Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவாஜியை சிவாஜியுடன் மோதவிட்ட ஏ.சி.திருலோகச்சந்தர்

சிவாஜியை சிவாஜியுடன் மோதவிட்ட ஏ.சி.திருலோகச்சந்தர்

சிவாஜியை சிவாஜியுடன் மோதவிட்ட ஏ.சி.திருலோகச்சந்தர்
, வியாழன், 16 ஜூன் 2016 (12:11 IST)
ஏ.சி.திருலோகசந்தரின் மறைவு தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பு. வெறும் வார்த்தையல்ல. அவரது படைப்புகளின் வரிசையைப் பார்த்தால் அவர் எத்தனை மகத்தான படைப்பாளியாக இருந்தார் என்பது தெரியும்.


 
 
வீரத்திருமகன் படத்தை இயக்கி தமிழ் திரையில் இயக்குனராக முத்திரை பதித்தார் ஏசிடி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழிகளில் சுழன்றடித்தார். அன்பே வா, தெய்வமகன், தங்கை, இருமலர்கள், எங்க மாமா, எங்கிருந்தோ வந்தாள், அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா... என்று அவர் இயக்கிய படங்கள் எல்லாமே தரமானவை. கமர்ஷியலாக வெற்றி பெற்றவை.
 
திரைத்துறையில் ஏசிடி நிகழ்த்தி சாகசங்கள் சுவாரஸியமானவை. அதில் சிவாஜியை சிவாஜியுடன் மூன்றுமுறை மோதவிட்டு மூன்றுமுறையும் வெற்றி பெற்ற கதை முக்கியமானது.
 
இரண்டு மாஸ் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானாலே இன்று திரையரங்குகளும், திரைத்துறையும் திணறிப்போகும். வசூல் பாதிக்கும் என்று தயாரிப்பாளரிலிருந்து பாப்கார்ன் விற்பவர்வரை கூப்பாடு போடுவார்கள். திரையரங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த அந்தக்காலத்தில் அப்படியெல்லாம் இல்லை. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியான கதையெல்லாம் உண்டு.
 
1967 -இல் ஏசிடி சிவாஜியை வைத்து இரு மலர்கள் படத்தை இயக்கினார். அவர் இயக்கிய படங்களில் இரு மலர்களே ஆகச்சிறந்த படம் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இரு மலர்கள் வெளியாவதாக இருந்த அதே தினத்தில் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி நடித்த ஊட்டி வரை உறவு படமும் வெளியீட்டுக்கு தயாரானது. ஒரேநாளில் ஒரு நடிகரின் இரு படங்களா என்று பஞ்சாயத்து எல்லாம் பேசாமல் இரு மலர்களையும், ஊட்டி வரை உறவையும் ஒரேநாளில் வெளியிட்டனர். இரு படங்களும் 100 நாள்களை கடந்து ஓடின.
 
1970 -இல் மீண்டும் அதுபோன்ற ஒரு சூழல். ஏசிடி சிவாஜியை வைத்து எங்கிருந்தோ வந்தாள் படத்தை எடுக்கிறார். டி.ஆர்.ராமண்ணா சிவாஜியை வைத்து சொர்க்கம் படத்தை எடுக்கிறார். இரண்டுக்கும் ஒரே ரிலீஸ் தேதி. இரண்டும் ஒரே நாளில் வெளியாகிறது. இரண்டுமே ஹிட். 100 நாள்களை தாண்டுகின்றன.
 
1975 -இல் சிவாஜியை வைத்து டாக்டர் சிவா படத்தை இயக்கிய போதும், இயக்குனர் ஸ்ரீதர் போட்டியாக வருகிறார். ஸ்ரீதர் சிவாஜியை வைத்து வைர நெஞ்சம் படத்தை இயக்கியிருந்தார். இரண்டுக்கும் ஒரே ரிலீஸ் தேதி. இரண்டுமே 100 நாளை கடந்து வெற்றி பெறுகின்றன.
 
சிவாஜியை சிவாஜியுடன் மூன்றுமுறை மோதவிட்டு மூன்று முறையும் வெற்றிபெற வைத்ததுள்ளார் ஏசி திருலோகசந்தர். அவர் எப்பேர்ப்பட்ட ஜாம்பவான் என்பதற்கு இது சின்ன உதாரணம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்தா பஞ்சாப் படத்துக்கு தடைகோரி வழக்கு