Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் படமும் சுஜாதாவும்

விக்ரம் படமும் சுஜாதாவும்
, சனி, 6 பிப்ரவரி 2016 (14:22 IST)
கமலின் விக்ரம் படத்தின் கதை சுஜாதாவினுடையது. படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்கு அவரையேச் சாரும். சுஜாதா எழுதிய கதையை அப்படியே திரையில் கொண்டுவர எப்படி கமல் மெனக்கெட்டார் என்பதை தனக்கேயுரிய நையாண்டியுடன் சுஜாதா விவரித்துள்ளார். இனி சுஜாதா...


 
 
"இந்தக் கதைக்கு ஆதாரமான, மிக ஆதாரமான சம்பவம் ஒரு செப்டம்பர் மாத மழை நாளில் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் ஒரு பிற்பகலில் நடந்தது."
 
இதைப் படமாக எடுத்தது சென்னை மியூசியம் தியேட்டர் முன்னால் மழையற்ற, வெயில் பட்டை உரியும் நடுப்பகலில். கமல் "மழை இருந்தா நல்லா இருக்கும்" என்று சொல்லிவிட மழை உண்டாக்கப்பட்டது. ராட்ஷஸ விசிறிகள், தண்ணீர் லாரிகள், புயல் காற்று. (சர்க்குலேடர் உபயத்துடன்.)
 
ராஜசேகர் "ஏன் சார் மழை பேஞ்சா என்ன, பேயாட்டி என்ன? நீங்க பாட்டுக்கு செப்டம்பர் மாத மழை நாள்ன்னு எழுதிர்றீங்க. தாவு தீர்றது பாருங்க" என்று சிரித்தார். அது போலப் பாதுகாப்பு மந்திரிசபை போர்டின் மேல் ஒரு பறவை உட்கார்ந்திருந்தது என்று எழுதியிருந்தேன். இதை எடுத்தது குதுரேமுக் ஃபாக்டரியின் அருகில். அங்கே புறா வராது என்று சென்னையிலிருந்தே இரண்டு புறா, ஒரு புறாக்காரர் எடுத்து வந்திருந்தார்கள். அதிகாலை புறாவின் காலில் கயிறு கட்டப்பட்டு அதை போர்டின் மேல் உட்கார வைத்து, கிரேனில் கேமெரா காத்திருக்க, அது புது இடத்தில் பாஷை புரியாததால் கேமெரா பக்கமே திரும்ப மாட்டேன் என்று அடம் பிடித்தது. தானியம் லஞ்சம் கொடுத்துப் பயனில்லை. தொண்டைக்குள் க்கும் பக்கும் என்று சொல்லியும் ம்ஹூம். அது ஒரு மணிக்குப் பின் தான் கேமெரா பக்கமே திரும்பியது.
 
அப்போது டைரக்டர், "யோவ் புறா அளுக்காயிருச்சு, சுத்தம் பண்ணிக் கொண்டு வாய்யா" என்று சொல்ல, யாரோ ஒருவர் அவசரப்பட்டு அதைத் தண்ணீரில் முக்கிவிட, புறா குளிரில் ஒரு டேபிள்டென்னிஸ் பந்து அளவுக்குச் சுருங்கி விட்டது.
 
இரண்டாவது புறாவைப் பார்க்கலாம் என்றால் அது பறந்து பதறியது. கடைசியில் சீனியர் புறாவை ஹேர் டிரையர் போட்டு சூடு பண்ணி, மறுபடி புஸுபுஸுவாக்கிக் கொண்டு வந்தார்கள்.
 
ஒரு வரியைப் படம் பிடிக்க ஒரு மணி நேரம். கமல் வந்து, "என்ன, திருப்திதானே?" என்றார்.
 
சற்றுத் தள்ளிப் போய் நின்று, "குமுதத்தில் கருங்குருவின்னு எழுதியிருந்ததா ஞாபகம்" என்றேன்.
 
- இந்த கடைசி வரிகளில் சுஜாதா கமலை பகடி செய்கிறாரோ என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படும். நொடியில் கடந்து போகிற காட்சிக்கு இப்படியெல்லாம் மெனக்கெட வேண்டுமா என்ற கேள்வியும் சுஜாதாவின் கடைசி வரியில் தொக்கி நிற்கிறது.
 
ஒருகாலத்தில் புறாவுக்கு ஸ்பேர் வைத்து காட்சிகள் எடுத்த கமல், உத்தம வில்லனில் சொதப்பலான கிராபிக்ஸ் புலியையயும், எலியையும் பயன்படுத்தியிருக்கிறார் என்பதையும் இந்தப் பதிவு நினைவுப்படுத்துகிறது.

Share this Story:

Follow Webdunia tamil