Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்கலைக்கழகங்களில் ரூ.1.86 கோடி செலவில் மின்னணு நூலகங்கள்

பல்கலைக்கழகங்களில் ரூ.1.86 கோடி செலவில் மின்னணு நூலகங்கள்
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (20:09 IST)
மின் நூல்கள், மின் இதழ்கள், ஒளிப் படங்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை மாணவர்கள் எளிதில் பெறும் வண்ணம் ரூ.1.86 கோடி செலவில் மின்னணு நூலகக் களஞ்சியங்கள் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், 2014 ஆகஸ்டு 1ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது:
 
இந்தியாவின் அறிவுத் தலைநகரமாகவும், புதுமைத் தளமாகவும் தமிழகத்தை மாற்றுவது தான் எனது அரசின் குறிக்கோளாகும். தற்போதுள்ள எண்ணியல் தொழில்நுட்ப யுகத்தில், உயர் கல்வித் துறையின் 13 பல்கலைக்கழகங்களில், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்களை இணைய தளம் மூலம் இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் மின் தொடர்பு நூலகக் களஞ்சியங்களை இணைய தள வசதியுடன் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
 
மின் நூல்கள், மின் இதழ்கள், ஒளிப் படங்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை, மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் தரவிறக்கம் செய்து எளிதில் பெற இத்திட்டம் வழிவகை செய்யும். 
 
அனைத்துப் பல்கலைக்கழகங்களும், அவற்றில் இணைவு பெற்ற கல்லூரிகளும், இந்தக் களஞ்சியத்துடன் இணைக்கப்படும். உலகளாவிய அறிவு வளங்களை எளிதில் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் இத்திட்டம் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil