Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மறக்க முடியுமா? - ஏ மேன் எஸ்கேப்டு

மறக்க முடியுமா? - ஏ மேன் எஸ்கேப்டு

ஜே.பி.ஆர்

, திங்கள், 29 ஜூன் 2015 (09:14 IST)
பிரெஞ்ச் திரைப்பட மேதை ராபர்ட் ப்ரெஸ்ஸானின் இயக்கத்தில் 1953 -இல் ஏ மேன் எஸ்கேப்டு வெளியானது. நாசிக்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பிரெஞ்ச் ஆக்டிவிஸ்ட் எப்படி சிறையிலிருந்து தப்பித்தார் என்பதை இப்படம் சொல்கிறது. இது ஒரு உண்மைச் சம்பவம்.
1943 -இல் André Devigny  என்பவர் நாசிப் படையால் கைது செய்யப்பட்டு பிரான்சில் உள்ள, Montluc சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பிரெஞ்ச் ரெசிஸ்டென்ஸ் இயக்கத்தில் ஓர் உறுப்பினர். சிறையில் அடைக்கப்பட்டபின், நாசிகளுக்கு எதிராக சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாசிக்களால் அவர் சுட்டுக் கொல்லப்படும் முன் சிறையிலிருந்து மற்றெnரு கைதியுடன் தப்பித்தார்.
 
இந்த உண்மைச் சம்பவத்தை அதிகம் புனைவில்லாமல் திரைப்படமாக்கியிருக்கிறார் ராபர்ட் ப்ரெஸ்ஸான். இதனை அவர் படத்தின் தொடர்க்கத்தில் குறிப்பிட்டுள்ளார். படத்தில் André Devigny  என்ற பெயர் Fontaine என மாற்றப்பட்டுள்ளது.
 
சிறைக்கு அழைத்து வரும் வழியில், Fontaine காரிலிருந்து தப்பிக்க முனைகிறான். சில நிமிடங்களிலேயே அவனை ராணுவத்தினர் பிடித்து அதே காரில் சிறைக்கு கொண்டு வருகின்றனர். சிறையில் ராணுவ வீரர்களால் கடுமையாக தாக்கப்படுகிறான். கைகள் விலங்கிடப்பட்டிருக்கும் நிலையில், அவனுக்கு சக கைதியிடமிருந்து ஹுக் ஒன்று கிடைக்கிறது. அதை வைத்து அவனால் விலங்கை அவிழ்த்துக் கொள்ள முடிகிறது. சுவரில் விரல்களால் தட்டி, பக்கத்து அறை கைதிகளுடன் சங்கதே மொழியில் உரையாடுகிறான்.
 
அவனை விரைவில் மேல் தளத்திலுள்ள அறைக்கு மாற்றுகின்றனர். அங்கு அறைக்குள் விலங்கில்லாமல் சுதந்திரமாக விடப்படுகிறான். சிறையில் அவனைப் போலவே பலர் இருக்கிறார்கள். சிறையிலிருந்து தப்பிக்க திட்டம்போடும் Fontaine -இன் முயற்சி ஆபத்தானது என எச்சரிக்கிறார்கள். 
 
அவன் தனது சிறைக்கதவு மலிவான மரப்பலகையால் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டதை கண்டுபிடிக்கிறான். ஒரு ஸ்பூனை உபயோகித்து சில தினங்களில் அந்த பலகையில் இரண்டை பெயர்த்து எடுத்து, இரவில் சுதந்திரமாக வெளியே வருகிறான். தப்பிக்க தேவைப்படும் கயிறு மற்றும் ஹுக்குகளை தயார் செய்கிறான்.
 
இந்நிலையில் சிறையிலிருந்து தப்பிக்க முயலும் ஆர்சினி என்ற கைதி கயிறு அறுந்து போனதால் மாட்டிக் கொள்கிறான். வீரர்கள் அவனை கடுமையாக தாக்குகிறார்கள். பிறகு அவன் சுட்டுக் கொல்லப்படுகிறான். தான் தப்பிக்க அதிக காலஅவகாசம் இல்லை என்பது Fontaine -க்கு தெரிய வருகிறது. மட்டுமின்றி, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
 
எந்நேரமும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில் மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்படுகிறான். புதிய பிரச்சனையாக அவனது அறையில் இன்னொரு கைதியும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான். 16 வயது இளைஞன். அவனது உடையும், அவனது பின்னணியும் நம்பத் தகுந்ததாக இல்லை. ஜெர்மன் படையினரின் உளவாளியாகவும் அவன் இருக்கலாம்.
 
Fontaine - க்கு அதிக காலஅவகாசம் இல்லை. அவன் தப்பிக்க வேண்டுமென்றால் புதிய இளம் சிறைக்கூட்டாளியை கொன்றாக வேண்டும். இல்லை, அவனையும் தப்பிக்கும் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவன் இரண்டாவதை தேர்வு செய்கிறான். ஒரு ராணுவ வீரனை கொன்று, இரண்டு மதில்களை கயிறு மற்றும் ஹுக்குகளின் உதவியால் கடந்து வெற்றிகரமாக சிறைக்கு வெளியே வருகிறார்கள்.
 
படத்தின் ஆகச்சிறந்த விஷயம் ப்ரெஸ்ஸானின் திரைமொழி. எந்தக் காட்சிக்கும், உணர்ச்சிக்கும் அதிக அழுத்தம் தராமல் கடந்து செல்லும் ஒருவித ஆவணப்பட திரைமொழியை இதிலும் பயன்படுத்தியிருக்கிறார். கைதிகள் தாக்கப்படும் சம்பவங்களிலும் எந்த அழுத்தத்தையும் கேமரா மூலமோ, வேறு வகையிலோ அவர் காட்ட முயலவில்லை. அதனால், சாப்பிடுவது போல, நடப்பது போல, தாக்கப்படுவதும் ஒருவித இயல்பான நடைமுறையாக நமக்கு அதிர்ச்சி தருகிறது. 
 
தன்மனைப்பு முற்றாக நிராகரிக்கப்பட்ட திரைமொழியில் ஒரு திரைப்படத்தை காண்பது எப்போதுமே பரவசமான அனுபவம். ராபர்ட் ப்ரெஸ்ஸான் அதனை தர ஒருபோதும் தவறியதில்லை.

Share this Story:

Follow Webdunia tamil