Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரதி கவிதைகளில் நடப்பும் புனைவும்

-பேராசிரியர், க. பூரணசந்திரன்

பாரதி கவிதைகளில் நடப்பும் புனைவும்
[பேரா.க.பூரணசந்திரன்: இவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சிறுபத்திரிக்கை இலக்கிய ஏடுகள் பலவற்றில் இலக்கியம், இலக்கியக் கோட்பாடுகள், தத்துவம் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார். மொழி பெயர்ப்புகள் பலவற்றை செய்துள்ளார். மேற்கத்திய, இந்திய மற்றும் தமிழ் இலக்கியக் கோட்ப்பாடுகளிலும், இலக்கியங்களிலும் விரிவான வாசிப்பும், ஆழ்ந்த புலமையும் உடையவர் பூரணசந்திரன். நிறைய நூல்கள் எழுதியுள்ளார். இதில் குறிப்பாக நவீன மேற்கத்திய சிந்தனைகளான அமைப்பு மையவாதம், பின் அமைப்புவாதம் அல்லது இந்த இரண்டையும் பொதுவாக சுட்டும் பின்நவீனத்துவம் ஆகியவற்றை விளக்கி இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.]

1
புனைவு என்பது கட்டுக்கதை. கட்டுக்கதை (fiction) என்னும் சொல்லின் பொருள் விரிந்து கொண்டே செல்லக்கூடியது. மனைவியிடம் சொல்லும் சின்னஞ்சிறு பொய்கள் முதலாக பகவத்கீதை, பைபிள், இராமாயணம், மகாபாரதம் முதலிய பெருநூல்கள் ஈறாக அனைத்தும் புனைவுகளே. புனைவு என்று சொல்லும்போது இவற்றில் `உண்மையில்லை' என்று அர்த்தமில்லை. உண்மைக்கும் புனைவுக்குமான தொடர்பு அவ்வளவு எளிதாக வரையறுத்துவிடக்கூடியதல்ல.
புனைவு என்ற சொல் ஒப்பனை` என்னும்' பொருளிலும் ஆளப்படுகிறது. மெய்ம்மைக்கும் ஒப்பனை தேவைப்படுகிறது. பச்சையான, அழகற்ற, அப்பட்டமான மெய்ம்மையைச் சந்திக்கும் துணிவு அல்லது அதைச் சகித்துக்கொள்ளும் ஆற்றல் மனித மனத்துக்கு இருப்பதில்லை. அங்கே ஒப்பனை அல்லது புனைவு தேவைப்படுகிறது.

2
புனைவு-அதற்கு எதிர்நிலையில் மெய்ம்மை (fiction vs reality) இவற்றைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களின் மூலத்தை ஆராய்ந்தால் வேடிக்கையாய் இருக்கிறது. மெய்ம்மை என்பதைக்குறிக்கும் ஃபேக்ட்(fact) என்னும் சொல் ஃபேசிரே (facere) - செய் (do) என்னும் அர்த்தம் கொண்ட லத்தீன் சொல்லிலிருந்து வருகிறது. புனைவு என்பதைக் குறிக்கும் ஃபி‌க்‌ஷன் என்ற சொல் ஃபிங்கரே (fingere) வடிவமை உண்டாக்கு (make) என்று அர்த்தப்படும் லத்தீன் சொல்லிலிருந்து வருகிறது. ஏறத்தாழ ஒரே மாதிரி அர்த்தமுள்ள வார்த்தைகளாயினும், இவற்றின் தலைவிதி ஒரேமாதிரியாக இல்லை. முதற்சொல் யதார்த்தம், உண்மை என்பவற்றுடன் உறவுகொண்டுவிட, இரண்டாவது சொல்லோ, மெய்யற்றது, மாயை என்னும் சொற்களோடு தொடர்பு கொண்டுவிட்டது.

ஆனால் நடப்பு உண்மையில்லை, புனைவு அதில் இருக்கிறது. ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்ட நடப்பிற்குப் பின்னர் அதற்கு எவ்வித இருப்புமில்லை. ஆகவே அது புனைவாகிவிடுகிறது. மாறாக, புனையப்பட்ட அல்லது செய்யப்பட்ட ஒரு பொருள், அச்செய்கைக்குப் பின்னும் தன் இருப்பைக் காட்டிக்கொண்டு நிற்கிறது. வரலாறு என்பதற்கே இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. ஒன்று நடந்துமுடிந்துவிட்ட நிகழ்ச்சிகள் என்பது. இன்னொன்று, அந்நிகழ்ச்சிகளின் பதிவு என்பது. ஆகவே வரலாறு ஒரேசமயத்தில் மெய்ம்மையாகவும், புனைவாகவும் இருக்கிறது.

3
வரலாற்றின் கதியே புனைவு என்றானால், கவிதையை எப்படி யதார்த்தம்/புனைவு என்ற கருத்துகளை வைத்து ஆராய்வது? கவிதை என்பதே யதார்த்தத்திற்குப் புறம்பானதுதான். கவிதை வக்ரோக்தியால்(நேராகச் சொல்லாமல், புனைந்து, சுற்றிவளைத்து, கோணலாகக் கூறுதல்) ஆனது என்ற சமஸ்கிருதக் கொள்கையும் கவனிக்கத்தக்கது. தொல் காப்பியரும் நாடக வழக்கு என்றார்.
ஒருவகையில் எழுத்து என்பதே முற்றிலும் புனைவுதான்.
எந்தச் சிந்தனையாயினும் எழுத்தில் கொண்டுவரும்போதே அது புனைவாகிவிடுகிறது. காரணம், எழுத்து என்பதே குறியீட்டுத் தன்மையுடைய ஒரு செயல்.

சிந்தனைக்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. எழுத்தென்று வரும்போது, சிந்தனையின் இரு முனைகளும் அறுபட்டு, ஏதேனும் நடுவிலுள்ள ஒரு பகுதி மட்டும் செயற்கையாகப் பதி வாகிறது. முன்பின் தொடர்ச்சியற்ற, சூழலற்ற ஒன்று எப்படி மெய்யாகும்? புனைவாகத் தானே அது இருக்கமுடியும்?
மொழியின் உவமைகள், உருவகங்கள், அணிகள், உதாரணங்கள், விளக்கங்கள் போன்ற புனைவுகள் இன்றி எவ்விதக் கருத்தையும் நாம் வெளிப்படுத்த முடிவதில்லை. உவமை கள் உருவகங்கள் முதலியன எந்த அளவிற்குக் கருத்தை வெளிச்சம்பெறச் செய்கின்றன வோ அந்த அளவுக்கு -அல்லது அதற்கும் மேலாக-இருட்டிலும் ஆழ்த்திவிடுகின்றன. ஆகவே மொழிவாயிலாக வெளிப்படும் எதுவுமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. யாவுமே புனைவுகள்தான்.

4
ஆயினும் பொதுப்புத்திவாயிலாக நோக்கும்போது இச்சொற்கள் நெடுங்காலமாக ஏதோ ஓர் அர்த்தத்தை உணர்த்தியே வருகின்றன. இந்தப் பொதுப்புத்தி அர்த்தத்தின்படி, புனைவு என்பது வருணனை அல்லது ஒப்பனை சார்ந்த விஷயமாகவே இருக்கிறது. உதாரணமாக, இராவணனுக்குப் பத்துத்தலை இருக்கிறது என்பது புனைவு. ஆனால் அவன் பிறன் மனைவியை விரும்பக்கூடியவன் என்பது நடப்பு. இராமன் மறைந்திருந்து ஒருவனைக் கொல்லக்கூடியவன் என்பது நடப்பு. ஏழு மரங்களினூடாக ஒரே அம்பில் எய்தான் என்பது புனைவு. இங்கே நடப்பும் புனைவும் கலந்து ஒன்றாய் உருவாகி வருகின்றன. இப்படிப் படைப்பதைத்தான் தொல்காப்பியரும் Ôநாடக வழக்கினும் உலகி யல் வழக்கினும் பாடல்சான்ற புலனெறி வழக்கம்Õ என்றார் போலும்.

நடப்பு என்பது எப்போதுமே அவலம் (tragic, pessimistic, absurd) சார்ந்ததாகத்தான் இருக்கிறது. சிறுமைகளை உள்ளடக்கியிருக்கிறது. அபத்தங்களை வெளிப்படுத்துவதாகிறது. ஆனால் புனைவு என்பது உன்னதமானதாக, உயரத்தில் பறப்பதாக, பேருருவம் சார்ந்ததாக இருக்கிறது.
ஆகவே மகிழ்நோக்கு கொண்டதாக இருக்கிறது.

பொதுப்புத்தி அளவையின்படி, புனைவு நடப்பு என்பனவற்றை மேற்கண்டவாறு வித்தியாசப் படுத்தினோமானால், நடப்பியல் கவிஞர்கள் பெரும்பாலும் வாழ்க்கை துயரமயமானது என்ற அவலநோக்கை வெளிப்படுத்துகின்றனர். ரொமாண்டிக் கவிஞர்கள் வாழ்க்கை இன்பமயமா னது என்ற மகிழ்நோக்கை வெளிப்படுத்துகின்றனர். பாரதியாரிடம் நடப்பியல் நோக்கைவிடப் புனைவியல்நோக்கே அதிகம். பொதுப்புத்தி நோக்கின்படி, வரலாறு என்பது நடப்பு சார்ந்தது. கவிதை என்பது புனைவு சார்ந்தது.

வரலாற்றையும் தூயகற்பனையையும் (History and Fantasy இரண்டு எதிர்முனைகளாக, புற ஊதா-அகச்சிவப்பு ஆகிய எதிர்முனைகளாகக் கொண்டால், இரண்டிற்குமிடையில்தான் யதார்த்தம், புனைவு, மீப்புனைவு ஆகியவை வருகின்றன. தூயகற்பனைப்புனைவு - புனைவு - யதார்த்தம்/நடப்பு - வரலாறு/மெய்ம்மை ஒரு யதார்த்தத்தின் உண்மை, ஒரு பத்திரிகை நிருபனின் மெய்ம்மையைவிடப் பொதுமைப் பட்டது. வகைமாதிரியானது (typical). அதனைவிடக் கற்பனையில் சற்றே மேலே சென்று வகைமாதிரிக்குச் சற்றே புறம்பானவைகளையும் ஒதுக்காது, கற்பனையின் இறக்கைவீச்சுக்கேற்பப் படைக்கும்போது புனைவு தோன்றுகிறது. பிறகு மீப்புனைவு-தூய கற்பனை. இலக்கிய உலகில் யதார்த்தவாதியின் புலனறிவு உணர்வையும் புனைவுவாதியின் காட்சியையும் ஒருங்கிணைப்பனவே நமது புலனுணர்வு உலகினுக்கு இணையானதோர் புனைவுலகினைக் கட்டிய மைத்து வெற்றி பெறுகின்றன. புனைவுலகு நாம் காணும் உலகினை இன்னும் அழகுபடுத்துகிறது அல்லது மோசமாக்குகிறது. புனைவுலகின்அடிப்படை அம்சங்கள் அழகும் ஒழுங்கமைவும் (beauty and order) ஆகவே ஒருவகையில் உண்மை உலகிலிருந்து தப்பித்தலாகவும் இருக்கிறது புனைவுலகு. அங்கதம்(Satire), உண்மை உலகினை அழகற்றதாகவும் குரூரமாகவும் காட்டுகிறது. புனைவு (Romance), இதற்கு நேர் எதிர்மாறாகக் காட்டுகிறது.

5
webdunia photoWD
இந்த அடிப்படையில் பார்க்கும்போது பாரதியாரது நடப்புலகைவிடப் புனைவுலகு ரசமானது. பாரதியிடம் நடப்புலகு என்பதே மிகக்குறைவுதான். சங்க இலக்கியத்தின் அகப்பாடல்களில் சாவையும் முதுமையையும் உறவுகளில் ஏற்படும் விரிசல்களையும் இல்லாததாக்கி, இனிய உறவை மட்டுமே காட்டும் வித்தை செய்கிறார்களே புலவர்கள், அவர்களது புனைவுக்குச் சற்றும் குறைந்ததல்ல பாரதியின் புனைவுகள். ஆனால் ஒரு வித்தியாசம்-பாரதியின் தூய புனைவுகள் அல்லது கனவுகளால் புறயதார்த்த உலகைவிட்டுத் தப்பிக்கமுடியவில்லை. மீண்டும் மீண்டும் அங்கேயே இழுத்து வந்து விடும்போது அதன் தகிப்பு அதிகமாகிறது. பாரதியின் முக்கியப் புனைவான ஞானரதத்தில்-

"கண்ணை விழித்துப் பார்த்தேன். மறுபடி மண்ணுலகத்திலே,
திருவல்லிக்கேணி
வீரராகவ முதலி தெருவில், கிழக்கு முகமுள்ள வீட்டு மேன்மாடத்தில், நானும்
என் பக்கத்தில் சில வர்த்தமானப் பத்திரிகைகள், எழுதுகோல், வெற்றிலைபாக்கு
முதலிய என்னுடைய பரிவாரங்களும் இருப்பது கண்டேன். (இடைப்பகுதி)
கண்ணை விழித்துப்பார்க்கும்போது பழைய திருவல்லிக்கேணியில் பழைய இடத்திலே என்னைச் சுற்றிச் சிலர் விசிறிக்கொண்டு நிற்பதைக் கண்டேன்" (இறுதி)
இன்னொரு முக்கியப் புனைவான குயில்பாட்டின் இறுதிப்பகுதி:

"பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல்,
பத்திரிகைக்கூட்டம், பழம்பாய் வரிசையெல்லாம்
ஒத்திருக்க நாம் வீட்டிலுள்ளோம் எனவுணர்ந்தேன்".

இரண்டின் முடிவும் ஒன்றே. இரண்டிலும் மேலிருந்து கீழே விழுதல்-கண்விழித்துப் பார்க்கும் போது கிடைக்கும் யதார்த்த உலகு-வரிசைகள் (பரிவாரங்கள்) எழுதுகோல் போன்றவையெல்லாம் பொது. ஞானரதத்தில் சத்தியலோகத்திற்கும் தர்மலோகத்திற்கும் சென்ற கவிஞர் விழுகிறார். நடப்புலகிற்குத் தள்ளப்படுவதற்குமுன் இரண்டிலுமே ஒரு பெண்ணைத் தழுவியிருப்பதாகக் கனவு காண்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு புனைவில் பறக்கும் கவிஞன், கடைசியாக நடப்புலகிற்குத் தள்ளப்படுகிறான். புனைவுக்கும் நடப்புக்குமான இழுவிசைதான் பேரிலக்கியப் படைப்புகளை உருவாக்குகிறது. ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குக் கவிஞன் இடையறதாது ஊடாடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

6
பாரதியை ஒரு ஞானியென்றும் தீர்க்கதரிசியென்றும் கருதுவோருண்டு. பாரதியின் தரிசனம், ஒன்றுமற்ற வெட்டவெளியில் சுழலும் ஒரு வட்டப் பேரொளி அல்ல. கடுமையான யதார்த்தத்தில் காலூன்றி நிற்பதன் விளைவே அது. அந்த யதார்த்தத்தை யார் வேண்டுமானாலும் கண்டு கேட்டு உற்று உணரமுடியும். இவ்வுலகிற்கு அப்பாலுள்ள ஏதோ ஒன்றினை இடையறாது தியானித்துக்கொண்டு தனிமையில் இனிமைகாணும் தபசில் அமர்ந்திருக்கும் அனுபூதிமானா பாரதி? அல்லது இடையறாது வாழ்க்கையில் கண்டனவற்றை மட்டுமே உயர்த்திக் காட்டும் நடப்பியல்வாதியா?
இக்கேள்விக்கு விடைகாண, நடப்புக்கும் புனைவுக்கும் பேதம் எளிதில் காணமுடியாத இடைவெளியில் சுழலும் ஒரு விஷயத்தை நாம் இந்த பேதங்களுக்குள் அடக்கிப் பார்ப்போம். பாரதியின் கவிதைகளைப் படிப்பவர்கள் பாரதி அறுபத்தாறிலிருந்து தொடங்க வேண்டும். அவரது பிற கவிதைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய வித்துகள் பாரதி அறுபத்தாறில்தான் உள்ளன.

7
பாரதி அறுபத்தாறு கவிதைகளில் பாரதி திட்டவட்டமாகப் பேசும் ஒரு விஷயம் தமக்கு அழிவில்லை என்பது. 'பார்மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்' -இந்தக்கூற்றை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? நடப்பு என்றா? புனைவு என்றா?
சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
பார்மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்
மலிவு கண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன் யான்
மடிந்தாலும் பொய்கூறேன் மானிடர்க்கே
நலிவுமில்லை சாவுமில்லை கேளீர் கேளீர்.
இதற்கு முந்திய பாட்டில்சொல்கிறார்-
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராச் சார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்

புத்தர் இறந்தார், சங்கராச்சாரியார் மறைந்தார், இராமாநுஜர் மாண்டார், இயேசுநாதரும் மறைந்தார், கிருஷ்ணன், இராமன் போன்ற அவதார புருஷர்களும் மறைந்தனர்-ஆனால் நான் சாகாதிருப்பேன் என்கிறார் பாரதி. பலப்பல சொற்களில் இதை வலியுறுத்துகிறார். உருவகமாக இச்சொற்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படியே மெய்யாக நாம் இச்சொற்களைக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பன்னிப்பன்னிச் சொல்கிறார். பாரதியாருடைய இந்த உடல் அழியாது, ஏனென்றால் உடல் இல்லையேல் உயிர் இல்லை. இது சாத்தியமா?

நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்
மிச்சத்தைப் பின்சொல்வேன், சினத்தைமுன்னே
வென்றிடுவீர் மேதினியில் மரணமில்லை.
இம்மாதிரி அழியாத்தன்மை அத்வைதத்தால் உண்டாகும் என்கிறார் பாரதி. அது மரணத்தை வெல்லும் வழி.
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்
முடிவாக அவ்வுரையை நான் மேற்கொண்டேன்
அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலை கண்டால் மரணமுண்டோ?
பாரதி குறிப்பிடும் அத்வைதம் மரபுவழி அத்வைதம் அல்ல. சற்றே வேறுபட்டது. வழக்கமாக மாயாவாதம் என்று சுட்டப்படும் வேதாந்தம் அல்ல அது.

தங்கச் சிலைபோல நிற்கிறாள் மனைவி.
நமது துயரத்தின்போதெல்லாம் கண்ணீர் விட்டாள்.
இன்பத்தின்போதெல்லாம் உடல்பூரித்தாள்.
அவள் பொய்யோ? பெற்றோரைக் கேட்கின்றேன்.
குழந்தைகள் பொய்யோ? தேள் பொய்யென்றால்
அது கொட்டினால் வலிக்கிறதே அது பொய்யோ?
என்று வினவுகிறார் பாரதி. 'இந்தக் காட்சி நித்தியமாம், காண்பது சத்தியமாம்' என்பவர் அவர்.

வாழ்க்கை என்பது இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு முழுமையான பார்வையிலேதான் அடங்கியிருக்கிறது. அங்கே ஒவ்வொன்றிற்கும் ஒரு இடம் இருக்கிறது. மிக எளியது, சிறுமைப் பட்டது, இழிவானது என்று நாம் கருதுகின்றனவற்றிற்கும்கூட.

கேளப்பா சீடனே, கழுதையன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திரு கரமும் சிரமேற்கூப்பி
சங்கர சங்கர வென்று பணிதல் வேண்டும்
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடிநின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம்.
இந்த அடிகள் பாரதி ஒரு லோகாயதவாதி என்பதைச் சுட்டிக்காட்டும். எந்த அளவுக்கு பாரதி லோகாயதமான யதார்த்தத்தை வழிபட்டார் என்பதை விளங்க வைக்கும்.

மீளத்தான் இதைத் தெளிவுற விரித்துச் சொல்வேன்
விண்மட்டும் கடவுளன்று, மண்ணும் அஃதே.
இருக்கும் எல்லாவற்றிற்கும் இடமளிக்க வேண்டும், வெறுக்கப்படுவனவற்றையும் விலக்கப்படுவனவற்றையும் நாம் நேசிக்கவேண்டும் என்ற இந்தக் குரலில் இன்றைய சுற்றுப்புறச்சூழல் வாதியின் குரலும், தலித்தியவாதியின் குரலும்கூட அடங்கியிருக்கின்றன. பாரதி இப்பாட்டுகளில் கூறுவனவற்றின் சாராம்சம் என்னவென்றால், நாம் எந்தப் பொருளையும் புறந்தள்ள முடியாது, ஏதேனும் ஒன்றைப் புறந்தள்ளுவதாக இருந்தால்தான் கோபம் வெறுப்பு முதலிய உணர்ச்சிகள் உண்டாகும். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதால் கோபத்திற்கு இடமில்லை, எனவே பாரதியால் எல்லாவற்றையும் நேசிக்கமுடியும். அதாவது, எல்லாவற்றையும் அறிய முடியும். எனவே என்றைக்கும் வாழவும் முடியும்.
இம்மாதிரியான வாழ்க்கை நீட்சி என்பது எந்த ஒரு சாதாரணமனிதனாலும் புரிந்துகொள்ளக் கூடிய விஷயம்தான். ஆகவே உடலளவிலாவது சாவு என்பதில்லை.

இங்குச் சாவு என்பதும் அழியாமை என்பதும் மீண்டும் ஒரு சாதாரண அத்வைதி சொல்லுகின்ற அர்த்தத்தில் அல்ல. 'நான் சாகாதிருப்பேன் கண்டீர்' என்றால், 'நான்' என்பது பிரம்மத்தைக் குறிக்கும் (அஹம் பிரம்மாஸ்மி). பிரம்மத்திற்கு அழிவில்லை. ஆகவே எனக்கும் அழிவில்லை என்று வேதாந்தி சொல்வான். பாரதி இப்படிப்பட்ட நிரந்தரத்தைப் பற்றிச் சொல்லவில்லை.
இன்னும் சிலர் சொல்வார்கள்: இதற்குக் குறியீட்டுப் பொருள் கொள்ளவேண்டும். அதாவது ஒருவன் தனது படைப்பிலும், கவிதையிலும், கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும் வாழ்கிறான் என்பார்கள். அப்படியானால், புத்தரின் கொள்கைகள் நிலைத்திருக்கின்றன, அவருக்கு அழிவில்லை அல்லவா?

ஷேக்ஸ்பியர் தமது சானெட்டில் எழுதுகிறார்-'வெள்ளைத் தாளின்மீது மையில் எழுதப்பட்ட இந்த வரிகள் நிலைத்திருக்கும் வரை நானும் நிலைத்திருப்பேன்' என்று. பாரதி இம்மாதிரியும் சொல்லவில்லை. சமகால அறிவியல் வளர்ச்சிகளைக் கண்டு, அவற்றை உதாரணமாக்கி, நான் அழியாதிருப்பேன் என்கிறார். ஜகதீச சந்திர வசுவை உதாரணம் காட்டுகிறார்.

செத்திடற்குக் காரணந்தான் யாதென்பீரேல்
கோனாகிச் சாத்திரத்தை யாளும் மாண்பார்
ஜகதீச சந்திர வசு கூறுகின்றான்:
(ஞானானுபவத்தில் இது முடிவாம் கண்டீர்)
நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான்.

கோபமும் அச்சமும் இல்லையென்றால் நாடியில் அதிர்ச்சியில்லை. ஆகவே மரணமும் இல்லை.

உடலுக்கு அழிவில்லை என்று பாரதி நம்புவது விசித்திரமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் உலகில் பிறந்த எதுவும் வளர்ச்சியடைகிறது, முதுமையடைகிறது, பிறகு இறக்கிறது. எல்லா உயிரினங்களும் இந்த இயற்கை விதிக்குக் கட்டுப்பட்டவையாகவே இருக்கின்றன. நான் அழிய மாட்டேன் என்று பாரதி சொல்வது, அதில் அவரது அழுத்தமான நம்பிக்கை, நமக்குப் பரிதாபம் கலந்த ஒரு புன்சிரிப்பைத்தான் தருகிறது. அதிலும் இளம் வயதிலே-39 வயதில் அவர் இறந்துபோனதை நினைத்தால் இந்தச் சோகம் இன்னும் அதிகரிக்கிறது. இது ஒரு அவலமுரண் (tragic irony) என்று கூடத் தோன்றுகிறது.

ஆனால் இந்த அறியாமை வயப்பட்ட நம்பிக்கையை பாரதி கொண்டிருந்தது, வாழ்க்கை மீது அவருக்கிருந்த எல்லையற்ற காதலினால்தான். பாரதி சாக மறுப்பவர். தம் காலத்தில் கண்ட, கேட்ட, அறிந்த, அனுபவித்த வன்கொடுமைகளுக்கும் வாழ்‌க்கையில் கண்ட அவலட்சணங்களுக்கும் இடையில் எல்லையற்று வாழும் அளவுக்கு வாழ்க்கை உன்னதமானது என்று எண்ணியவர் பாரதி. வாழ்க்கை பற்றிய
webdunia
webdunia photoWD
இந்த நம்பிக்கைநோக்கு, நவீனத்துவவாதிகளிடம் கிடையாது. ஒரு காஃப்காவையோ, தாஸ்தாயேவ்ஸ்கியையோ 'இன்னும் கொஞ்ச நாள் தருகிறேன், வாழ்கிறீர்களா?' என்று கேட்டுப்பாருங்கள்- 'இல்லை, உடனே செத்துவிடுவதே மேல்' என்பார்கள். அல்லது இருக்கும் வாழ்க்கைவரை எப்படியாவது சகித்துக்கொள்ளலாம் என்பார்கள். அந்த அளவுக்கு வாழ்க்கையின் அவலங்கள் அவர்களைப் பாதித்திருக்கின்றன. ஆனால் பாரதிக்கு வாழ்க்கையின் அவலங்களைவிட உன்னதங்கள் பெரியவை.

ஆக, நடப்பும் புனைவும் இரு துருவங்கள் அல்ல-இருவேறு படைப்பாக்க முறைகள் கூட அல்ல-வாழ்க்கை பற்றிய இருவேறு நோக்குகள் என்பதை அறிகிறோம். பாரதியின் கவிதைகள் அனைத்திலும், ஒருவர் எங்கேயாவது-'நான் சாவை விரும்புகிறேன்' என்பதாக ஒரு வரியையேனும் காட்டமுடியுமா? புனைவுசார்ந்த துயரத்திலிருந்தும் (romantic melancholy) ஆழ்ந்த நடப்பு சார்ந்த துயரத்திலிருந்தும் (green eyed despair) முற்றிலும் விடுபட்ட இன்பமான புனைவு பாரதியினுடையது. சிந்தனையிலும் மொழியிலும் ஆண்மையும் வீறும் பாரதியின் வலிமைகள். 'உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்'. பாரதியின் கவிதைகள் வாழ்க்கையின் அனுபவங்களுக்குள் வெடித்துச் சிதறுபவை. அவற்றில் பெரிய நாடகமிருக்கிறது. கூத்திருக்கிறது. பாரதி தமது கவிதைகளைப் பாடுகிறார், ஆடுகிறார், இசைக்கிறார், கோஷமிடுகிறார். ஏதேனும் ஓர் உணர்ச்சிநிலையில் மையம் கொள்ளாத முற்றிலும் அறிவு பூர்வமான கவிதையை பாரதியிடம் காணமுடியாது. ஒரு விதத்தில் அல்ல-பல விதங்களில்-தமது கவிதையை வாழ்ந்தவர் பாரதி. வெறுமனே கவிதையை எழுதியவர் அல்ல. தாம் மனத்தினால் வாழாத எதையும் அவர் தமது கவிதையில் சொன்னதில்லை.

பாரதி அறிவியலை மேற்கோள் காட்டுவதும், அறிவியலினால் மரணமிலாப் பெருவாழ்வு பெறலாம் என்று நம்பிக்கை வைப்பதும் அவரை அன்புமயமான வாழ்க்கை என்ற தத்துவத்திற்கு இட்டுச்செல்கின்றன. இத்தத்துவம் இயல்பாகவே அவரை அகிம்சைக் கோட்பாட்டிற்குள் கொண்டு செலுத்துகிறது. பாரதியைப் பொறுத்தவரை தனிமனிதன் வேறு, உலகம் வேறு அல்ல. தனது பொறுமையை இழக்கின்ற மனிதன், ஒரு தலைவனாகவும் இருந்துவிட்டால், அவன் தனது நாட்டையும்-ஏன், இந்த பூமியையும் அழித்துவிடுவான் என்பது அவர் கருத்து. இதற்கு உதாரணமாக பாரதி குருக்ஷேத்திரப் போரைச் சுட்டிக்காட்டுகிறார்.

பொறுமையினை அறக்கடவுள் புதல்வன் என்னும்
யுதிட்டிரனும் நெடுநாள் இப்புவிமேல் காத்தான்
இறுதியிலே பொறுமைநெறி தவறிவிட்டான்
ஆதலால் போர்புரிந்தான் இளையாரோடே
பொறுமையின்றிப் போர்செய்து பரதநாட்டைப்
போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின்மீது
வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு
மலைமீது சென்றான்பின் வானம் சென்றான்.
ஆகவே எந்தச் சமயத்திலும் பொறுமையிழக்கக்கூடாது என்கிறார் பாரதி. இந்தக் கவிதை பாரதியின் பாஞ்சாலிசபதத்தைப் புரிந்துகொள்ள நமக்குத் துணைசெய்கிறது. பொறாமையால் உணர்ச்சிவசப்பட்டுத் தத்தளிக்கும் துரியோதனனுடைய நிலையை வருணிப்பதிலிருந்துதான் பாஞ்சாலிசபதம் தொடங்குகிறது.

கோபத்தால் கண்ணிழந்து துடிக்கும் தன்மகனைக் கட்டுப்படுத்தமுடியாத குருடனாக இருக்கிறான் திருதராட்டிரன். துரியோதனனின் உணர்ச்சிவசப்பட்ட பொறாமைச் செயல்கள் பல எதிரொலிகளை உண்டாக்கி இறுதியில் குருக்ஷேத்திரப் போரில் முடிவடைகின்றன. இதற்கு மாறாக இருப்பவன் யுதிட்டிரன். பீமனும் அர்ஜுனனும் பாஞ்சாலியும் சபதம் செய்கிறார்கள்-ஆனால் அவையில் கடைசிவரை பொறுமையாக இருப்பவன் யுதிட்டிரன் மட்டுமே. ஆனால் எப்போது யுதிட்டிரனும் பொறுமை இழக்கிறானோ அப்போதுதான் குருக்ஷேத்திரம் ஆரம்பிக்கிறது.

ஆகவே எந்தச் சமயத்திலும் பொறுமை இழக்கக்கூடாது என்பது பாரதியின் கருத்து. குருக்ஷேத்திரம் நடக்காமல் இருந்திருந்தால் பாரதி மகிழ்ச்சியடைந்திருப்பார். அறிவு மழுங்கிப் போகாதவரை ஒரு சாதிக்கோ தேசத்திற்கோ இனத்திற்கோ அழிவில்லை என்பவர் பாரதி. ஆகவே பாஞ்சாலி சபதம் ஓர் அவலதொனியில்தான் முடிகிறது.

அன்புமீதும் அகிம்சைமீதும் இப்படி பாரதிகொள்ளும் நம்பிக்கைதான் காந்தியின்மீது அவருக்கு மதிப்பைத் தோற்றுவித்தது. அந்தப் பட்டம் காந்திக்கு அளிக்கப்படும் முன்பே அவரை மகாத்மா என்று வருணித்தவர் பாரதி. ஆகவே பாரதி அகிம்சைமீதும் அன்பின் பேராற்றல் மீதும் பெருநம்பிக்கை கொண்டிருந்தவர் என்பதில் ஐயமில்லை.

9
இம்மாதிரி வழக்கமான பழமைவாதத் தீர்வினில் பாரதி சென்று சேர்வது அவர் ஒரு பாண்-பணியை (bardc function) மேற்கொண்ட காரணத்தினால்தான் என்பதை நாம் உய்த்தறிய முடியும். பாண்பண்பு என்பதும் சங்ககாலப் புலவர் பண்பு என்பதும் ஒன்றுதான். பழங்காலப் புலவர்களும் பாணர்களும் என்ன செய்தார்கள்? ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமிடையே பாலமாக இருந்தார்கள். ஆட்சியாளர்களின் வள்ளல்தன்மையை, வீரத்தை, பெருமையைப் பிறருக்கு எடுத்துக் கூறினார்கள். ஆனால் நேரடியாக மரபுரீதியான கருத்துகளையோ, அரசர்க்கு உகந்த கருத்துகளையோ `பிரதிபலிக்கவில்லை'. சமகால மக்களின் வாழ்க்கையையும் அப்படியே மீளாக்கம் செய்யவில்லை. மாறாக, தமது சமூகத்திலிருந்த கச்சாப்பொருட்களை எடுத்து, அவற்றை நாம் அதிகாரபூர்வமானது மிக யதார்த்தமானது என்று ஏற்றுக்கொள்ளும் வகையில் நெய்தார்கள்.

சங்ககாலப் புலவர்களின் இயல்பை-அல்லது வீரயுகக் காலப் பாணர் இயல்பை நாம் நோக்கினால், அவர்கள் முதற்கண் புலவர்கள், சான்றோர். பின்னர்தான் தம்மளவிலான தனிமனிதர்கள். அவர்களது கருத்துகள் தனிமனிதக் கருத்துகளஅல்ல. ஓர் இனத்திற்கு உரிமையான கருத்துக்கள். அவற்றின் சார்பாக நின்று, தாங்கள் கண்ட உண்மைகளைப் பேசினார்கள். அதனால்தான் அவர்களது கவிதைகள் ஒத்ததன்மை கொண்டனவாக இருக்கின்றன. அவர்கள் ஒரு குரலில் பேசுவதுபோலத் தோன்றுகிறது. இக்காலப் படைப்புகளின் சுயேச்சைத் தன்மை அவற்றில் இருப்பதில்லை. பாரதியும் இம்மாதிரிப் பாண்தன்மையை மேற்கொண்டவர்தான். பாரதி மட்டுமல்ல, பாரதிக்கு முன்பிருந்த நீதிபோதிக்கும் புலவர்களும், திருவள்ளுவர் போன்ற சான்றோர்களும், பக்திக்காலத்தில் 'யாவருக்காகவும்' பாடல்கள் இயற்றிய நாயன்மார்களும் ஆழ்வார்களும் இப்படிப்பட்டவர்களே.

பாண்-பணியின் இயல்பு, தாம் காணும் புதுவுண்மைகளையும் ஏற்கெனவே தெரிந்த, எல்லோருக்கும் அறிமுகமானதொரு அறிவுச் சட்டகத்துக்குள் போட்டு, அவ்வக் காலப் பொதுப்புத்தி அமைப்பிற்குள் அவற்றைக் கொண்டுவந்துவிடுவதுதான். தாம் காணும் முரண்களையும் மாற்றங்களையும் ஏற்கெனவே காலி/இடைவெளி இருக்கும் இடங்களில் அவர்கள் பொருத்திவிடுகிறார்கள். அதனால், பாண்பணியினர், அதாவது புலவர்கள், ஏற்கெனவே இருக்கும் ஆதிக்கக் கருத்தாக்கங்களுக்குத் துணைசெல்பவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆனால் மக்களுக்கு அவர்கள் புரட்சியாளர்கள் போலவும், புத்தாக்கம் செய்பவர் போலவும் தோன்றுகிறார்கள். ஆகவே இருவரது (ஆட்சியாளர், மக்கள்) அங்கீகாரத்தினையும் பெறமுடிகிறது. பாரதியும் இப்படிப் பட்ட கலாச்சார சீர்திருத்தப் பாண்பணியில் இறங்கிவிடுவதனால் தீவிரவாதியாகத் தொடங்கி கடைசியில் அன்பையும் அகிம்சையையும் போதிக்கும் சான்றோராகிவிடுகிறார்.

10
இன்றைய நோக்கில் காணும்போது பாரதியின் குயில், காட்சி போன்ற புனைவுகள் யாவும் சிறுபுனைவுகள் (microfictions). இவற்றிற்கெல்லாம் மூலாதாரமான பெரும்புனைவுகள் (macrofictions) பலவற்றையும் அவர் தமிழில் உருவாக்கியுள்ளார். உதாரணமாக, இந்திய (அல்லது பாரத) தேசியம், அதற்கு உள்ளிட்ட தமிழ்த்தேசியம் என்ற பெரும்புனைவு. பாரதியின் சமகாலத்தவர்களில் ஒருவரான பாலகிருஷ்ண ஐயர் என்பார் மதிப்பீட்டைப் பாருங்கள்.

"இவரது காவியங்கள், வசனங்கள் எல்லாவற்றையும் படித்தவர்கள், இவர் முற்காலத்து அநேக கவிச்சக்கரவர்த்திகளின் மரபில் இக்காலத்தில் தோன்றி, இப்பொழுதுள்ள காலநிலைமைக்கு ஒத்து, ஜனங்களின் மனதில் பொங்கித் ததும்பிய உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கவிச்சக்கரவர்த்தியென்றே கொள்ளுவார்கள்."

இது பாரதியின் பாண்பணியை எடுத்துக்காட்டும் கூற்று. மேலும் அவர் சொல்கிறார்.

"தெய்வபக்தி போன்றதே தேசபக்தி. தேசமே தெய்வம்....தேசம், தெய்வம்,
தைர்யம் என்னும் மூன்று வார்த்தைகளினால் இவருடைய கவிதைகளின் பொதுக் கருத்துகளைக் குறிக்கலாம்."

இம்மாதிரிப் பெரும்புனைவுகளை உருவாக்குவதும், அவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ளுமாறு புதிய பாணியில் இணைத்துக்காட்டுவதும் பழங்காலப் பாண்பணிகள்தான். பாரதியின் கவிதைகள் இத்தகைய பெரும்புனைவுகளை நன்கு உண்டாக்கி அளித்திருக்கின்றன. இம்மாதிரிப் பெரும்புனைவுகளும் அவற்றிற்குள் அடங்கும் பல சிறுபுனைவுகளும் கொண்டனவே பாரதியின் மொத்தக் கவிதைகளும். இப்புனைவுகள் சமூகத்திற்கு இன்னும் வேண்டுமா, தேவையற்றனவா, நாம் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டுமா, ஏற்கவேண்டாமா என்பனவெல்லாம் வாசிப்பவர்கள் தங்கள் கருத்துலகினால் முடிவுசெய்யவேண்டிய காரியங்கள்.



Share this Story:

Follow Webdunia tamil