Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கு‌ப்ப‌னி‌ன் சா‌ல்ஜா‌ப்புக‌ள்

- க. பூரண ச‌ந்‌திர‌ன்

கு‌ப்ப‌னி‌ன் சா‌ல்ஜா‌ப்புக‌ள்
, வியாழன், 23 ஜூலை 2009 (15:41 IST)
அர்த்த அலகு 5

என்றுரைக்கக் கேட்ட இளவஞ்சி, "காதலரே!
அன்று நீர் சொன்னபடி அவ்விரண்டு மூலிகையைச்
சஞ்சீவி பர்வதத்தில் தையல் எனைக் கூட்டிப்போய்க்
கொஞ்சம் பறித்துக் கொடுத்தால் உயிர்வாழ்வேன்
இல்லையென்றால் ஆவி இரா(து)" என்றாள்; வேட்டுவன்
"கல்லில் நடந்தால்உன் கால்கடுக்கும்" என்றுரைத்தான்.
"கால் இரண்டும் நோவதற்குக் காரணமில்லை, நெஞ்சம்
மூலிகை இரண்டின்மேல் மொய்த்திருப்பதால்" என்றாள்.
"பாழ்விலங்கால் அந்தோ, படுமோசம் நேரும்" என்றான்.
"வாழ்வில்எங்கும் உள்ளதுதான் வாருங்கள்" என்றுரைத்தாள்.
"அவ்விரண்டு மூலிகையின் அந்தரங்கம் அத்தனையும்
இவ்விடத்திற் கேட்டுக்கொள்" என்றுரைத்தான் குப்பன்.
"ஒன்றைத் தின்றால் இவ் வுலகமக்கள் பேசுவது
நன்றாகக் கேட்கும்; மற்றொன்றைவா யில்போட்டால்
மண்ணுலகக் காட்சியெலாம் மற்றிங் கிருந்தபடி
கண்ணுக் கெதிரிலே காணலாம், சொல்லிவிட்டேன்;
ஆதலால் மூலிகையின் ஆசை தணி" என்றான்.
"மோதிடுதே கேட்டபின்பு மூலிகையின் ஆசை" என்றாள்.
"என்னடி பெண்ணே நான் எவ்வளவு சொன்னாலும்
சொன்னபடி கேட்காமல் தோஷம் விளைக்கின்றாய்.
பெண்ணுக்கிது தகுமோ? வண்ணமலர்ச் சோலையிலே
எண்ணம் வேறாகி யிருக்கின்றேன் நான்" என்று
கண்ணை அவள் கண்ணிலிட்டுக் கையேந்தி நின்றிட்டான்.

இப்பகுதி முழுவதும் நாடகப்பாங்கில் அமைந்திருப்பது சொற்பரிமாற்றச் சங்கேதத்தின் சிறப்பு. என்றுரைத்தான், என்றான், என்றாள் என்பது போன்ற சொற்களை நீக்கிவிட்டால் மீதி யுள்ளவை நாடக உரையாடல் போலவே அமைகின்றன.

குறிப்பீட்டலகுச் சங்கேதங்கள் கொண்ட இவ்விவாதம், குப்பனைச் சற்றும் தந்திரம் அற்றவனாகவும், வஞ்சியைச் சாகசம் நிறைந்தவளாகவும் காட்டுகிறது. குப்பனின் வாதங்கள் எல்லாம் வஞ்சியால் எளிதில் முறியடிக்கப்படுகின்றன. அவள் ஒரு பிடிவாதக்காரி என குப்பனின் நோக்கிலிருந்து காட்டப்படுகிறது. அவளுக்கு மூலிகைகள் மீது ஏன் இவ்வளவு ஆசை ஏற்பட வேண்டும் என்பதற்கான சிறப்புக் காரணங்களும் தரப்படவில்லை, அதனைக் குப்பன் ஏன் இவ்வளவு மறுக்கவேண்டும் என்பதற்கான காரணங்களும் தரப்படவில்லை. இதனால் இக் கவிதைப் பகுதி பலவீனமடைகிறது.

குப்பன் வஞ்சி தொடர்பின் காலக்குறுமையை வைத்து நோக்கும்போது அவன் இரு தினங்களுக்கு முன்னால்தான் இந்த மூலிகைகளைப் பற்றி ஏதோ பொதுவாகச் சொல்லியிருப்பான் என்று தோன்றுகிறது. விசித்திரமான மூலிகைகள் அல்லது அற்புதசக்திவாய்ந்த மூலிகைகள் என்று சொல்லியிருக்கக்கூடும். அவற்றின் இயல்பை இன்றுதான் அவன் விளக்குகிறான். மூலிகைகளைப் பற்றி நன்கு அறிவதற்கு முன்பே, வஞ்சி, "மூலிகைகளைப் பறித்துக் கொடுத்தால் தான் உயிரோடிருப்பேன், இல்லாவிட்டால் உயிரைவிட்டுவிடுவேன்" என்ற மிரட்டலை (black mail) முன்வைக்கிறாள். இதில் அவள் பிடிவாதகுணம் வெளியாகிறது. சாதாரணப் பெண்களுக்கு நகைகள், பட்டாடைகள் போன்றவை எப்படியோ(ஆசைப்பொருள்கள்-fetish) அந்த உறவில் வஞ்சிக்கு இந்த மூலிகைகள் அமைகின்றன. அவளுடைய ஆசை வெறும் புத்தறிவு ஆர்வம்தானா, அல்லது பெண்களுக்கு ஆசைப்பொருட்கள் மீதுள்ள மோகமா என்பதும் விளக்கப்படவில்லை.

வேண்டாம் என்பதற்குக் குப்பன் சொல்லும் காரணங்களோ சிரிப்பை வரவழைக்கின்றன. 'நீ கல்லில் நடக்க வேண்டிவரும், கால் கடுக்கும்' என்கிறான், 'விலங்குகளால் துன்பம் நேரும்' என்கிறான். குழந்தைகள் ஏதாவது வேண்டும் என்று பிடிவாதம் செய்வார்கள். பண்டிகை நாட்களில் செய்யப்பட்ட தின்பண்டங்களை முதலில் தின்றுவிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள், அப்போது பெற்றோர் 'அப்படிச் செய்தால் சாமி கண்ணைக் குத்திவிடும்' என்று சால்ஜாப்பு சொல்லுவது வழக்கம். இங்கே குப்பனின் மறுப்புகள் அப்படித்தான் இருக்கின்றன. ஆனால் வஞ்சி குழந்தையில்லையே? இவற்றை வஞ்சி எளிதில் தகர்த்துவிடுகிறாள்.

'வாழ்வில் எங்கும் இடையூறுகள், சாவு போன்றவை உள்ளவைதான், வாருங்கள்' என்று அழைக்கும் வஞ்சிக்குக் குப்பன் 'சரி போகலாம்' என்றோ, 'வேண்டாம்' என்றோ பதில் சொல்லவேண்டும். அதற்கு பதிலாக அவன் அந்த மூலிகைகளின் பண்புகளை எடுத்துரைக்கத் தொடங்கிவிடுகிறான். இச்சமயத்தில் இது எதற்கு? மூலிகைகளைப் பறித்து வஞ்சியிடம் தரும் போது இவற்றைச் சொன்னாலும் பரவாயில்லை. வஞ்சியைத் தவிர்ப்பதற்குக் காரணமாக இது எப்படி அமையமுடியும்?


ஒருவேளை இப்பண்புகளைக்கேட்கும் வஞ்சி அவற்றின் அற்புதத் தன்மையைக் கேட்டு பயந்து தன் ஆசையைக் கைவிடலாம் என்று குப்பன் நினைப்பதுபோல் தோன்றுகிறது. அப்படியானால், அவளை அறிவில் குழந்தை என்பதற்கு மேலாகக் குப்பன் கருதவில்லை.

குழந்தைகள் வேண்டுமானால் பேய், பிசாசு, அற்புதம் என்றால் பயப்படக்கூடும். அறிவார்ந்த பெண்ணாகிய வஞ்சி எவ்விதம் பயப்படுவாள்? மானிட இயல்பின்படியே அவளுக்கு ஆவல் இன்னும் அதிகமாகிறது. உண்மையில் குப்பன் அவளை ஏன் அழைத்துச் செல்ல மறுக்கிறான் என்பது ஓரளவு குப்பனின் அடுத்த பேச்சில் புலனாகிறது.
"என்னடி பெண்ணே, நான் எவ்வளவு சொன்னாலும், சொன்னபடி கேட்காமல் தோஷம் விளைவிக்கின்றாய், பெண்ணுக்கு இது தகுமோ? வண்ணமலர்ச் சோலையிலே எண்ணம் வேறாகி இருக்கின்றேன் நான்" என்று காதற்பார்வையுடன் கையேந்துகிறான் குப்பன்.

இந்தக்கூற்றில் இருபகுதிகள் உள்ளன: 'நான் இப்போது உன்மேல் இச்சைகொண்டுள்ளேன். அதனால் உன்னை மூலிகைகள் இருக்குமிடத்திற்கு இட்டுச்செல்லமுடியாது' என்பது ஒன்று; 'வேண்டாம் என்று பலமுறை சொல்கிறேன், பெண்ணான நீ நான் சொன்னபடி கேட்காமல், தோஷம் ஏற்படுத்துகிறாய்' என்பது இரண்டாவது.

இதில் முதல்பகுதிதான் உண்மையான காரணத்தை வெளிப்படுத்துகிறது. அதை வஞ்சி பொருட்படுத்தத் தயாரில்லை. தலையணை மந்திரத்தால் தன் வேண்டுகோள்களை நிறைவேற்றிக்கொள்ள நினைக்கும் சாதாரணப் பெண்போலவே இங்கு அவள் செயல்படுகிறாள். மூலிகைகளைப் பெறக் குப்பனின் ஆசையைப் பயன்படுத்திக்கொள்கிறாள். (ஆனால் பேச்சில் தன்னை நியாயப்படுத்தும் வகையில் பெண்ணுரிமைவாதத்தை எடுத்துப்பேசுகின்றாள் என்பது வேடிக்கை, இது பின்னால் தொடர்கிறது).

தோஷம் என்றால் தவறு, குறை என்றும் பொருள்படும். பாரதிதாசன் பொதுவாக வடசொற்களை மிகுதியாக ஆள்வதில்லை. அறிந்துதான் இச்சொல்லைப் பயன்படுத்துகிறாரா என்பது கேள்வி. இங்கு வஞ்சி செய்வதை 'தோஷம் விளைக்கின்றாள்' என்று கூறவே முடியாது.

'மூலிகையின் அந்தரங்கம்' என்ற சொற்பிரயோகமும் குறையுடையதே. மனிதருக்குத்தான் அந்தரங்கம் உண்டு. மூலிகைக்கு இல்லை. அந்தரங்கம் என்பது உள்ளெண்ணம், மனத்தின் மறைவான பகுதி. இங்கே இரகசியம் என்ற சொல்தான் சரியான கவிதைப்பிரயோகமாகும்.
'கண்ணை அவள் கண்ணிலிட்டு' என்பது சற்றே வித்தியாசமான சொற்றொடராயிருப்பினும், தவறே. காதற்குறிப்புப் பார்வைக்கு கண்ணிலிடுதல் என்பது சரியானதொடரல்ல. கண்ணில் இடுதல் என்றால் மையிடுதல், எண்ணெயிடுதல், மருந்திடுதல் போன்றவை நினைவுக்கு வருகின்றன. தேவையற்ற இரண்டாம்நிலை அர்த்தங்களை (Connotations) கிளப்பும் தொடர் இது. தற்காலக் கவிஞர்கள் பலரும் சொற்களை அவற்றின் இரண்டாம்நிலை அர்த்தங்களை உணராமல் கையாள்கிறார்கள். பாரதிதாசன் காலத்திலேயே இக்குறை தொடங்கிவிட்டது.

இந்த அர்த்தஅலகு இராமாயணக் குறிப்புகள் சிலவற்றைக் கொண்டுள்ளது. தன்னோடு காட்டிற்கு வரவிழையும் சீதைக்கு 'கால்கடுக்கும், விலங்குகளால் ஊறுநேரும்' என்பன போன்ற காரணங்களைத்தான் இராமனும் சொல்கிறான்.
மேலும், வஞ்சியின் பிடிவாதம் கைகேயியின் பிடிவாதத்திற்கும், வஞ்சியிடம் குப்பன் கையேந்திநிற்பது கைகேயியிடம் இரக்கும் தசரதன் செயலுக்கும் ஒப்புமைகொள்கின்றன. இந்தத் தேவையற்ற அர்த்தக்குறிப்புகளை ஆசிரியர் விலக்கியிருக்கலாம்.

இதுவரை சாதாரண தளத்தில் நடந்துவந்த கதை, இப்போது தேவதைக்கதையின் வடிவத்திற்குமாறுகிறது.

உலகத்தில் உள்ளவற்றையெல்லாம் (பேசுவோர் அறியாமல்) கேட்கும் மூலிகை ஒன்று, (வேண் டாதவர்கள் பேச்சை ஒட்டுக்கேட்க அரசுகள் பயன்படுத்தும் 'telephone tapping' போல இல்லை?) அதேபோல் உலக மக்கள், தாங்கள் பார்க்கப்படுவதை அறியாமல், அவர்களைப் பார்க்கும் மூலிகை இன்னொன்று. இது அப்பட்டமான voyeurism. நம் அரசாங்கங்களிடம்/ ஆள்வோரிடம் இத்தகைய மூலிகைகள் இருந்தால் என்ன நிகழும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது. பாரதிதாசனுக்கு இவை தவறு என்று தோன்றவே இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. நல்லதோ கெட்டதோ எதற்குப் பயன்படுத்தினாலும் பிறர் அந்தரங்கத்தில் தலையிடுவது பெரும்தவறு. ஆனால் பெண்ணுரிமையெல்லாம் பேசப்போகும் வஞ்சிக்குக்
கூட இது தவறு என்பது புலனாகவில்லை!


Share this Story:

Follow Webdunia tamil