Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மறக்க முடியுமா - க்ரைஸ்டாஃப் கீஸ்லோவ்ஸ்கி (1941 - 1994)

மறக்க முடியுமா - க்ரைஸ்டாஃப் கீஸ்லோவ்ஸ்கி (1941 - 1994)
, ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (21:42 IST)
போலந்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் க்ரைஸ்டாஃப் கீஸ்லோவ்ஸ்கி. உலகம் முழுவதும் கீஸ்லோவ்ஸ்கிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழகத்திலும் கணிசமான ரசிகர்கள் இவருக்கு உண்டு. 


 

 
1941 ஜுன் 27 கீஸ்லோவ்ஸ்கி பிறந்தார். பொறியாளரான அவரது தந்தை வேலை நிமித்தமாக ஒவ்வொரு ஊராக செல்லவேண்டியிருந்ததால் கீஸ்லோவ்ஸ்கியின் இளமைப் பருவமும் பல்வேறு ஊர்களில் கழிந்தது. குடும்பம், உறவுகள் மீது அவருக்கு ஈடுபாடு அதிகம். இந்த உலகில் மொழி, இனம், நிறம், எல்லைகள் என்று பல மனிதர்களை பிரிக்கலாம். ஆனால், அவர்களின் பயம், கோபம், பசி, அன்பு என்று உணர்வுகள் அனைத்தும் ஒன்றே. மனிதர்களை இணைக்கும் இந்த விஷயங்களையே எனது படத்தில் நான் சொல்லவிழைகிறேன் என கீஸ்லோவ்ஸி கூறியுள்ளார்.
 
கீஸ்லோவ்ஸ்கி முதலில் ஆவணப் படங்களை எடுத்தார். 1976 -இல் அவரது முதல் முழுநீள திரைப்படம், The Scar வெளியானது. Polish Film Festival -இல் அந்தப் படத்துக்கு Special Jury Prize கிடைத்தது. 1979 -இல் அவர் இயக்கிய, Camera Buff (கேமரா பஃப்) திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. Berlin, Chicago, Moscow  என்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பரிசுகளையும் வென்றது.
 
கீஸ்லோவ்ஸ்கி பைபிளில் சொல்லப்பட்டுள்ள பத்து கட்டளைகளை அடிப்படையாக வைத்து பத்து குறும்படங்களை தொலைக்காட்சி சீரிஸுக்காக இயக்கினார். உலக சரித்திரத்தில் தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட முக்கிய தொடர்களாக இவை கருதப்படுகின்றன. 
 
டெக்கோலக் என்ற பெயரில் அறியப்படும் இந்த பத்து குறும்படங்களில் இரண்டை மட்டும் மேலும் விஸ்தரித்து திரைப்படமாக இயக்கினார். ஏ ஷார்ட் ஃபிலிம் எபௌட் லவ், ஏ ஷார்ட் ஃபிலிம் எபௌட் கில்லிங். இந்த இரு படங்களும் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன.
 
ஏ ஷார்ட் ஃபிலிம் எபௌட் கில்லிங் திரைப்படத்தில் ஒரு கொலையும், அந்த கொலையை செய்தவனுக்கு தூக்குத்தண்டனையும் நிறைவேற்றப்படுவது காட்டப்படுகிறது. கொலை செய்யாதிருப்பாயாக கட்டளையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. கொலையைப் போலவே தூக்குதண்டனையும் ஒரு கொடூரமான கொலையாக இருப்பதை இந்தப் படத்தில் கீஸ்லோவ்ஸ்கி காட்டியிருந்தார். இந்தப் படம் வெளியான பிறகு போலந்தில் தூக்குத்ண்டனை வெகுவாக குறைந்தது. 
 
கீஸ்லோவ்ஸ்கி ப்ளூ, வொயிட், ரெட் என்ற பெயர்களில் படங்கள் இயக்கினார். த்ரீ கலர்ஸ் ட்ரையாலஜி என்று அழைக்கப்படும் இந்தப் படங்கள் அவரது மாஸ்டர் பீஸ்களாக கருதப்படுகின்றன. ரெட் படம் கான் திரைப்பட விழாவில் திரையிட்ட நேரத்தில் - 1994 இல் - தனது ஓய்வை கீஸ்லோவ்ஸ்கி அறிவித்தார். அது நடந்த இரண்டு வருடங்களில் 1996 மார்ச் 13 -ஆம் தேதி தனது 54 -வது வயதில், இதய அறுவைசிகிச்சையின் போது ஏற்பட்ட மாரடைப்பில் அவர் மரணமடைந்தார்.
 
கீஸ்லோவ்ஸ்கியின் திரைமொழி மிகவும் நுட்பமானது. இயல்பான காட்சிகளின் வழியாக தான் சொல்லவந்ததை பார்வையாளர்களுக்குள் கடத்தும் ஆற்றல்மிக்கவர். கான், வெனிஸ் உள்ளிட்ட உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் இவரது படங்கள் விருதுகள் பெற்றுள்ளன. 
 
உலக அளவில் தலைசிறந்த 25 இயக்குனர்களை பட்டியலிட்டால் அதில் கீஸ்லோவ்ஸ்கியின் பெயரும் இடம்பெறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹரியின் ராணுவ கதையில் சூர்யா