஒரு கேசட் வாங்கப் போனான். கடையின் ஒரு மூலையில் நின்றுகொண்டு கேசட்களையும் சி.டி.களையும் பார்ப்பது போல் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அந்தப் பெண் அதை கவனித்தாள். ஆனால் கண்டுகொள்ளவில்லை. எப்போதும் போல் புன்னகையுடன் பில் போட்டாள். ஆனால் இந்த முறை, "கேசட்டை கவரில் சுற்றித் தரட்டுமா?" என்று கேட்டாள். விக்டர் கனவிலிருந்து மீளாமல் சரி என்று சொன்னான். இது தினமும் நடந்தது.

ஒரு கட்டத்தில் விக்டருக்கு அந்தப் பெண்ணைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் போனது. இல்லாத கேசட்களைப் பற்றி விசாரிப்பது போல் அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுப்பான். அவளும் ரெடியாகப் பேசுவாள். அந்த ஒரு சில வார்த்தைகளோடு சரி.

அந்தப் பெண்ணிடம் வெளிப்படையாகப் பேச விக்டருக்குக் கூச்சமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அவளிடம் `நாம் நண்பர்களாக இருக்கலாமா?' என்று சொல்ல நினைப்பான். தன் தொலைபேசி எண்ணைக் கொடுக்க நினைப்பான். ஆனால் வெட்கமும் பயமும் அவனைத் தடுத்தன.

இடையில் ஒரு வாரம் அவன் உடல்நிலை சரியில்லாமல் படுத்துக்கிடந்தான். வழக்கம்போல் குணமானதும் மீண்டும் அவளை சந்தித்தான். அன்று பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தான் விக்டர். அன்றும் கையில் கிடைத்த ஒரு கேசட்டை எடுத்துக் கொண்டு அவளிடம் போனான். பில்லையும் கேசட்டையும் வாங்கிக் கொண்டு கிளம்பினான். பிறகு திரும்பி வந்தான்.

ஒரு சிறிய தாளில் `எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கிறது. உனக்கு நண்பனாக இருக்க ஆசைப்படுகிறேன். உனக்கும் விருப்பம் இருந்தால் தயவு செய்து எனக்கு ஃபோன் செய்' என்று அதில் அவசரமாகக் கிறுக்கி, தன் பெயரையும் தொலைபேசி எண்ணையும் எழுதி வைத்துவிட்டு வெளியேறினான். ஓடிப் போனான் என்றுதான் சொல்லவேண்டும்.

அன்று விக்டருக்கு அவளிடமிருந்து ஃபோன் வரவில்லை. மறுநாள் அவனுக்கு கடுமையான காய்ச்சல். நள்ளிரவில் அமைதியாக இறந்து போனான் விக்டர். ஒரு வாரம் ஆனது. அந்தப் பெண்ணிடமிருந்து ஃபோன் வந்தது. விக்டரின் அம்மாதான் எடுத்தார்.

விக்டர் இறந்த செய்தியை அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னார் அவன் அம்மா. மறுமுனையில் சில நொடிகள் மௌனம். பிறகு விக்டரின் வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டாள் அந்தப் பெண்.

விக்டரை நினைவுபடுத்தும் பொருட்கள் என்னென்ன இருக்கிறது என்று பார்க்க அவன் அறைக்குள் சென்றார் அவன் அம்மா. அலமாரியைத் திறந்ததும் மலைத்துப் போனார் அவர். நூற்றுக்கணக்கான கேசட்கள் அங்கே குவிந்து கிடந்தன. அவற்றில் எல்லாமே பிரிக்கப்படாமல் இருந்தன!

ஒரு கேசட் பையைத் திறந்து பார்த்தார் அவர். உள்ளே ஒரு சிறு தாளில் ஒரு குறிப்பு இருந்தது :

"ஹாய், உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. என்னை நண்பியாக ஏற்றுக் கொள்வாயா?

இப்படிக்கு
காத்தரின்

இன்னொரு பையைத் திறந்து பார்த்தார். அதிலும் அதே குறிப்பு. ஒவ்வொரு பையாகத் திறந்து பார்த்தார் அவர். ஒவ்வொன்றிலும் அதே குறிப்பு இருந்தது, கடைசி கேசட் வரை...

(இது ஒரு தழுவல் கதை)

Share this Story:

Follow Webdunia tamil