Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்ட்டிக் பகுதியில் கச்சா, எரிவாயு சுரண்ட முதலாளிய முதலைகளின் போட்டி- 2015-இலேயே ஆர்ட்டிக் கடல் பனியற்ற கடலாக மாறும் அபாயம்!

ஆர்ட்டிக் பகுதியில் கச்சா, எரிவாயு சுரண்ட முதலாளிய முதலைகளின் போட்டி- 2015-இலேயே ஆர்ட்டிக் கடல் பனியற்ற கடலாக மாறும் அபாயம்!
, திங்கள், 8 அக்டோபர் 2012 (17:24 IST)
FILE
1979ஆம் ஆண்டு ஆர்ட்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள், படலங்கள் பற்றிய செயற்கை கோள் தரவுகள் திரட்டப்பட துவங்கின. அப்போது இருந்த கடல்பனியளவு தற்போது பெருமளவு குறைந்து வெகு குறைவான பனிப்பிரதேசமே உள்ளது என்று வானிலை ஆய்வு விஞ்ஞானிகள் சமீபத்தில் எச்சரித்திருந்தனர்.

ஆர்ட்டிக் பனி உருகி வருகிறது ஆர்ட்டிக் முழுதுமே பனியற்ற பிரதேசமாக மாறிவிடும் அபாயம் இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளில் நிகழும் என்ற எச்சரிக்கை தற்போது செல்லுபடியாகாது. அடுத்த சில ஆண்டுகளிலேயே பனி முழுதும் கரைந்து உருகி ஆர்ட்டிக் பனியற்ற பிரதேசமாக மாறிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பனிப்பிரதேசங்கள் அதிகமாக இருந்தால், பரவலாக இருந்தால் சூரிய சக்தியை அது மீண்டும் விண்ணிற்கே பிரதிபலித்து பூமியின் உஷ்ண நிலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். பனி உருகிவிட்டால் அதனடியில் உள்ள இருண்ட கடல்நீர் வெளியே தெரியும் ஆனால் பனியில்லாத நீர்ப்பகுதி என்பதால் சூரிய சக்தியில் 90 சதவீதத்தை அது உறிஞ்சிக்கொள்ளும். இதனால் பூமி வெப்பமடைதல் மேலும் உக்கிரமடையும்.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கடல் பௌதீக விஞ்ஞானி பீட்டர் வதாம்ஸ் இது குறித்து எச்சரிக்கையில், ஆர்ட்டிக் பகுதி 2015ஆம் ஆண்டிலேயே முழுதும் பனியற்ற பிரதேசமாகிவிடும் என்று எச்சரித்துள்ளார். இதனால் ஏற்படும் வெப்பத்தாக்க விளைவு இதுகாறும் மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகள் இந்த பூமிக்குச் செய்த தீங்கை விட அதிகமிருக்கும் என்று கூறியுள்ளார்.

நாசா விஞ்ஞானியும் பிரபல சுற்றுச்சூழல் பாதுகாப்பு தீவிர கருத்தியலாளருமான ஜேம்ஸ் ஹான்சன் இது பற்றி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளபோது, "நாம் புவியுலக நெருக்கடி நிலையில் இருக்கிறோம்" என்று கூறியுள்ள்தையும் நாம் நினைவு கூரத்தக்கது.

2007ஆம் ஆண்டுதான் ஐ.நா.வின் வானிலை மாற்றத்திற்கான அனைத்து நாடுகள் குழு ஆர்ட்டிக் கடல் பகுதியில் பனி மறைவதற்கு 2,100ஆம் ஆண்டு வரை ஆகும் என்று கூறியிருந்தது. ஆனால் அது இப்போதைய உண்மைகளின் படி உண்மையல்ல.

பனி உருகுவதால் சூரிய சக்தியை உறிஞ்சும் நடவடிக்கையால் வெளியாகும் கரியமில வாயு வெளியேற்றம் மட்டுமல்லாமல் உறைபனியில் புதைந்திருக்கும் மீத்தேன் எரிவாயுவின் வெளியேற்றமும் எதிர்பார்த்ததைவிட அதிகம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உறைபனியில் புதைந்துள்ள மீத்தேனில் 10% விண்வெளிக்கு சென்றால் போதுமானது. இதுவரை மனித உற்பத்தி நடவடிக்கைகளினால் ஏற்பட்டுள்ள புவிவெப்பமடைதலை விட 10 மடங்கு அதிகம் புவி வெப்பமடைதல் துரிதமடையும் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமீஸ் நாம் தெரிவித்துள்ளார்.

புவி வெப்பமடைதல், கடல் நீர்மட்டம் உயர்தல், இதனால் ஏற்படும் புயல், மழை, வெள்ளம், மற்றும் வறட்சி ஆகியவற்றினால் 2030ஆம் ஆண்டுவாக்கில் சுமார் 10 கோடி உயிரிழப்பர் என்று ஒரு அறிக்கை சமீபத்தில் எச்சரித்திருந்தது.

மேலும் 2030 முதல் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் கடுமையான வானிலை மாற்றங்களுக்கு பலியாவார்கள் என்றும் சுற்றுச்சூழல்வாதிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த சாவுகளில் 90% வளரும் மற்றும் ஏழைநாடுகளிலேயே ஏற்படும் என்பதும் கூறப்பட்டுள்ளது.

பூமியை அழிக்கும் பெரு மூலதனம்!
ஆர்ட்டிக் பகுதியில் 90 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பதாக கூறியுள்ளது. அதாவது பூமியில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத 13% கச்சா எண்ணெய் இருப்பு, 30% எரிவாயு இருப்பு!! இப்போது போட்டி தொடங்கியது. ஷெல் நிறுவனம் ஏறகனவே இதனைச் சுரண்ட திட்டம் ...
webdunia
இவையெல்லாம் தெரிந்தும் அரசுகள் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? காரணம் அரசியல் நடைமுறையை எரிசக்தி கார்ப்பரேட் முதலை முதலாளியம் விலை கொடுத்து வாங்கிவிட்டது என்று கிரீன்பீஸ் சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத் தலைவர் குமி நாய்டூ கூறியுள்ளார்.

மொத்தம் மொத்தமாக உயிர்பலிவாங்கும் வானிலை மாற்றத்திற்குக் காரணமாகும் கார்ப்பரேட் எரிசக்தி, எரிவாயு நிறுவனங்கள் சர்வதேச சுற்றுசூழல் பேச்சுவார்த்தைகளில் உள்ளே புகுந்து குழப்பிவிடுகிறது. நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கார்பன் வெளியேற்றத்தை தடுக்கும் எந்த வித ஆரோக்கியமான முடிவையும் வரவிடாமல் தடுத்து வருகிறது.

இந்த கார்ப்பரேட் முதலாளியங்கள் பல்வேறு உத்திகள் மூலம் சுற்றுசூழல் விஞ்ஞானிகள் அளிக்கும் தரவுகளை, முடிவுகளை தடுத்து வருகின்றனர். இந்த உண்மைகளை மற்ற பணம் கொடுத்து வாங்கிய விஞ்ஞானிகள் மூலம் மறுக்கவைத்து பொதுமக்களை குழப்புகின்றனர். அரசுகளின் முடிவுகளில் பெரிய அளவில் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தாக்கம் செலுத்துகின்றன.

ஆர்டிக் பனி படு விரைவாக உருகிவருகிறது என்ற எச்சரிக்கைகள் ஒலித்து வரும் அதே வேளையில்தான் பிரிட்டன் மேல்சபையின் சுற்றுசூழல் தணிக்கைக் குழு ஆர்ட்டிக் பகுதிகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தோண்டும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.

இதுவரை எடுக்கப்படாத கச்சா மற்றும் எரிவாயுவிற்காக இப்பகுதிகளில் உலகை சுரண்டிவரும் கார்ப்பரேட் முதலைகள் இப்போது இங்கும் கூடி வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள புவியியல் சர்வே மையம் ஆர்ட்டிக் பகுதியில் 90 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பதாக கூறியுள்ளது. அதாவது பூமியில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத 13% கச்சா எண்ணெய் இருப்பு, 30% எரிவாயு இருப்பு!! இப்போது போட்டி தொடங்கியது. ஷெல் நிறுவனம் ஏறகனவே இதனைச் சுரண்ட திட்டம் வகுத்து விட்டது.

மேலும் பனி உருகி நீர் உள்ள பகுதிகளில் கப்பல் போக்குவரத்தும் தொடங்குவதால் கச்சா, எரிவாயுவை கொண்டு வருவதிலும் செலவு மிச்சம்.

கிரீன்லேண்ட் பனிமுகடுகள் உருகுவதை நினைத்து கார்ப்பரேட் நிறுவன முதலைகள் இப்பொழுதே நாக்கைச் சப்புக் கொட்டத் தொடங்கிவிட்டது. கிரீன்லேண்ட் உள்நாட்டு மைனிங் நிறுவனமான நுனாம் மினரஸ் அதிபர் ஓல் கிரிஸ்டியன்சென் "என்னைப் பொருத்தவரை பனி முழுதும் மறைந்தால் நல்லதுதான்' என்று கூறியுள்ளதும் பத்திரிக்கை செய்திகளில் பதிவாகியுள்ளது.

இதையெல்லாம் அரசுகளுக்கு யார் எடுத்துரைப்பது? கார்ப்பரேட் பணவெறி பிடிமானத்திலிருந்து, சுரண்டலிலிருந்து பூமியை யார் காப்பாற்றுவது? பூவுலகில் நாம் வாழும் வாழ்க்கை முறை நம் முன்னே வைக்கும் மிக முக்கியமான கேள்வியாகும் இது!

Share this Story:

Follow Webdunia tamil