Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரனுக்கு கமல் செய்த உதவி

பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரனுக்கு கமல் செய்த உதவி
, செவ்வாய், 19 ஏப்ரல் 2016 (18:26 IST)
தமிழ் சினிமாவில் வள்ளல், பரோபகாரி என்றால் அது எம்.ஜி.ஆர்., அவரைவிட்டால் ரஜினி. சிவாஜியும், கமலும் எச்சில் கையால் ஈ ஓட்டாதவர்கள். ஆனால், அணுகி ஆராய்ந்தால் இந்த உண்மை அப்படியே உல்டாவாக இருக்கும். கமல் விஷயத்தில் இது நூறு சதவீதம் சரி.


 
 
எழுத்தாளர்களை தமிழ் சினிமாவில் அதிகம் அறிமுகப்படுத்தியவரும், அவர்களை அதிகம் பயன்படுத்தியவரும் கமலே. ரா.கி.ரங்கராஜன், மதன், பாலகுமாரன், சுஜாதா என்று பலரை சொல்லலாம். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கமல் மூன்றாம் பிறை படத்தில் நடித்துள்ளார். அந்த ஒரே படம்தான், அதிகம் கிடையாது.
 
ஒருமுறை பாலுமகேந்திராவுக்கு பணமுடை. இரண்டு லட்சங்கள் தேவை. யாரிடம் கேட்டும் கிடைக்காமல் கமலை அணுகியுள்ளார். படங்கள் குறித்து கமலும், பாலுமகேந்திராவும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். கமலிடம் எப்படி, எப்போது சரியாக பணம் கேட்பது என்று பாலுமகேந்திரா தவித்துக் கொண்டிருந்திருக்கிறார். கேட்டால் தருவாரா என்ற ஐயம் ஒருபுறம்.
 
பேச்சினிடையே உள்ளே சென்ற கமல், பத்து லட்ச ரூபாய் எடுத்து வந்து, ராஜ் கமலுக்காக நீங்க ஒரு படம் பண்ணித் தரணும், இது அட்வான்ஸ் என்று தந்திருக்கிறார். உதவி பெறுகிறோம் என்ற கழிவிரக்கம் தோன்றாதபடி, படம் இயக்கித்தர செல்லி பணத்தை தந்திருக்கிறார் கமல். அதனை பாலுமகேந்திராவே பலமுறை கூறியுள்ளார். அப்படி உருவானதுதான் சதிலீலாவதி படம்.
 
வாகா பாடல்கள் வெளியீட்டு விழாவில், தனது முதல் படம் முள்ளும் மலரும் குறித்து சில ஆச்சரிய தகவல்களை வெளியிட்டார், இயக்குனர் மகேந்திரன்.
 
படம் இயக்கும் எண்ணம் இல்லாமலிருந்த அவரை முள்ளும் மலரும் படத்தை இயக்க வைத்ததே கமல்தான் என்றார். முள்ளும் மலரும் படத்துக்கு சரியான கேமராமேன் கிடைக்காதபோது, பாலுமகேந்திராவை கமல்தான் மகேந்திரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். படம் கிட்டத்தட்ட முடிவடைந்த போது, ஒரு காட்சியையும், செந்தாழம் பூவில் பாடலையும் எடுக்க வேண்டாம், பணமில்லை என்று கூறியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். இது பற்றி மகேந்திரன் கமலிடம் கூற, கமல் தயாரிப்பாளரிடம் பேசியுள்ளார். அப்போதும் தயாரிப்பாளர் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. வேறு வழியின்றி செந்தாழம் பூவில் பாடலையும், அந்த காட்சியையும் எடுக்க தனது சொந்த பணத்தை தந்துள்ளார் கமல்.
 
தான் நடிக்கும் படம் நஷ்டமடைந்தால் கோடிக்கணக்கில் சம்பளமாக பெற்ற பணத்தில் சிறு தொகையை திருப்பித் தருவதை வள்ளல்தன்மையாக சித்தரிப்பவர்கள் தான், தனது போட்டியாளர் நடித்த படத்தின் படப்பிடிப்புக்கு பண உதவி உள்பட பல உதவிகள் செய்த கமலை சுயநலவாதி என்கிறார்கள்.
 
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் திறமைசாலிகளை இந்த உலகம் கண்டுகொள்ளும் முன், அடையாளம் கண்டு பாராட்டியவரும், அவர்களை முன்னிறுத்தியவரும் கமல் என்பதற்கு இந்த இரு மலரும் நினைவுகளே சான்று.

Share this Story:

Follow Webdunia tamil