Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள தீர்த்தங்களின் மகிமைகள்...!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள தீர்த்தங்களின் மகிமைகள்...!
காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் திருச்செந்தூர் தலத்தில் தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றில், கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றில்  மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள். கடற்கரையில் அமைந்திருந்த சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்துவிட்டன. அந்தத் தீர்த்தக் கட்டங்களைக்  குறிப்பிடும் கல்வெட்டுகளும் காணாமல் போய்விட்டனவாம்.
1. முகாரம்ப தீர்த்தம்: இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப் பருகுவர்.
 
2. தெய்வானை தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.
 
3. வள்ளி தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.
 
4. லட்சுமி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர், குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப்பெறுவர்.
 
5. சித்தர் தீர்த்தம்: காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக, பைசாசு என்கிற பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.
 
6. திக்கு பாலகர் தீர்த்தம்: கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைத் தரும்.
 
7. காயத்ரீ தீர்த்தம்: அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் அருளும்.
 
8. சாவித்ரி தீர்த்தம்: பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.
 
9. சரஸ்வதி தீர்த்தம்: சகல ஆகம புராணங்க ளையும் அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.
 
10. அயிராவத தீர்த்தம்: சந்திர பதாகை முதலிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.
 
11. வயிரவ தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் பல புண்ணிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.
 
12. துர்கை தீர்த்தம்: சகல துன்பங்களும் நீங்கி நன்மைகிட்டும்.
 
13. ஞானதீர்த்தம்: இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.
 
14. சத்திய தீர்த்தம்: களவு, கள்ளுண்டல், குரு நிந்தை, அகங்காரம், காமம்,பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றினின்றும் நீக்கி,  சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.
 
15. தரும தீர்த்தம்: தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும்.
 
16. முனிவர் தீர்த்தம்: மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக் கண்ட பலனைப் பெறுவர்.
 
17. தேவர் தீர்த்தம்: காமம், குரோதம், லோபம் மோகம் போன்ற ஆறு குற்றங்களை நீக்கி, ஞான அமுதத்தை நல்கும்.
 
18. பாவநாச தீர்த்தம்: சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த்தங்களையும் அளிக்கவல்லது.
 
19. கந்தபுட்கரணி தீர்த்தம்: சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசை சூடும் மேன்மையைப் பெறுவர்.
 
20. கங்கா தீர்த்தம்: இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தெப்பம் போன்றிருக்கும்.
 
21. சேது தீர்த்தம்: சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருள வல்லது.
 
22. கந்தமாதன தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.
 
23. மாதுரு தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.
 
24. தென்புலத்தார் தீர்த்தம்: இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளும் தண்ணீரும் இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட் கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவகிரகத்துக்கு உகந்த கணபதி துதி...!