Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தந்தையைப்போல் பிள்ளை' - பிராட் மீது ஆஸி.ஊடகம் தாக்கு!

'தந்தையைப்போல் பிள்ளை' - பிராட் மீது ஆஸி.ஊடகம் தாக்கு!
, திங்கள், 15 ஜூலை 2013 (17:41 IST)
FILE
ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் மோசடி செய்தது அம்பலமானது. இதனையடுத்து இவரது தந்தையும் முன்னாள் இங்கிலாந்து வீரரும், ஐசிசி. ஆட்ட நடுவருமான கிறிஸ் பிராட் மீது ஆஸி. ஊடகம் ஒன்று நெருப்பைக் கக்கியுள்ளது.

ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தபோது மைக்கேள் கிளார்க்கிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். அது கிளீன் ஆன ஒரு எட்ஜ் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த இடத்தில் பந்து வெறு எங்கும் பட்டு செல்ல வாய்ப்பும் இல்லை.

பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் மிக மோசமாக அதனை நாட் அவுட் என்றார். ஆனால் பிராட் வெளியேறியிருக்கவேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து விளையாடி 67 ரன்கள் எடுத்தது இங்கிலாந்தின் வெற்றியில் 80% பங்கு வகித்துள்ளது.

இதனையடுத்து ஆஸி.ஊடகங்கள் 'ஆஷஸ் வில்லன் பிராட்' என்ற ரீதியில் எழுதத் தொடங்கியுள்ளது.

ஆனால் ஸ்டூவர்ட் பிராடின் தந்தை கிறிஸ் பிராடும் இத்தகைய மோசமான மனோ நிலை படைத்தவர்தான் என்று பத்திரிக்கை ஒன்று தாக்கியுள்ளது.

அதாவது 1987ஆம் ஆண்டு லாகூரில் டெஸ்ட் போட்டி ஒன்றின் போது நடுவர் கையைத் தூக்கியும் வெளியேறமாட்டேன் என்று ஸ்டூவர்ட் பிராட் தந்தை கிறிஸ் பிராட் அடம்பிடித்தாராம். ஆனால் அது வேறு ஒரு சூழ்நிலை. பாகிஸ்தான் நடுவர்கள் அந்த காலக்கட்டத்தில் மோசடிப் பேர்வழிகளாக இருந்தனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இப்போது மகன் பிராட் அவுட் ஆகியும் வெளியேறாமல் தொடர்ந்து ஆடியது உண்மையில் ஆஸ்ட்ரேலியர்களுக்கு கடும் எரிச்சலையும், கோபத்தையும், கேலி, கிண்டல் உணர்வுகளையும் கிளப்பியுள்ளது.

தந்தையைப் போல் மகன் என்று எழுதத் தொடங்கியுள்ளனர். ஆனால் மகனது இந்தச் செயலைப் பற்றி வாய் திறக்காத தந்தை கிறிஸ் பிராட் என்ன கூறுகிறார் தெரியுமா?

"எனது மகன் ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்ட்ரேலியர்கள் போல் கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடுகிறான்" என்று பெருமை பொங்கக் கூறியுள்ளார்.

விக்டோரியாவில் கிளப் ஒன்றுக்கு ஆடும்போதே அவன் ஆஸ்ட்ரேலிய மாதிரியைக் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டான் என்கிறார்.

ஆஸ்ட்ரேலியாவுக்கு பிராட் மீது கோபப்பட தார்மீக உரிமை இருக்கிறதா:

webdunia
FILE
உண்மையில் பவுல்டு ஆனால் கூட விக்கெட் கீப்பர் ஏதாவது தட்டி விட்டிருப்பாரோ என்று சந்தேகப்பட்டு ஆஸ்ட்ரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ் உட்பட சில வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறாமல் அடம் பிடித்து நின்றதையும் நாம் பார்த்துள்ளோம்.

ஸ்டீவ் வாஹிடம் நீங்கள் ஏன் அவுட் என்று தெரிந்தும் நிற்கிறீர்கள் என்று கேட்டால், நடுவருக்கென்று பணி உள்ளது அவர் அதனைத் திறம்படச் செய்யவேண்டும் என்று கூறுவார்.

இப்போது பிராட் அவுட் ஆகி நடுவர் கொடுக்காததால் போகாமல் தொடர்ந்து விளையாடும்போது மட்டும் ஆஸி.வீரர்கள், ஊடகங்கள் தொடர்ந்து காட்டுக் கூச்சல் போடுகின்றன.

கில்கிறிஸ்ட் அவுட் என்று தெரிந்தால் போவதுதான் முறை என்று வாய் கிழிய சில காலம் கூறிவந்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் வக்கார் யூனிஸ் பந்தில் கிளீன் எட்ஜ் செய்து கேட்ச் ஆனது. மோசடி ஆஸி.நடுவர் அதனை நாட் அவுட் என்றார். கில்கிறிஸ்ட் வெளியேறவில்லை. அன்று இவருக்கு மட்டுமல்ல ஜஸ்டின் லாங்கர் சக்லைன் முஸ்க்டாக் பந்தில் குறைந்தது 3 முறையாவது அவுட் ஆகியிருப்பார். வெளியேறவேண்டியதுதானே? கடைசியில் அந்தப் போட்டியில் பாவம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

இந்தியா கும்ளே தலைமையில் ஆஸ்ட்ரேலியா சென்றபோது சிட்னி டெஸ்ட் போட்டியில் பாண்டிங் தலைமையில் ஆஸ்ட்ரேலியா செய்யாத அட்டூழியமா? கங்கூலிக்கு பாண்டிங்கே அவுட் என்று தீர்ப்பளித்த கொடுமையையெல்லாம் நாம் பார்த்திருக்கிறோமே?

அந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து சைமன்ட்ஸுக்கு கொடுக்காத அவுட் மட்டும் 10 அல்லது 12 இருக்கும். அப்போது சைமன்ட்ஸ் தானாக வெளியேறியிருக்கவேண்டியதுதானே?

அப்போது 'பார்டர்-கவாஸ்கர் டிராபி வில்லன்' 'மோசடிப் பேர்வழி' என்றெல்லாம் இந்திய ஊடகங்கள் எழுதியதா?

தன்னுடைய மோசடி தனக்கே திரும்பும்போது இன்று ஆஸி. ஊடகங்கள் தாம் தூமென்று குதிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

கவாஸ்கர் ஒருமுறை 1981 ஆஸி. பயணம் குறித்துக் கூறியதுதான் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த மனோ நிலையும்: 'கிரெக் சாப்பலுக்கு ஒவ்வொரு இன்னிங்ஸ்களிலும் இரண்டு கிச்சான்களை வழங்கினார் நடுவர்'!' என்று கூறினார் கவாஸ்கர். அதாவது கவாஸ்கர் கூறியதன் உள்ளர்த்தம் என்னவெனில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும். அவ்வளவுதான் ஆஸ்ட்ரேலிய மனோநிலை.

மேலும் கபில்தேவ் தலைமையில் 1986அம் ஆண்டு ஆஸ்ட்ரேலியா சென்றபோது இந்தியா 2- 0 என்று வென்றிருக்கும். ஆனால் ஆஸி. கேப்டன் பார்டரின் நிபந்தனையின் பேரில் நடுவர்கள் கடும் மோசடி வேலைகளைச் செய்தனர். கடைசியில் ஒரு போட்டியைக் கூட வெல்ல முடியாமல் இந்தியா திரும்பி வந்தது. இதைத்தான் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வரலாற்றில் 'பார்டர் மூலம் மறுஜென்மம் எடுத்த ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட்' என்று வர்ணித்து வருகின்றனர். ஃப்ராடை மறு ஜென்மம் என்று தூக்கிப்பிடிக்கும் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் இன்று பிராடை வில்லன் என்று கூற என்ன தகுதி இருக்கிறது?

இன்று டீ.ஆர்.எஸ். மோசடி ஆ.. ஊ.. என்றெல்லாம் ஆஸ்ட்ரேலியா பேசுவதற்கு வாய் இருக்கிறதா என்பதே நம் கேள்வி.

Share this Story:

Follow Webdunia tamil