Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மறக்க முடியுமா - கேமரா பஃப் (Camera Buff)

மறக்க முடியுமா - கேமரா பஃப் (Camera Buff)
, சனி, 28 ஜனவரி 2017 (12:23 IST)
போலந்தின் மிக முக்கியமான இயக்குனர் க்ரைஸ்டாஃப் கீஸ்லோவ்ஸ்கி இயக்கத்தில் 1979 -இல் வெளிவந்த திரைப்படம், கேமரா  பஃப். ஒரு சாதாரண கம்பெனி பணியாள் எப்படி சினிமா என்ற கலைக்குள் வீழ்கிறார், அது எப்படி ஒரு மேட்னெசாக மாறுகிறது என்பதை இந்தப் படம் பேசுகிறது.

 
பிலிப் மோஸ் என்பவர் ஒரு கம்பெனியின் பர்சேஸ் பிரிவில் வேலை பார்ப்பவர். அவரது மனைவி ஒரு பெண் குழந்தையை  பெற்றெடுக்கிறார். தனது குழந்தையை படம் பிடிப்பதற்காக 8 எம்எம் மூவி கேமரா ஒன்றை பிலிப் வாங்கி வைத்திருக்கிறார்.  அதில் தனது குழந்தையை படம் எடுக்கிறார்.
 
பிலிப்பிடம் கேமரா இருப்பதை அறியும் கம்பெனி எம்டி கம்பெனியின் 25 வது ஆண்டுவிழாவை படம் பிடிக்கும் பொறுப்பை  அவரிடம் தருகிறார். பிலிப் ரொம்பவும் ஆத்மார்த்தமாக அந்த வேலையை செய்கிறார். மகளை படம் பிடிக்க வாங்கிய  கேமராவை பிற வேலைகளுக்கும் பயன்படுத்துகிறார் என்று பிலிப் மீது அவரது மனைவிக்கு கோபம். முக்கியமாக பிலிம்  மேக்கிங்கில் பிலிப் காட்டுகிற கவனம் அவளை தொந்தரவு செய்கிறது. தன்னையும் குழந்தையையும் பிலிப் புறக்கணிப்பதாக  அவர் கருதுகிறாள்.
 
பிலிப்பின் ஆவணப்படம் லோக்கல் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு மூன்றாவது பரிசை வெல்கிறது. அதனைத் தொடர்ந்து  தனது கம்பெனியில் 25 வருடங்களாக வேலை பார்த்துவரும் குள்ளமான மனிதர் பற்றிய ஆவணப்படத்தை பிலிப் இயக்குகிறார்.  அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. பிலிப்புக்கு பாராட்டு கிடைக்கிறது.
 
அவர் தனது சின்ன நகரத்தில் விளையாட்டு போட்டிகள் நடந்த போது கட்டிடங்களை அரைகுறையாக புனரமைத்ததை பதிவு  செய்கிறார். இது அவருக்கு சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது. போலந்து அப்போது கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்தில் இருந்தது. பிலிப்பின் கம்பெனியும் மாநில யூனியனின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது. புனரமைப்பு பணியில் காட்டப்பட்ட  அலட்சியத்துக்காக அதில் சம்பந்தமில்லாத பிலிப்பின் நண்பர் கட்டாய ஓய்வில் போக நிர்ப்பந்திக்கப்படுகிறார்.

webdunia
 
இதன் நடுவில், பிலிப்பின் படம் பிடிக்கும் மோகம் காரணமாக அவனது மனைவியும் அவனைவிட்டு போகிறாள். புதிதாக எடுத்த  ஆவணப்படத்தை நாசம் செய்யும் பிலிப் கேமராவை தன்னை நோக்கி திருப்பி, தனது வாழ்க்கையை பேசி பதிவு செய்வதுடன்  இந்தப் படம் முடிகிறது.
 
கலை என்பது பேஷன்... அதையும் தாண்டி ஒருவகை மேட்னெஸ். அதில் விழுகிறவர்களுக்கு குடும்பம் உள்பட எதுவும்  இரண்டாம்பட்சம்தான் என்பதை இந்தப் படம் சொல்கிறது.
 
கீஸ்லோவ்ஸ்கி அடிக்கடி குறிப்பிடும் ஒரு விஷயம், கதையை வெளியே தேடாதீர்கள், அது உங்களுக்குள்ளிருந்துதான் வர  வேண்டும். கேமரா பஃப் படத்தின் இறுதிக்காட்சியில் அதுவரை உலகை நோக்கி பிடித்திருந்த கேமராவை பிலிப் தன்னை நோக்கி  திருப்புவது கீஸ்லோவ்ஸ்கியின் இந்தகூற்றை பிரதிபலிப்பதை பார்க்கலாம்.
 
கீஸ்லோவ்ஸ்கியின் கலை ஆளுமையை புரிந்து கொள்ள கேமரா பஃப் சிறப்பான தேர்வு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வில்லனாகிறார் விஷால்