Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேபி என்ற புதுமை நாயகன்

கேபி என்ற புதுமை நாயகன்

ஜே.பி.ஆர்

, புதன், 24 டிசம்பர் 2014 (10:51 IST)
மறைந்த பாலசந்தரின் வாழ்க்கையை ஒரு மனிதனின் புதுமைக்கான தேடல் என்று வகைப்படுத்தலாம். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருபெரும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் பாலசந்தரால் ஜொலிக்க முடிந்ததென்றால் அதற்கு காரணமாக அமைந்தது வழக்கமான பாதையிலிருந்து அவர் மாற்றி சிந்தித்ததுதான்.
பாலசந்தரின் முழுப் பெயர் கைலாசம் பாலசந்தர். பிறந்தது ஜுலை 9, 1930. சொந்த ஊர் நன்னிலம் அருகிலுள்ள நல்லமாங்குடி. தந்தை கைலாசம், தாயார் காமாச்சியம்மாள். நன்னிலத்தில் பள்ளிப் படிப்பை முடித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி. படித்தார். 
 
நாடகத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பாலசந்தர். நாடகத்தை சினிமாவில் நுழைவதற்கான வழியாக அவர் நினைக்கவில்லை. நாடகத்தின் மீதான பேராவலே அவரை சினிமாவுக்கு கொண்டு வந்தது. 1960 - இல் அரசு வேலையில் இருந்தபோதே நாடக உலகில் பிரவேசித்தார். நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் போன்ற அவரது நாடகங்கள் மக்கள் மத்தியில் சிறப்பான இடத்தைப் பெற்றன. 
 
1965 -இல் அவரது திரையுலக பிரவேசம் நடந்தது. எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் படத்துக்கு கேபி வசனம் எழுதினார். அதைத் தொடர்ந்து அவர் எழுதிய சர்வர் சுந்தரம் நாடகம், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் திரைப்படமானது. நாகேஷுக்கு அந்தப் படம் புதிய அடையாளத்தை தந்தது.
 
கேபி இயக்குனரானது நீர்க்குமிழி படத்தில். நாகேஷ் ஹீரோ. முதல் படத்தில் ஒரு நகைச்சுவை நடிகரை நாயகனாக்க தனது திறமை மீது அதீத நம்பிக்கை ஒருவருக்கு இருக்க வேண்டும். கேபி -க்கு அது இருந்தது. முதல் படத்தில் மட்டுமின்றி தொடர்ச்சியாக அவர் இயக்கிய படங்களில் அது வெளிப்பட்டது.
 
நீர்க்குமிழி படம் மருத்துவமனை பின்னணியில் எடுக்கப்பட்டது. முழுக்க மருத்துவமனைதான். அடுத்தப் படமான நாணலை ஒரே வீட்டிற்குள் வைத்து எடுத்தார். இவையெல்லாம் இந்தக் காலத்தில்கூட தமிழில் சாத்தியமா என யோசிக்க வைப்பவை. ஒரு வீடு இரு வாசல் படத்தில் இரண்டு வெவ்வேறு கதைகளை ஒரே படத்தில் சொல்லியிருப்பார்.

கேபி அரசியல், சமூகம், காதல் என்று பல தளங்களில் படத்தை தந்திருந்தாலும் உறவுச் சிக்கல்களை அவர் கையாண்டவிதம் அவரை பிற இயக்குனர்களிடமிருந்து தனித்துக் காட்டியது. அவர்கள், அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு போன்ற படங்களை சிறப்பாக குறிப்பிடலாம்.
webdunia
தொடர்ச்சியாக நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் திரையில் அறிமுகப்படுத்தினார் கேபி. அதனை ஒருகடமையாகவே அவர் செய்தார். அவரது புதுமை தேடும் ஆர்வத்தின் ஒரு பகுதியாக இருந்தது அவர் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியது. நேரந்தவறாமை, கடமையில் முழுக்கவனத்தையும் செலுத்தி அதிலிருந்து விலகாமல் இருப்பது போன்றவை கேபியிடமிருந்து அவரது சிஷ்யர்கள் கற்றுக் கொண்ட பிரதான குணங்கள் (பிரகாஷ்ராஜ் விதிவிலக்கு).
 
பாரதியார் கேபியின் ஆதர்ஷமாக இருந்தார். தனது படங்களில் பாரதியார் பாடல்களை தொடர்ச்சியாக இடம்பெற வைத்தார். குறிப்பாக வறுமையின் நிறம் சிவப்பில் பாரதியார் பாடல்கள் அந்தப் படத்துக்கே தனி கம்பீரத்தை தந்தது. அதேபோல் இசையிலும் அவருக்கு பெரும் ஈடுபாடு இருந்தது. 
 
பெரிய திரையில் தனக்கென முத்திரை பதித்தது போல் சின்னத்திரையிலும் தடம் பதித்தார். 1990 - இல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ரயில் ஸ்நேகம் அதுவரை தொலைக்காட்சி தொடர் குறித்து இருந்த எண்ணத்தை மாற்றி அமைத்தது. 
 
கடைசி காலத்தில் அவர் இயக்கிய படங்கள் சரியாகப் போகவில்லை. மீண்டும் நாடகம் போட வேண்டும் என்ற ஆசை அவரிடமிருந்தது. அவர் இயக்கினால் நானும், ரஜினியும் நடிக்க தயார் என்றார் கமல். ஆனால் அது வெறும் பேச்சளவிலேயே இருந்தது.
 
நாடகத்தில் தொடங்கி சினிமாவில் தொடர்ந்த கேபியின் வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் புதுமையை தேடிச் செல்வதாகவே இருந்தது. கலையுலகிலும், லௌகீக வாழ்விலும் நிறைவான வாழ்க்கை கேபியுடையது. அவரிடம் நாம் சொல்வதற்கு இருப்பது ஒன்றுதான்.
 
உங்கள் படைப்புகளுடன் வளர்ந்தவர்கள் நாங்கள். அவை எங்களுக்குப் பிறகும் இந்த உலகில் நிலைத்திருக்கும். போய் வாருங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil