Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீமராஜா: திரைவிமர்சனம்

சீமராஜா: திரைவிமர்சனம்
, வியாழன், 13 செப்டம்பர் 2018 (13:13 IST)
சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்துவிட்டதாகவும், மாஸ் ஓப்பனிங் வசூல் பெரும் நடிகர் என்ற பெயரை எடுத்துவிட்ட சிவகார்த்திகேயனின் இந்த படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம்

திருநெல்வேலி அருகேயுள்ள சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ராஜா பரம்பரையில் வந்த நெப்போலியனின் மகன் தான் சீமராஜா சிவகார்த்திகேயன். மற்ற ராஜாக்கள் போலவே எடுபிடுகளுடன் ஊர் சுற்றி திரியும் ராஜாவான சிவகார்த்திகேயனுக்கு பக்கத்து ஊராகிய புளியம்பட்டியை சேர்த்த சமந்தாவை பார்த்தவுடன் காதல் வருகிறது. சிங்கம்பட்டிக்கு புளியம்பட்டிக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் காதல் கைகூடியதா? என்பதே இந்த படத்தின் கதை.

சிவகார்த்திகேயன் இந்த படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் காமெடியை அள்ளி அள்ளி வழங்கியுள்ளார். இருபது நிமிட பிளாஷ்பேக் காட்சி தவிர முழுக்க முழுக்க காமெடிதான். இதனால் ஒருசில காட்சிகளில் அவர் சீரியஸாக நடித்தாலும் அதுவும் சிரிப்பு காட்சியாகவே தெரிகிறது.

சமந்தாவின் அழகும் நடிப்பும் இன்னும் அவர் பல வருடங்கள் தமிழ் சினிமாவில் இருப்பார் என்பதை உறுதி செய்கிறது. இயல்பான நடிப்பு, கிராமத்து காஸ்ட்யூம் என சமந்தா இந்த படத்திலும் ஸ்கோர் பெறுகிறார்.

சூரியின் வழக்கமான வசன உச்சரிப்பு எரிச்சலை தந்தாலும், காமெடி இந்த படத்தில் நன்றாக எடுபடுகிறது. 'நாக சைதன்யாவே வந்தாலும் சமந்தாவை தூக்காமல் விடமாட்டேன் என்று சூரி பேசும் வசனத்தின்போது தியேட்டரில் நல்ல கலகலப்பு. அதேபோல் ஊருக்குள் சிறுத்தை புகுந்த காட்சியில் சூரியின் காமெடி அட்டகாசம்

webdunia
சிம்ரனின் நடிப்பை பார்க்கும்போது நான் திரைப்படம் பார்க்கின்றோமா? அல்லது சீரியல் பார்க்கின்றோமா? என்ற சந்தேகம் வருகிறது. அதிலும் அவருக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் சற்றும்  பொருந்தவில்லை. கர்ண கொடூரமாக உள்ளது.

வில்லனாக லால் நடித்துள்ளார். 'சண்டக்கோழி' படத்தில் அற்புதமாக நடித்த நடிகரை இந்த படத்தில் வீணடித்துள்ளனர். அதேபோல் நெப்போலியன் நடிப்பும் இந்த படத்தில் எடுபடவில்லை.

டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும் பிரமாதம் என்று சொல்ல முடியாது. பின்னணி இசையும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. பாலசுப்பிரமணியன் கேமிரா, கிராமத்து அழகை அழகாக காட்டுகிறது. இந்த படத்தின் தேவையில்லாத காட்சிகளை எடிட்டர் விவேக் ஹர்சன் கட் செய்திருக்கலாம். ஆனால் அப்படி கட் செய்வதென்றால் முதல் பாதி முழுவதையும் கட் செய்ய வேண்டும்

இயக்குனர் பொன்ராம் இந்த படத்தில் கதைக்கு முக்கியத்துவம் தராமல் முழுக்க முழுக்க காமெடியை வைத்தே ஓட்டிவிடலாம் என்று முடிவெடுத்துள்ளார். முதல் பாதி படத்தை பார்க்காமலே இந்த படத்தின் கதை என்ன என்பதை கூறிவிடலாம். முதல் பாதியில் மருந்துக்கு கூட ஒரு வரி கதை கூட இல்லை. இரண்டாம் பாதியில் ஓரளவு கதை தொடங்குகிற போது திடீரென ஒரு மொக்கையான பிளாஷ்பேக் வந்து படத்தின் கொஞ்சம் இருந்த விறுவிறுப்பையும் போக்கி விடுகிறது. ஒரு கேவலமான போர்க்காட்சியை படத்தில் வைத்துவிட்டு 'பாகுபலி'க்கு இணையான போர்க்காட்சி உள்ள படம் என விளம்பரப்படுத்தியதுதான் பெரிய காமெடி

விவசாயிகளின் நிலைமை, நிலம் கையகப்படுத்துதல், வளரி என்ற ஆயுதத்தை முதல் முதலில் பயன்படுத்தியது தமிழன் தான் போன்ற சில காட்சிகள் மட்டும் படத்தின் ஹைலைட். மற்றபடி சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்களை தவிர மற்றவர்களுக்கு இந்த படம் ஒரு சொதப்பல் ராஜா தான்

ரேட்டிங்2/5

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசி தியேட்டரில் சிவகார்த்திகேயன், சூரி! ரசிகர்கள் பேரதிர்ச்சி....